ஐ.நா உறுதிமொழிகளை அமுல்படுத்த காலவரையறை செயல்பாடு அவசியம்

* சர்வதேச சமூகம் வலியுறுத்தல்

*மனித உரிமைகள் தொடர்பில் இலங்கையின் நடவடிக்ைகக்கு பாராட்டு

மனித உரிமை நிலைமைகளை முன்னேற்றுவதற்கு அரசாங்கம் முன்னெடுத்திருக்கும் நடவடிக்கைகளை வரவேற்றுள்ள சர்வதேச சமூகம், ஐ.நாவில் வழங்கிய உறுதிமொழிகளை நடைமுறைப்படுத்துவதற்கு கால வரையறையொன்றை நிர்ணயித்து அதன் அடிப்படையில் செயற்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளன.

ஜெனீவா ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நேற்றையதினம் நடைபெற்ற இலங்கை விவகாரம் குறித்த விவாதத்தில் கலந்துகொண்ட ஐரோப்பிய ஒன்றியம், ஜேர்மன், இந்தியா, பாகிஸ்தான், பெல்ஜியம், கனடா, பிரித்தானியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளன.

அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட காணாமல் போனோர் அலுவலகம் அனைத்து நாடுகளாலும் வரவேற்கப்பட்டதுடன், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 பிரேரணையில் இணங்கிய விடயங்களை முழுமையாக நடைமுறைப்படுத்துவது துரிதப்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

கனடா சார்பில் உரையாற்றிய அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி,

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணணை நடத்துவதற்கான நீதிப்பொறிமுறையொன்று அமைக்கப்பட வேண்டும் என்றும் அதனைக் கண்காணிப்பதற்கு விசேட சபையொன்று அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். உள்ளக சட்டத்தின் ஊடாக குற்றவாளிகள் தப்பிவிடாதிருப்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதுடன், ஐ.நாவில் இணங்கிய விடயங்கள் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இதேவேளை, தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் 13ஆவது திருத்தச்சட்ட மூலம் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும். 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட சர்வதேச சமூகத்துக்கு இலங்கை வழங்கிய உறுதிமொழிகளை இலங்கை நிறைவேற்ற வேண்டும் என இந்தியா தெரிவித்தது.

தமிழ் சமூகம் உள்ளிட்ட சகல சமூகங்களும் சமத்துவத்துடனும் அமைதியான முறையிலும் வாழ்வதற்கான சூழலை அரசாங்கம் உருவாக்க வேண்டும். இதற்கான சகல ஒத்துழைப்புக்களையும் இந்தியா இலங்கைக்கு வழங்கும் என்றும் இந்தியப் பிரதிநிதி உறுதியளித்தார்.

யுத்தம் முடிவடைந்து 10 வருடங்கள் முடிவடையும் சூழ்நிலையில் நிலைமாற்றுகால நீதியை மேலும் காலதாமதப்படுத்தாது நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜேர்மனி கேட்டுக்கொண்டது.

மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கு எடுக்கப்படும் முயற்சிகள் கைவிடப்பட வேண்டும் என்றும் ஜேர்மனி, ஐரோப்பிய ஒன்றியம், பெல்ஜியம் உள்ளிட்ட பல நாடுகள் கோரிக்கை விடுத்திருந்தன.

நமது நிருபர்

 

Thu, 03/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை