மாகாண சபை தேர்தல்களை தாமதமின்றி நடத்த வேண்டும்

மாகாண சபைகளுக்கான தேர்தல்களை அரசாங்கம் மேலும் கால தாமதப்படுத்தாது விரைவில் நடத்த வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தினார். 

உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார். 

மாகாண சபைகளில் மக்களின் பிரதிநிதிகளின் பங்கை மாகாண ஆளுநர்களால் முன்னெடுக்க முடியாது என்றும் இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டினார். 

தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,  

பல்வேறு மாகாணங்களில் உள்ள மக்கள் இறைமையுடன், சுய மரியாதையுடன் வாழ்வதற்கான உரிமையையளிக்கும் வகையில் மாகாண சபைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான நிலையில், தமிழ் பேசும் மக்கள் வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உட்பட சகல மாகாணங்களிலும் விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். மேலும் காலதாமதப்படுத்தாமல் தேர்தல்களை அரசாங்கம் கூடிய விரைவில் நடத்த வேண்டும் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுதியான நிலைப்பாடாகும்.  

மத்திய அரசாங்கத்தினால் எவ்வாறான அதிகாரங்கள் பகிரப்பட்டிருந்தாலும், அவ்வாறான அதிகாரப் பகிர்வுகள் ஜனநாயக ரீதியில் அமைந்திருக்க வேண்டும். மாகாண சபைகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டு, அவற்றுக்கான உறுப்பினர்கள், முதலமைச்சர்கள் தெரிவுசெய்யப்படுவதுடன், மாகாண அமைச்சுக்களும் செயற்பட வேண்டும். மக்களின் வாக்குகளால் தெரிவுசெய்யப்படாவிட்டால் அங்கு ஜனநாயக ஆட்சி இருக்காது. 

மக்களின் பிரதிநிதிகளின் பங்கினை மாகாண ஆளுநர்களால் முன்னெடுக்க முடியாது. எனவே எந்தவு விரைவில் தேர்தலை நடத்த முடியுமோ அந்தளவு விரைவில் மாகாண சபைகளுக்குத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என அவர் மேலும் வலியுறுத்தினார். 

(ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்) 

 
Fri, 03/29/2019 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை