கட்டணம் செலுத்தும் மக்கள் மின்சாரத்தை விரயம் செய்வதில்லை

 அரசின் சூரிய சக்தி மின் திட்டம் என்னவானது?

மின்சாரத்தை வீண்விரயம் செய்வது யார்? பொது மக்களா, அரச நிறுவனங்களா மிக அதிகளவில் வீண் விரயம் செய்கின்றார்கள்? என்ற கேள்வியை கேட்டுப் பாருங்கள். கட்டணம் செலுத்தும் பொதுமக்கள் மின்சாரத்தை ஒருபோதும் வீண்விரயம் செய்வதில்லையென ஈ.பி.டி.பி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சு, மின்வலு,வலுசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சு ஆகியவற்றின் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

இந்த நாட்டில் மின் தட்டுப்பாடு ஏற்படும் எனத் தெரிந்து கொண்டும் அதைப் பற்றிக் கவலை கொள்ளாமல் இப்போது இரண்டு மின் குமிழ்களை அணைத்து விடுமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்துகின்றீர்கள். வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பொறுத்தவரையில், சமுர்த்திகூட இன்றிய நிலையில் பல ஆயிரம் குடும்பங்கள் வறுமை நிலையில் இருக்கின்றன. இவர்களில் மின்வசதி இன்றிய மக்களும் வாழ்கிறார்கள். மின் வசதி இருக்கின்ற மக்களும் நாளாந்தம் ஒன்று அல்லது, இரண்டு மின் குமிழ்களையே பயன்படுத்தக்கூடிய நிலையிலேயே இருக்கிறார்கள். இதே நிலையில்தான் இந்த நாட்டில் பெரும்பாலான மக்களின் நிலைமைகள் இருக்குமென்றே கூற முடியும். அதையும் அணைத்துவிட்டு, இருட்டில் இருக்கச் சொல்கிறீர்களா? என எமது மக்கள் கேட்கின்றனர்.

குளிரூட்டிகளை செயற்படுத்த வேண்டாம் என்கிறீர்கள். இந்த நாட்டில் எத்தனை வீடுகளில் குளிரூட்டிகள் பொருத்தப்பட்டுள்ளன? என்ற கேள்வி எழுகின்றது. இன்றிருக்கின்ற விலைவாசிகள், வரி விதிப்புகள் காரணமாக எமது மக்களில் பெரும்பாலானவர்களது வயிறுகள் பற்றி எரிகின்ற நிலையில் எமது மக்களின் வயிறுகளை தளர்விப்பதற்கே எவ்விதமான ஏற்பாடுகளும் இல்லாத நிலையில் மின்சாரத்தை வீண்விரயம் செய்து அதற்கான பணத்தைக் கட்டுவதற்கு அவர்கள் முன்வருவார்களா? அவர்களிடம் அத்தகைய பொருளாதார வசதிகள் இருக்கின்றதா? என கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அரச நிறுவனங்களை எடுத்துக் கொண்டால், அநேகமானவற்றில் மின் பாவனையானது மிக அதிகளவில் வீண் விரயம் செய்யப்பட்டு வருகின்றது. இதை தடுப்பதற்கு நீங்கள் எடுக்கின்ற நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து ஆராய்ந்து பாருங்கள். தேசிய மின் கட்டமைப்பை நிறுத்திவிட்டு, மின் பிறப்பாக்கிகளை பயன்படுத்துமாறு கூறுகிறீர்கள். எரிபொருள் உங்களுக்கு இலவசமாக இறக்குமதியாகின்றதா? எனக் கேட்க விரும்புகின்றேன்.

தேசிய மின் கட்டமைப்புக்கு புறம்பாக சூரிய சக்தி வலுவைப் பயன்படுத்துவது தொடர்பில் கடந்த வரவு – செலவுத் திட்டத்தின்போது பிரஸ்தாபிக்கப்பட்டது. குறைந்த அளவில் மின் பாவனையை மேற்கொள்கின்ற வீடுகள் இனங்காணப்பட்டு, இரண்டு எல். ஈடி மின்குமிழ் வீதம் கொடுக்கப்படும் எனவும் அரச தரப்பில் கூறப்பட்டது. இந்த இரண்டு திட்டங்களுக்கும் என்னவாயிற்று? என்பது தெரியாது.

சூரிய மின் வலு புரட்சியொன்றை ஏற்படுத்தப் போவதாகக் கூறப்பட்டது. புதுப்பிக்கத்தக்க வலு என்றொரு அமைச்சும் மின்வலு அமைச்சுடன் இணைத்துக் கொள்ளப்பட்டது. நூற்றுக்கு எட்டு வீத வட்டிக்கு மூன்றரை இலட்சம் ரூபா கடனாகக் கொடுக்கப்படும் என்றும் விளம்பரப்படுத்தப்பட்டது. இருந்தும் உங்களது சூரிய சக்தி மின்வலு உற்பத்தி சார்ந்து மக்கள் ஏன் ஈடுபாடு காட்டவில்லை என்பது பற்றி நீங்கள் எப்போதாவது ஆராய்ந்து பார்த்தீர்களா?

 

 

Sat, 03/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை