விவசாயத்துறை முழுமையாக மறக்கப்பட்ட பட்ஜட்

அரசாங்கம் முன்வைத்திருக்கும் 2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டமானது வரிகளால் நிரம்பிய வரவுசெலவுத்திட்டம் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

இதனால் மக்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்களை எதிர்வரும் சில நாட்களில் அறிந்துகொள்ளக்கூடியதாகவிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். நிதியமைச்சர் மங்கள சமரவீர நேற்று முன்தினம் முன்வைத்த வரவுசெலவுத்திட்டம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைக் கூறினார்.

பாதுகாப்புத் தரப்பினருக்கான கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளது. எனினும், கொமாண்டர்கள் தரத்தில் உள்ளவர்களுக்கு வெறுமனே 300 ரூபா என்ற சிறியதொரு தொகையே அதிகரிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தில் ஏனைய தரப்பினருக்கு எந்தவிதமான சம்பள அதிகரிப்பும் இல்லை. அத்துடன் பொலிஸாரை அவர்கள் கவனத்தில் கொள்ளாமல் விட்டுள்ளனர்.

விவசாயத்துறையை முழுமையாக மறந்துவிட்டனர். அதில் எந்தவித யோசனைகளோ முன்வைக்கப்படவில்லை. அரசாங்கம் முன்வைத்துள்ள வரிச் சுமையைச் சொலுத்தும்போது பாருங்கள் அது மக்களை எந்தளவுக்குப் பாதித்துள்ளது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

ஒட்டுமொத்தமாகக் பார்க்கும்போது வரியினால் நிரம்பிய வரவுசெலவுத்திட்டத்தை அரசாங்கம் முன்வைத்துள்ளது. இதனைத் தோற்கடிப்போம் என்றும் அவர் மேலும் கூறினார்.

ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்

Thu, 03/07/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை