சிரியாவில் நூற்றுக்கணக்கான ஐ.எஸ் உறுப்பினர்கள் சரண்

கிழக்கு சிரியாவின் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள சிறு நிலப்பகுதியில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற அந்தக் குழுவைச் சேர்ந்த 400 போராளிகளை குர்திஷ் தலைமையிலான அமெரிக்க ஆதரவுப் படையினர் பிடித்துள்ளனர்.

டெயிர் அஸ்ஸோர் மாகாணத்தில் ஐ.எஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் கடைசி பகுதியான பாகூஸ் கிராமத்தில் இருந்து மேலும் நூற்றுக்கணக்கான ஐ.எஸ் போராளிகள் கடந்த புதன்கிழமை சரணடைந்ததாக சிரிய ஜனநாயகப் படையின் சிரேஷ் கட்டளைத் தளபதி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

“சரணடைய விரும்பாத பெரும் எண்ணிக்கையிலான போராளிகள் உள்ளே இருக்கின்றனர்” என்று அந்த தளபதி குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு சரணடைந்தவர்களில் பாகூஸ் கிராமத்தை விட்டு வெளியேறிய 2,000க்கும் அதிகமானவர்கள் உள்ளனர். அவர்கள் டிரக் வண்டிகளில் ஏற்றப்பட்டு அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஐ.எஸ் குழுவின் கடைசி கட்டுப்பாட்டு பகுதியும் வீழ்ச்சியை நெருங்கி வரும் நிலையில் அங்கு பெரும் அவலங்கள், மனிதாபிமான நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன.

ஐ.எஸ் கட்டுப்பாட்டு பகுதியில் எஞ்சியிருக்கும் பொதுமக்கள் வெளியேற வாய்ப்பை எற்படுத்து அங்கு தாக்குதல் நடத்துவதை அமெரிக்க ஆதரவுப் படை குறைத்துள்ளது.

அந்த கிராமத்தில் இருந்து வெளியேறும் சிவிலியன்கள் ஆத்திரத்துடன், “இஸ்லாமிய அரசு தொடர்ந்து நீடிக்கும்” என்று கோசம் எழுப்புகின்றனர்.

ஒரு கிலேமீற்றருக்கு குறைவான பகுதிக்கு சுருங்கி இருக்கும் ஐ.எஸ் கோட்டையை கைப்பற்றுவது அந்த குழுவுக்கு எதிரான நான்கு ஆண்டு சர்வதேச படை நடவடிக்கையை பூர்த்தி செய்வதாக அமையும்.

கடந்த பெப்ரவரி 20 தொடக்கம் ஐ.எஸ் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து 10,000க்கும் அதிகமானவர்கள் வெளியேறியுள்ளனர். அவ்வாறு வெளியேறும் முகத்தை மறைத்த கறுப்பு நிற ஆடை அணிந்த பெண்கள் மற்றும் சிறுவர்கள் பாலைவன பகுதியில் இருந்து அல் ஹோல் என்ற முகாமுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். இந்த முகாமில் தற்போது சன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

55,000க்கும் அதிகமானவர்கள் வசிக்கும் இந்த முகாமில் இருப்பவர்களை சமாளிப்பதில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன.

கடந்த புதன்கிழமை இந்த முகாமிற்கு 4,000 பேர் வரை புதிதாக வந்திருப்பதோடு வரும் வழியில் 90 பேர் உயிரிழந்திருப்பதாக சர்வதேச மீட்புக் குழு என்ற உதவி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் குழந்தைகள் மற்றும் சிசுக்களாகும்.

ஐ.எஸ் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து வருபவர்களை ஏற்கும் பகுதியில் குளிருக்கு மத்தியில் சுகவீனமுற்ற தனது ஒருமாத குழந்தை நேற்று இரவு உயிரிழந்ததாக 30 வயது ஈராக் பெண் ஒருவர் புதன்கிழமை குறிப்பிட்டார்.

Fri, 03/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை