ஐ.நா மனித உரிமைகள் பேரவை; மேலும் கால அவகாசம் கோருகிறது இலங்கை

ஐ.நா ஆணையரின் சகல விடயங்களையும் அரசு ஏற்க முடியாது

2017ஆம் ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கால அவசாசம் கோரியதைப் போன்று மேலும் இரண்டு வருட கால அவகாசத்தைக் கோரி யோசனையொன்றை அரசாங்கம் சமர்ப்பித்திருப்பதாக வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பில் முன்வைத்திருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சகல விடயங்களையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லையென்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜெனீவாவில் நடைபெற்றுவரும் 40ஆவது ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் இலங்கை விவகாரம் கலந்துரையாடப்படவுள்ள நிலையில், இலங்கை தொடர்பான பிரேரணையிலிருந்து அரசாங்கம் விலக வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தினார். 27/2 நிலையியற் கட்டளையின் கீழ் கேள்வி எழுப்பும் போதே இந்த விடயத்தை அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்குப் பதிலளிக்கும் போதே வெளிவிவகார அமைச்சர் திலக் மகரப்பன மேற்கண்ட விடயத்தைத் தெரிவித்தார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் 2017ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் நாட்டின் இறைமைக்கோ அல்லது ஆட்புல ஒருமைப்பாடுக்கோ தீங்கிழைக்கும் வகையிலான எந்த விடயங்களும் இணங்கிக் கொள்ளப்படவில்லை. அதேபோன்றதொரு பிரேரணையொன்றே இம்முறையும் முன்வைக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதாக இணங்கிய விடயங்களை செயற்படுத்த மேலும் இரண்டு வருடங்களுக்கான கால அவகாசத்தைக் கோருவதே இதன் பிரதான நோக்கமாகும் என்றும் அமைச்சர் கூறினார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இணங்கிய விடயங்களை நிறைவேற்றாமையால் இலங்கைக்கு எதிராக பொருளாதார கட்டுப்பாடுகளை விதிக்கும் நிலையே 2014ஆம் ஆண்டு காணப்பட்டது. எனினும், 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தினால் இந்நிலைமைகளை மாற்ற முடிந்தது. ஆட்சி மாற்றத்தின் பின்னர் உள்ளக விடயங்களை உள்நாட்டிலேயே கையாழ்வதற்கான வாய்ப்புக் கிடைத்தது.

இதற்காக சர்வதேசத்தின் அங்கீகாரத்தையும் பெறமுடிந்தது. ஆட்சி மாற்றத்தின் பின்னர் மனித உரிமைகளை உறுதிப்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இவற்றின் வெளிப்பாடாக 2017ஆம் ஆண்டு அரசாங்கத்தின் உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கு மேலும் இரண்டு வருட கால அவசகாம் கோரி பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

இவ்வாறு நிறைவேற்றப்பட்ட பிரேரணையானது நாட்டின் இறைமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த விடயங்களையும் உள்ளடக்கவில்லை.

இதுபோன்றதொரு பிரேரணைக்கான யோசனையே இம்முறை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் இறைமைக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என்றும் அமைச்சர் திலக் மாரப்பன மேலும் குறிப்பிட்டார்.

ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்

Fri, 03/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை