வட கொரிய ரொக்கெட் ஏவுதளம் மறுசீரமைப்பு

செய்மதி படங்கள் அம்பலம்

வட கொரியா தனது ரொக்கெட் ஏவுதளத்தை மறுசீரமைப்புச் செய்து வருவதாக புதிய செய்மதி படங்களை ஆதாரமாகக் கொண்டு செய்தி வெளியாகியுள்ளது.

கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுத களைவு தொடர்பில் அமெரிக்க மற்றும் வட கொரிய தலைவர்களுக்கு இடையில் உடன்பாடு இன்றி முடிவடைந்த பேச்சுவார்த்தைக்கு இரண்டு தினங்களுக்கு பின்னரே இந்த செய்மதி படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

செய்மதி ஏவுதளம் மற்றும் எஞ்சின் சோதனைக்கு பயன்படுத்தப்பட்ட டொங்சான் ரீ தளத்தை அகற்றும் செயற்பாடுகள் கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டபோதும் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் ஸ்தம்பித்ததை அடுத்து அது நிறுத்தப்பட்டது.

இந்த ஏவுதளத்தை அகற்றும் வாக்குறுதி வட கொரிய மற்றும் அமெரிக்கா இடையிலான நம்பிக்கையை வலுப்படுத்துவதாக இருந்தது.

மறுபுறம் அணு ஆயுத களைவுக்கான நடவடிக்கைகளை வட கொரியா முன்னெடுக்காவிட்டால் அதன் அந்த நாடு மேலும் தடைகளுக்கு முகம்கொடுக்க வேண்டி இருக்கும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.

சோஹே தளத்தில் உள்ள டொங்சான் ரீ ரொக்கெட் ஏவுதளத்தில் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் வேகமாக முன்னேற்றம் கண்டு வருவதை காட்டும் செய்மதி ஆதாரங்களை அமெரிக்காவின் பல நிபுணர் குழுக்கள் வெளியிட்டிருப்பதோடு, தென் கொரிய உளவுப் பிரிவும் இதனை உறுதி செய்துள்ளது.

சோஹே தளம் 2012 ஆம் ஆண்டு தொடக்கம் வட கொரியாவின் பிரதான செய்மதி ஏவுதளமாக இயங்கி வருகிறது. அதேபோன்று அமெரிக்கா வரை தாவக்கூடிய ஏவுகணைகளின் எஞ்சின் சோதனைகளும் இங்கு இடம்பெறுகின்றன.

Thu, 03/07/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை