காசா – இஸ்ரேல் இடையில் மீண்டும் பரஸ்பரம் தாக்குதல்

யுத்த நிறுத்த அறிவிப்புக்கு மத்தியில் பலஸ்தீன போராளிகள் இஸ்ரேல் மீது கடந்த செவ்வாய்கிழமை பின்னேரம் வான் தாக்குதல்கள் நடத்தியதை அடுத்து இஸ்ரேல் இராணும் பதில் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இஸ்ரேலில் எதிர்வரும் ஏப்ரல் 9 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறும் தீர்க்கமான தருணத்தில் காசா மீது மேலும் இராணுவ நடவடிக்கைகள் எடுப்பது குறித்து இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்து சில மணி நேரத்திலேயே அங்கு மீண்டும் மோதல் வெடித்துள்ளது.

காசாவில் இருந்து நீண்ட தூரம் தாக்கும் ரொக்கெட் ஒன்று கடந்த திங்கட்கிழமை டெல் அவிவுக்கு அருகில் வீடொன்றை தாக்கியதை அடுத்தே தற்போதைய மோதல் வெடித்தது.

இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் இராணுவம் காசா பகுதி மீது வான் தாக்குதல்களை நடத்தியதோடு தொடர்ச்சியாக காசாவில் இருந்து ரொக்கெட் குண்டுகள் வீசப்பட்டன.

இந்த தாக்குதல்களில் உயிரிழப்புகள் இடம்பெறவில்லை.

இந்நிலையில் எகிப்து மத்தியஸ்தத்தில் யுத்த நிறுத்தம் எட்டபட்டதாக ஹமாஸ் அறிவித்ததைத் தொடந்து செவ்வாய்கிழமை காசாவில் அமைதி திரும்பியது. எனினும் செவ்வாய் இரவு எட்டு மணி அளவில் காசாவில் இருந்து ரொக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் குறிப்பிட்டது.

அஷ்கலொனுக்கு அருகில் விழுந்த ரொக்கெட் தனி நபர்களால் இயக்கப்பட்டது என காசாவை ஆளும் ஹமாஸ் குறிப்பிட்டது.

இந்நிலையில் கான் யூனிசில் உள்ள ஹமாஸ் இராணுவத் தளம் ஒன்றின் மிது வான் தாக்குதல் நடத்தப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

மேலும் பல ஹமாஸ் இலக்குகள் மீது தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

பதற்ற சூழலை அடுத்து தனது அமெரிக்க விஜயத்தை பாதியில் நிறுத்திக் கொண்டு இஸ்ரேல் திரும்பிய நெதன்யாகு, “நாம் பல விடயங்களுக்கு தயாராகி வருகிறோம்” என்று முன்னதாக குறிப்பிட்டிருந்தார்.

Thu, 03/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை