காய்ச்சல் அலட்சியம் வேண்டாம் எலிக்காய்ச்சலும் பரவுகிறது

இலங்கையின் நாலா புறமும் கடலால் சூழப்பட்ட நாடாக இருந்த போதிலும் கூட  மழைக் காலத்துடன் சேர்த்து சில நோய்கள் தீவிரமடைவது வழமையாகும். அவ்வாறான நோய்களில் ஒன்று தான் எலிக்காய்ச்சல். அந்த வகையில் அண்மைய மழைக் காலநிலை முடிவுற்றதைத் தொடந்து இக்காய்ச்சலுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டிருந்தது. என்றாலும் கடந்த இரு வாரங்களாக இந்நோய்க்கு உள்ளாவோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சியை அவதானிக்க முடிகின்றது.

ஆனால் எலிகாய்ச்சலானது பெரும்பாலான வளர்முக நாடுகளில் ஒரு பொது சுகாதார பிரச்சினையாக விளங்குகின்றது. என்றாலும் இந்நோய் 1886 ஆம் ஆண்டில் தான் ஜேர்மனியின் சேரிப்புறங்களில் முதன் முதலாகத் தீவிரமாகப் பரவியது. அதனைத் தொடர்ந்தே இந்த எலிக்காய்ச்சல் குறித்து அதிக கவனம் செலுத்தப்படும் நிலைமை உலகில் ஏற்பட்டது.

இக்காய்ச்சல் பக்றீரியா என்கின்ற நுண் கிருமியினால் தோற்றுவிக்கப்படும் ஒரு நோய். அப்பக்றீரியாவின் பெயரே லெப்டோ பைரோஸிஸ் ஆகும் இந்நோய்க் காரணி வீட்டு வளர்ப்பு மிருகங்களதும் காட்டு விலங்குகளதும் சிறுநீரில் தான் அதிகளவில் காணப்படுகின்றது. என்றாலும் இந்நோய்க் கிருமியின் தாக்கத்தை அவ்விலங்குகளில் அவதானிக்க முடியாது. ஆனால் அவற்றின் சிறுநீர் நிலத்திலோ அல்லது தண்ணீரிலோ கலந்து அசுத்தமடையும் தன்மை கொண்டது. 

இவ்வாறு நிலத்திலோ தண்ணீரிலோ கலந்து இருக்கும் இந்நோய்க் கிருமி மனிதனின் உடலுக்குள் அவனது தோல், கண், மூக்கு, வாய் ஆகிய ஏதாவது ஒரு அவயவயத்தின் ஊடாகவே சென்றடைகின்றது. அதாவது இந்நோய்க்கிருமி காணப்படும் நீரில் புழங்குவதின் ஊடாவே இந்நோய்க் கிருமி மனிதனின் உடலுக்குள் கடத்தப்படுகின்றது என்பது மிகத் தெளிவான விடயம்.      

இந்நோய்க்கிருமி ஒருவரின் உடலுக்குள் சென்றடைந்ததும் சொற்ப காலத்திற்குள் நோய்க்கான ஆரம்ப அறிகுறிகளை அவதானிக்கக் கூடியதாக இருக்கும். குறிப்பாக கடும் காய்ச்சல், கடுமையான உடல் வலி, கடும் தலைவலி, கண்கள் சிகப்பாதல் போன்றவாறான அறிகுறிகள் இந்நோய்க்கான ஆரம்ப குணாம்சங்களாக வெளிப்படும். அத்தோடு சிறுநீர் கடும் மஞ்சள் நிறத்தில் வெளிப்படல், சிறுநீரில் இரத்தம் வெளிப்படல், சிறுநீர் குறைவடைதல் போன்றவாறன அறிகுறிகளையும் அவதானிக்கக் கூடியதாக இருக்கும்.

இவ்வாறான அறிகுறிகள் தென்பட்டதும் தாமதியாது மருத்துவ நிபுணரை அனுகி மருத்துவ ஆலோசனையுடன் சிகிச்சை பெற்றுக் கொள்வது மிக மிக அவசியமானது. ஆனால்  இந்நோய் தொடர்பாகப் போதிய தெளிவைப் பெற்றிராததாலும் நோய் குறித்து ஏனோ தானோவென செயற்படுவதாலும் தான்  இந்நாட்டில் வருடா வருடம் ஆயிரக்கணக்கானோர் இந்நோய்க்கு உள்ளாவதுடன் அவர்களில் பலர் உயிரிழக்கவும் செய்கின்றனர்.

ஆனால் உலகில் வருடமொன்றுக்கு ஏழு மில்லியன் முதல் பத்து மில்லியன் வரையானோர் இந்நோhய்க்கு உள்ளாவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. என்றாலும் உயிரிழப்போரின் எண்ணிக்கை இதுவரையும் சரியாக மதிப்பிடப்படாதுள்ளன.

இருப்பினும் இந்நோய் வளர்முக நாடுகளில் விவசாயிகளுக்கும் சேரிப்புறங்களில் வாழும் ஏழை மக்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகின்றது.   

இவ்வாறான நிலையில்  கடந்த சில மாதங்களாக இந்நாட்டில் பரவலாக மழை பெய்ததைத் தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் முதல் எலிக்காய்ச்சல் தலைதூக்கி இருந்தது.

என்றாலும் தற்போது நாடெங்கிலும் இந்நோய் பதிவாவதால் சந்தேகத்திற்கிடமான நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலையை நாடி மருத்துவ ஆலோசனையுடன் சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறும் சுகாதார அமைச்சின் தொற்று நோய் பரவுதல் தடுப்பு பிரிவின் பிரதான மருத்துவ நிபுணர் பபா பலிகவர்தன நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தற்போது இன்நோய்க்கு உள்ளாவோரின் எண்ணிக்கை குறைவடைந்துள்ள போதிலும் காலி, அநுராதபுரம். கண்டி, இரத்தினபுரி, குருநாகல், கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி,மாத்தறை, ஹம்பாந்தோட்டை. அநுராதபுரம், பொலன்னறுவை, குருநாகல், மொனறாகலை, இரத்தினபுரி, கேகாலை ஆகியன மாவட்டங்களில் ஆகிய மாவட்டங்களில் இந்நோய்க்கு அதிகளவிலானோர் உள்ளாகியுள்ளனர்.   

ஆகவே விவசாயிகள் வடிகான்களை சுத்தம் செய்பவர்கள், சதுப்பு நிலங்களில் பணியாற்றுபவர்கள், கால்வாய்கள் மற்றும் அசுத்தமடைந்த நீர் சேரும் இடங்களில் நீச்சலடித்து விளையாடுபவர்கள்  சேற்று நிலங்களில் நடமாடுபவர்கள். மழை நீருடன் உருவாகும் சேற்று பிரதேசங்களில்  விளையாடுபவர்கள் போன்றோர் எலிக்காய்ச்சல் குறித்து முன்னெச்சரிக்கையோடு செயற்பட வேண்டும்.

அதேநேரம் இந்நோயைத் தவிர்த்துக் கொள்வதற்கான மாத்திரையை இந்நாட்டு அரசாங்கம் இலவசமாகவே வழங்குகின்றது. குறிப்பாக இந்நோய் அச்சுறுத்தல் மிக்க மாவட்டங்களின் பிரதேச மருத்துவ அதிகாரி அலுவலகங்கள் ஊடாக இம்மாத்திரைகளை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.

அதனால்  இவ்வாறான பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் பிரதேசத்திலுள்ள சுகாதார வைத்திய அதிகாரியை அணுகி மருத்துவ ஆலோசனையுடன் இந்நோய்த் தவிர்ப்புக்கான மாத்திரையைப் பெற்று பாவிக்க வேண்டும்.

அதனையைப் பயன்படுத்துவதன் மூலம் இவ்வாறான பிரதேசங்களில் அச்சமின்றி பணியாற்றலாம்.

எலிக்காய்ச்சலானது  முழுமையாகத் தவிர்த்துக் கொள்ளவும், சிகிச்சை மூலம் குணப்படுத்திக் கொள்ளவும் கூடிய ஒரு நோய். அதனால் ஒவ்வொருவரும் முன்னெச்சரிக்கையோடு செயற்பட வேண்டும். அதுவே காலத்தின் உடனடித் தேவையாக உள்ளது.

Sat, 03/30/2019 - 13:08


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை