கிம் ஜொங் நாம் கொலை: சந்தேகப் பெண் விடுதலை

வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னின் ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜோங் நாமின் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பெண்களில் ஒருவரான இந்தோனேசியாவைச் சேர்ந்த சித்தி ஆயிஷா அந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் மீதான குற்றச்சாட்டை மீட்டுக்கொள்ளும்படி தங்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாக, அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

ஆனால், அதற்கான காரணம் வெளியிடப்படவில்லை. அரசுத் தரப்பு வழக்கறிஞர்களின் வேண்டுகோளுக்கு இணங்க சித்தி ஆயிஷா மீதான குற்றச்சாட்டு மீட்டுக்கொள்ளப்பட்டு அவர் விடுவிக்கப்பட்டார். 2017 ஆம் ஆண்டு குவாலாலம்பூர் விமானநிலையத்தில் வைத்து கிம்மின் மீது இரசாயன தாக்குதல் நடத்தியது தொடர்பில் சித்தி ஆயிஷா மற்றும் வியட்னாம் நாட்டைச் சேர்ந்த டோஸ் தி ஹுவாங் ஆகிய இரு பெண்கள் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

விமான நிலையத்தில் அமர்ந்திருந்த கிம்மின் முகத்தில் 2 பெண்கள் தடை செய்யப்பட்ட ‘வி எக்ஸ்’ என்ற இரசாயன விசத்தை வீசி கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

எனினும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதாக நினைத்தே இதனைச் செய்ததாக இருவரும் மறுத்து வந்தனர். கிம் ஜோங் நாம் வட கொரியாவில் இருந்து வெளியேறி தலைமறைவாகவே வாழ்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tue, 03/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை