மாற்று சமூகத்தவரின் அழுத்தங்களுக்காக எமது நிலைப்பாட்டை மாற்ற முடியாது

மாற்று சமூகத்தவர்கள் மத்தியில் இருந்து வரும் அழுத்தங்களுக்காக நாங்கள் எங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டுமென்பதும் அல்ல. எங்களுடைய சமூகத்துக்குள்ளே இருந்துதான் சீர்திருத்தம் வர வேண்டும் என நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

குருநாகல் மாவட்டத்தில், குறீகொட்டுவ அல் ஹாதியா இஸ்லாமிய நிறுவனத்தின் இரண்டாவது பட்டமளிப்பு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (03)நடைபெற்றது.இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர்,

இன்றைய சமூக சூழலில் முஸ்லிம் பெண்களுடைய சமூக அந்தஸ்து சம்பந்தமான விவகாரம் பலவாறு வித்தியாசமான சவால்களை எதிர் நோக்கியிருக்கிறது.

இது விமர்சனத்துக்குரிய ஒரு விடயமாக பார்க்கப்படுகின்றது. முஸ்லிம் சமூக கட்டமைப்பிலிருக்கின்ற சமய, கலாசார வரையறைகளை பற்றி சரியான ஒரு புரிதல் இல்லை என்பதை விடவும், நாங்கள் அவர்களை புரிய வைப்பதில் தவறிழைப்பதன் மூலம் இவ்வாறானதொரு ஒரு புதிய கருத்தாடல் உருவாகி வருகின்றது.

இஸ்லாமிய அடிப்படை சூழல்களுக்கு,-மார்க்க விதிகளுக்கு மாற்றமில்லாமல் சில மறுசீரமைப்புகளையும் நாங்கள் புறந்தள்ள முடியாது.சீர்திருத்தம் என்பது காலப்போக்கில் வருகின்ற விடயம்.

இன்றிருக்கின்ற முஸ்லிம் தனியார் சட்டத்திலிருக்கின்ற ஒரு திருத்தப்பட வேண்டிய விவகாரம். இன்று தீவிரமாக ஆராயப்படுகின்றது. அதிலுள்ள இணக்கப்பாட்டில் கொஞ்சம் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டிருக்கின்றன. திருமண வயது சம்பந்தமான விவகாரம் முக்கியமானது.இதில் கடும்போக்கை கடைப்பிடிக்கின்ற ஒரு குழுவினரும் அதேநேரம், இந்த சீர்திருத்தம் அவசியம் என வாதாடுகின்ற குழுவினரும் உள்ளனர். குர்ஆனிலோ, ஹதீஸிலோ தெளிவாக சொல்லப்படாத ஒரு விடயமாக திருமண வயதெல்லை என்பது உள்ளது. ஆனால் எங்களுடைய முஸ்லிம் தனியார் திருமண விவாக, விவாகரத்து சட்டத்தில் அதற்கென்று அனுமதிக்கப்பட்ட வயது எல்லையாக 12 வயதை குறிப்பிட்டிருக்கின்றார்கள்.இது மாற்றப்பட வேண்டும் என்பது இன்றிருக்கின்ற மிக முக்கியமான ஒரு பிரச்சினையாகும்.

ஏராளமான முஸ்லிம் நாடுகளில் 18 வயதை திருமண வயதெல்லையாக ஆக்கியிருக்கின்றார்கள். எமது நாட்டைப் பொறுத்தமட்டில் இன்று சிறுபராயத் திருமணம் என்பது மிக அபூர்வமாகத்தான் நடக்கின்றது. ஆனால் அது சட்ட ரீதியாக தடை செய்யப்பட வேண்டும் என்பதற்கான பல காரணிகள் முன்வைக்கப்படுகின்றன.

இதை திருத்துவதற்காக நாங்கள் கொஞ்சம் இந்த சீர்திருத்தத்தில் சம்பந்தப்பட்ட எல்லாத் தரப்புக்களையும் அழைத்து பாராளுமன்றத்தில் இரண்டு, மூன்று தடவைகள் சந்தித்து கலந்துரையாடிவிட்டோம்.இப்பொழுது வயதெல்லையை 16ஆக ஆக்க வேண்டும் எனக் கூறப்படுகின்றது.

எங்களுடைய சமூகத்துக்குள்ளே இருந்துதான் சீர்திருத்தம் வர வேண்டும். ஆனால் இந்த விவகாரம் சம்பந்தமாக சொல்லப்படுகின்ற சில விடயங்களில் மாற்றங்கள் வரலாம்.ஏனென்றால் இஸ்லாத்தில் நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) செய்த சில விவகாரங்கள் கூட கடமையாகவோ, சுன்னத்தாகவோ கொள்ளப்படுவதில்லை.

சட்ட பீடத்தில் கற்கின்ற படியால் 240 மாணவர்களில் 203 பேர் பெண்கள் என அறிந்தேன். பல்கலைக்கழக நுழைவில் இது எல்லா சமூகங்கள் மத்தியிலும் இருக்கின்ற ஒரு விவகாரமாகும். ஒரு காலத்தில் இலங்கையில் முஸ்லிம் பெண்களை பாடசாலைக்கு அனுப்பாமல் வீட்டில் வைத்துக் கொண்டிருந்த காலமும் இருந்தது. பிற மத பாடசாலைகளில் படிக்க விட்டால் தங்களுடைய சமயவிழுமியங்கள் தவறிப்போய்விடும் என்ற அச்சத்தில் பெற்றோர் தடுத்து வைத்திருந்தனர். அவையெல்லாம் மாற்றமடைந்து இப்பொழுது ஒரு பெரிய யுகமாற்றத்தை அடைந்து கொண்டிருக்கின்றோம். இந்த யுகமாற்றத்தில் பெண்கள் குறித்த சீர்திருத்தம் என்பது தவிர்க்க முடியாத ஒரு அம்சமாக மாறிவருகின்றது.

பக்குவமாக இதனுடைய விளைவுகளைப் பற்றிய விடயங்களை அலசி ஆராய்ந்து சரியான ஆதாரங்களோடு முன்வைக்கப்படுகின்ற வாதங்களை ஜீரணித்துக் கொண்டு சில மாற்றங்களை மேற்கொள்ளக் கூடியவாறு நாங்கள் நகர்ந்தே ஆக வேண்டும் என்பது முக்கியமானது என்றும் தெரிவித்தார்.

Tue, 03/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை