களுத்துறை சிறிகுருஸ மகா வித்தியாலய அணி முதலிடம்

மாத்தறை சென் தோமஸ் குமார வித்தியாலய 175 வருட பூர்த்தியை முன்னிட்டு தோமியன் நாம் உயன்வத்த பழைய மாணவர் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட Thomian’7S உதைபந்தாட்டப் போட்டி தொடரில் களுத்துறை சிறிகுருஸ மகா வித்தியலயம் முதலாமிடத்தையும் மாத்தறை ராகுல வித்தியாலயம் இரண்டாமிடத்தையும் பெற்றுக்கொண்டன. கேடயத்துக்காக நடத்தப்பட்ட போட்டியில் முதலாமிடத்தை கண்டி புனித சில்வெஸ்டர் வித்தியாலயமும் இரண்டாம் இடத்தை காலி ரிச்மன்ட் கல்லூரியும் பெற்றுக்கொண்டன.

ஒரு அணிக்கு ஏழு பேர் கலந்துகொள்ளும் வகையில் திட்டமிடப்பட்ட இப்போட்டித் தொடர் பெப்ரவரி மாதம் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் மாத்தறை உயன்வத்த விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. மாத்தறை சென் தோமஸ், மாத்தறை சென் சர்வேஸஸ், மாத்தறை ராகுல, காலி ரிச்மண்ட், காலி மஹிந்த, காலி வித்யாலோக்க, காலி சென் அலோசியஸ், மொறட்டுவை சென் செபஸ்தியன், கண்டி புனித சில்வெஸ்டர், கொழும்பு லும்பினி, பன்னிப்பிட்டிய தர்மகால, அம்பலங்கொட தர்மாசோக்க ஆகிய பன்னிரெண்டு பாடசாலைகள் தகுதிபெற்றன. போட்டிகள் லீக் முறையிலும் றொக் அவுட் முறையிலும் நடைபெற்றன.

இப்போட்டியில் முதலாமிடம் இரண்டாமிடம் பெற்ற அணிகளுக்கு கேடயமும் பணப்பரிசும் வழங்கப்பட்டதோடு ஒழுக்கமான அணிக்கும் பரிசு வழங்கப்பட்டது. அதைத் தவிர சிறந்த பந்து காப்பாளர், அதிக கோலைப் பெற்றவர், சிறந்த வீரர் ஆகியோருக்கான பரிசுகளும் வழங்கப்பட்டன. அத்துடன் போட்டியில் கலந்துகொண்ட அனைத்து அணிகளுக்கும் கால்பந்துகளும் வழங்கப்பட்டன.

இப்போட்டிகளின் ஆரம்ப நிகழ்வு பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி மாலை 4.00 மணிக்கு பாடசாலை பழைய மாணவர் பிரையன் ரணசிங்க, வித்தியாலய அதிபர் டபிள்யூ. பீ. பியதிஸ்ஸ, ஆகியோரின் பங்களிப்புடன் கால்பந்து மைதானத்தில் நடைபெற்றது.

இறுதிநாள் நிகழ்வு பாடசாலை பழைய மாணவர் டொக்டர் லக்மால் ரணசிங்க தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தென் மாகாண சபை உறுப்பினர் வீரசுமன வீரசிங்க, மாத்தறை பிரதி மேயர் சதுர கருணாரத்ன, தோமியன் நாம் உயன்வத்த அமைப்பின் ஆலோசகர் நெல்சன் ரணசிங்க, தலைவர் கயந்த ஹயசிங்க கருணாரத்ன, செயலாளர் ஹரேந்திர கருணாரத்ன, அமைப்பின் ஏற்பாட்டாளர் செயலாளர் சிசிர வீரசிங்க, பிரதான ஏறப்பாட்டாளர் சுரேஷ் விக்ரமநாயக்க, பொருளாளர் உள்ளிட்ட தோமியன் நாம் உயன்வத்த அமைப்பின் அங்கத்தவர்கள் பலரும் கலந்துகொண்டார்கள்.

Sat, 03/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை