இலங்கைக்கு மேலும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம்

*புதிய பிரேரணைக்கு இலங்கையும் அனுசரணை
*ஜெனீவாவில் வாக்ெகடுப்பின்றி பிரேரணை நிறைவேற்றம்

ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் மற்றுமொரு பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தப் பிரேரணைக்கு இலங்கை அரசாங்கமும் இணை அனுசரணை வழங்கியுள்ளது.

30/1 பிரேரணையில் இணங்கப்பட்ட விடயங்களை நிறைவேற்றுவதற்கு 34/1 பிரேரணையில் வழங்கப்பட்ட இரண்டு வருட காலத்தை மேலும் இரண்டு வருடங்களால் அதிகரிக்கும் வகையில் இந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதற்கமைய இலங்கை அரசாங்கம் தனது உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கு 2021ஆம் ஆண்டு வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகளை மேலும் காலதாமதப்படுத்தாது நிறைவேற்ற வேண்டும் என பல நாடுகள் இலங்கைக்கு அழைப்புவிடுத்திருந்த நிலையில் நேற்றையதினம் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு ஏகமனதாக ஆதரவளித்தன. எந்தவொரு நாடும் எதிர்ப்புத் தெரிவிக்காததால் வாக்கெடுப்பின்றி இப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.

நேற்றுமுன்தினம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விவகாரம் விவாதிக்கப்பட்டது. நீண்டகால பிரச்சினைக்கு விரைவில் முடிவொன்றைக் காண்பதற்காக கால வரையறையொன்றை வழங்குவது தோல்வியை அளிக்கலாம் என்றும், நிலைமாற்றுகால நீதியை நிலைநாட்டுவதற்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகமொன்று இலங்கையில் அமைக்கப்படத் தேவையில்லையென்றும் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்திருந்தார்.

அது மாத்திரமன்றி இலங்கையின் நீதித்துறையில் இலங்கை பிரஜைகள் அல்லாதவர்களை இணைத்துக் கொள்வது அரசியலமைப்பு ரீதியாகவும், சட்டரீதியாகவும் முடியாத விடயமாகும் என்பதையும் அவர் தெளிவாகச் சுட்டிக்காட்டியிருந்தார்.

பொறுப்புக்கூறல் விடயத்தில் மந்தகதியிலான செயற்பாடுகள் இருந்தாலும் காணாமல்போனோர் அலுவலகத்தை அமைப்பது உள்ளிட்ட விடயங்களை சர்வதேச நாடுகள் வரவேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

புதிய பிரேரணையில் இலங்கை அரசாங்கம் சில மாற்றங்களைச் செய்யவிருப்பதாக முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தபோதும் எந்தவிதமான மாற்றமும் இன்றி இலங்கை இப்பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கியுள்ளது. புதிய பிரேரணையான 40/1க்கு இலங்கை உட்பட 33 நாடுகள் இணை அனுசரணை வழங்கியுள்ளன.

மனித உரிமை விடயத்தில் இலங்கை முன்னெடுத்திருக்கும் நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையொன்றை 43ஆவது பேரவைக் கூட்டத் தொடரில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் எழுத்துமூலம் சமர்ப்பிக்கவேண்டும் என்றும், அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் நடத்தப்படும் கலந்துரையாடல்களைத் தொடர்ந்து 46ஆவது பேரவைக்கூட்டத் தொடரில் விரிவான அறிக்கையொன்றை அவர் கையளிக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உண்மையைக் கண்டறிதல், பொறுப்புக்கூறல், நல்லிணக்கத்தை உருவாக்கல் போன்ற இலங்கையின் செயற்பாடுகளுக்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் தொடர்ந்து தொழில்நுட்ப உதவி உள்ளிட்ட உதவிகளை வழங்க வேண்டும் என்றும் இலங்கை அரசாங்கத்துக்கு ஆலோசனைகளை வழங்கி செயற்பாடுகளைப் பலப்படுத்த வேண்டும் என்றும் புதிய பிரேரணையில் இணங்கப்பட்டுள்ளது.

காணாமல் போனோர் அலுவலகம் அமைக்கப்பட்டு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டிருக்கும் செயற்றிட்டங்கள் இந்தப் பிரேரணையில் வரவேற்கப்பட்டிருப்பதுடன், ஐ.நாவுக்கு வழங்கிய உறுதிமொழிகளை விரைந்து நடைமுறைப்படுத்துவது அவசியம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Fri, 03/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை