ஏழுமலையானை தரிசித்தார் பிரதமர் ரணில் விக்ரமசிங்க

திருப்பதிக்கு  ஏழுமலையான் தரிசனத்திற்காக நேற்று (02) மாலை திருப்பதி மலைக்கு வந்த இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க மனைவி மற்றும் இலங்கை எம்பிக்கள் குழுவினருடன் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுப்ரபாத சேவையில் ஏழுமலையானை தரிசித்தார்.

பிரதமர் சாமி தரிசனத்திற்காக விமானம் மூலம் ரேணிகுண்டா வந்து சேர்ந்தார். அவரை தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி லட்சுமிகாந்தம் வரவேற்றார். தொடர்ந்து கார் மூலம் திருப்பதி மலைக்கு சென்றார்.

இரவு திருப்பதி மலையில் ரணில் விக்கிரமசிங்க தங்கினார். திருப்பதி மலையில் உள்ள முக்கிய பிரமுகர் அறை ஒன்றில் சனிக்கிழமை இரவு தங்கியிருந்த ரணில் விக்ரமசிங்க ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சாமி தரிசனத்திற்காக கோவிலுக்கு சென்றார்.

கோவில் முன் வாசல் வழியாக சென்ற அவரை தேவஸ்தான நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்கால், இணை நிர்வாக அதிகாரி சீனிவாசராஜு ஆகியோர் வரவேற்று அழைத்து சென்றனர்.

சுப்ரபாத சேவையில் கலந்து கொண்டு மலையானை தரிசிக்க அவருக்கு கோவிலில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் தேவஸ்தான உயர் அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர். தொடர்ந்து தேவஸ்தான வேத பண்டிதர்கள் ரணில் விக்ரமசிங்க தம்பதிக்கு வேத ஆசி வழங்கினர்.

தரிசனத்துக்கான ஏற்பாடுகளை தேவஸ்தான அதிகாரிகள் செய்திருந்தனர். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வருகையொட்டி திருப்பதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

(இந்திய நிருபர் சாகுல் ஹமீட்)

 

 

 

 

Sun, 03/03/2019 - 12:34


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை