தொழில்நுட்ப பாட செயன்முறை பரீட்சை ஒன்லைனில் நடத்த ஏற்பாடு

2018ஆம் ஆண்டுக்கான பொதுத் தகவல் தொழில்நுட்ப பாடத்தின் செயன்முறை பரீட்சை முதற்தடவையாக இணையவழி (ஒன்லைன்) மூலம் நடத்தப்படவுள்ளது. 

எதிர்வரும் 11ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள இப்பரீட்சை 18ஆம் திகதி வரை நாடு முழுவதுமுள்ள 655பரீட்சை நிலையங்களில் நடத்தப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி.சனத் பூஜித்த தெரிவித்தார். 

இப்பரீட்சையில் தோற்றுவதற்காக ஒரு இலட்சத்து 86ஆயிரத்து 97மாணவர்கள் விண்ணப்பித்திருப்பதாகவும் அவர் கூறினார். 

விண்ணப்பதாரிகளுக்கான பரீட்சை அனுமதி அட்டை சகல பாடசாலைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் அனுமதி அட்டை கிடைக்காதவர்கள் பாடசாலையூடாக பரீட்சைகள் திணைக்களத்தை தொடர்பு கொள்ளுமாறும் கேட்கப்பட்டுள்ளனர். 

அத்துடன் பரீட்சார்த்திகள் உரிய நேரத்துக்கு முன்னரே பரீட்சை நிலையங்களுக்கு சமூகமளிக்க வேண்டுமென்றும் ஆள் அடையாளத்தை உறுதி செய்வதற்காக அனுமதி அட்டையுடன் தேசிய அடையாள அட்டை அல்லது செல்லுபடியாகும் கடவுச்சீட்டு அல்லது வாகன அனுமதிப் பத்திரம் ஆகியவற்றை உடன் எடுத்துச் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

ஒரு நாளைக்கு இரண்டு அமர்வுகள் வீதம் தொடரச்சியாக எட்டு நாட்களுக்கு இப்பரீட்சை நடத்தப்படும். பரீட்சையின்போது சுட்டிலக்கம் மற்றும் மொழியை தெளிவாக குறிப்பிடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இரண்டு வினாத்தாள்களுக்காக 03மணித்தியாலங்கள் வழங்கப்படுவதுடன் பதிவேற்றுவதற்காக மேலதிகமாக 10நிமிடங்கள் வழங்கப்படுமென்றும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்தது. 

பரீட்சை மண்டபத்திற்குள் ஸ்மார்ட் கைக்கடிகாரம், கையடக்கத் தொலைபேசி, இலத்திரனியல் உபகரணங்கள் என்பவற்றை எடுத்து வருதல் தடை செய்யப்பட்டுள்ளது.  மோசடிகளில் ஈடுபடுவோர் 05 வருடங்களுக்கு  எந்தப் பரீட்சையிலும் தோற்ற முடியாது தடுக்கப்படுவர்.

(லக்ஷ்மி பரசுராமன்)

Thu, 03/07/2019 - 08:58


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை