ஐ. நா யோசனைகளால் எந்தப் பாதிப்புமில்லை

ஜெனீவா மனித உரிமை ஆணைக்குழுவின் யோசனைகளால் நாட்டுக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது என சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இராணுவத்தினர் தொடர்பில் தற்போது பேசிவரும் எதிர்க்கட்சியினர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் தான் அதி உயர் பதவியிலிருந்த இராணுவத் தளபதி சிறையிலடைக்கப்பட்டார் என்பதை உணர்ந்து பேச வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். இலங்கை இணை அனுசரணை வழங்கியுள்ளதை எதிர்ப்போர், நாட்டை மோசமான நிலைக்குத்தள்ளி சர்வதேச ரீதியாக நாடு புறக்கணிப்புக்குள்ளாகுவதற்கு வழி வகுத்த தமது செயற்பாடுகள் தொடர்பில் சிந்திக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று பொது தொழில் முயற்சிகள், டிஜிட்டல் தொழில்நுட்பம் ---- சட்டம் மற்றும் விஞ்ஞான ஆராய்ச்சி அமைச்சுக்கள் மீதான நிதியொதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

எமது நாட்டுக்கு எதிராக சர்வதேசமும் செயற்பட்ட போது நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கி நாமே அந்த நிலைமையைச் சரி செய்தோம். அதற்காக காத்திரமான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள நேர்ந்தது.

ஐ. நா. மனித உரிமை ஆணைக்குழுவின் இலங்கை தொடர்பான யோசனைகள் கடந்த மூன்று வருட காலமாக அரசாங்கம் முன்னெடுத்துவரும் செயற்பாடுகளை வரவேற்கும் விதமாகவே அமைந்துள்ளது.

நாம் சர்வதேசத்தைப் புறக்கணித்து செயற்பட முடியாது. சர்வதேசத்துடன் இணைந்த செயற்பாடுகள் எமது நாட்டுக்கு மிக அவசியமானது. இலங்கையின் இறைமை, பாதுகாப்பு, ஒருமைப்பாடு தொடர்பான செயற்பாடுகள் வடக்கு, கிழக்கில் காணி விடுவிப்பு, காணாமற் போனோர் தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள செயற்பாடுகளை அந்த ஆணைக்குழு வரவேற்றுள்ளதுடன் பாராட்டியுள்ளது.

அண்மையில் நாம் நடத்திய சர்வகட்சிக் கூட்டத்தில் நிறைவேற்று ஜனாதிபதி முறை புதிய தேர்தல்முறை தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்படாவிட்டாலும் மாகாண சபைகளை பலப்படுத்தும் வகையில் அதிகாரப்பகிர்வு தொடர்பில் இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது. அரசாங்கம் அதற்கிணங்கவே செயற்படுகின்றது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம், எம். எஸ். பாஹிம்

Wed, 03/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை