தென்னிலங்கை தலைவர்களோடு சில தமிழ்த் தலைவர்கள் கைகோர்ப்பது நல்லிணக்கமல்ல

தென்னிலங்கை தலைவர்களோடு சுயலாப நோக்கில் உள்ள சில தமிழ் அரசியல் தலைமைகள் மாத்திரம் கைகுலுக்குவது தேசிய நல்லிணக்கமாக அமையாது. அது சொந்த சலுகைகளைப் பெறுவதற்கான தேன்நிலவுக் கொண்டாட்டமாகவே அமையும் என ஈ.பி.டி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

குடியிருக்க ஒரு துண்டு நிலமோ குச்சு வீடோ இன்றி வாக்களித்த தமிழ் மக்கள் அங்கே தவித்திருக்க, சில தமிழ் தலைமைகள் தமக்கு மட்டும் ஆடம்பர மாளிகைகையும், சொகுசு வாகனங்களும் கேட்டுப் பெறுவதை தேசிய நல்லிணக்கம் என்று கூற முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். வரவுசெலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான ஆறாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே டக்ளஸ் தேவானந்தா இந்த விடயங்களை முன்வைத்தார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

அரசியல் தீர்விற்கு ஒத்து வரவில்லை என்று எதிர்க்கட்சி மீது பழி சுமத்திவரும் தமிழ் அரசியல் தலைவர்கள் சிலர், தமக்கு கிடைத்திருக்கும் சலுகைகளுக்கு அதே எதிர்க்கட்சியினர் ஆதரவு வழங்கியதும், அதற்கு மட்டும் யாரும் அறியாமல் தொலைபேசி மூலம் நன்றி தெரிவித்து வருவதை தேசிய நல்லிணக்கம் என்று கூறி விட முடியுமா?

தமிழ் பேசும் மக்களுக்கு அரசியல் தீர்வையும், அபிவிருத்தியையும், அன்றாடத்தேவைகளையும், பெற்றுக்கொடுக்க மறந்தவர்கள், அதற்காக கடந்த காலங்களைப்போல் அண்மையிலும் கனிந்து வந்த அரிய வாய்ப்பை பயன்படுத்த மறுத்தவர்கள், இலங்கையில் பெய்கின்ற மழைக்கு ஜெனீவாவில் குடை பிடிக்க போகின்றார்கள்.

முள்ளிவாய்க்கால் நோக்கி எமது மக்கள் செத்து செத்து ஓடிக்கொண்டிருந்த அவலம் கண்டும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த வெளியுலகம் வந்து எமக்கு விடுதலை பெற்றுத்தருவார்கள் என்று யாருக்கு இவர்கள் புலுடா விடுகிறார்கள்? அழுதும் பிள்ளையை அவளே பெற வேண்டும். தேவையென்றால் ஒரு மருத்துவிச்சியின் துணைபோல் ஐ.நா அல்ல எந்த நாடும் வந்து எமக்கு பங்களிக்கட்டும். கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய் தேடி ஊரெல்லாம் அலைவது போல், பேரம் பேசி எந்த தீர்வையும் பெறவல்ல அரசியல் பலத்தை தம் வசம் வைத்துக்கொண்டு உலகெல்லாம் இவர்கள் சுற்றி வர நினைப்பது ஏன் என்று நான் கேட்கின்றேன் என்றும் குறிப்பிட்டார்.

ஷம்ஸ் பாஹிம். மகேஸ்வரன் பிரசாத்

Wed, 03/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை