கட்டுநாயக்க விமான நிலையத்தில் சனநெருக்கடியைக் குறைக்க தற்காலிக முனையமொன்று தேவை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் காணப்படும் சனநெருக்கடியைக் குறைக்கும் வகையில் தற்காலிக முனையமொன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.   போக்குவரத்து அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் தற்காலிக முனையமொன்றை அமைப்பதற்கான முயற்சிகளை எடுத்தேன். எனினும், ஒப்பந்தக்காரர்கள் இருவர் உச்சநீதிமன்றம் சென்றமையால் இதனை ஆரம்பிக்க முடியாது போனது.

எனவே கட்டுநாயக்க விமான நிலையத்தில் காணப்படும் நெருக்கடிகளைக் குறைக்க தற்காலிக முனையம் அமைக்கும் சவாலை அமைச்சர் அரஜுனா ரணதுங்க நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.   போக்குவரத்து, சிவில் விமான சேவைகள் அமைச்சு மற்றும் துறைமுகங்கள், கப்பற்துறை அலுவல்கள், தெற்கு அபிவிருத்தி அமைச்சு ஆகியவை மீதனா குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே நிமல் சிறிபால.டி.சில்வா இதனைத் தெரிவித்தார்.  

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரண்டாவது முனையத்தை அமைப்பதற்காக கேள்விப்பத்திரங்கள் கோரப்பட்டுள்ளன. இதில் ஜப்பான் நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்தன. ஜப்பானிய நிறுவனத்துக்கு இந்த ஒப்பந்தத்தை வழங்குமாறு ஜய்க்கா நிறுவனம் கேட்டுக்கொண்டது. எனினும், பொறியியலாளர்களின் கணிப்பீட்டைவிட நூற்றுக்கு நாற்பது வீதம் அதிகமாக அவர்களின் விலைகள் அமைந்திருந்தன. இதனால் அவர்களுக்கு ஒப்பந்தத்தை வழங்க முடியாது.  

இவ்வாறான நிலையிலேயே தற்காலிக முனையமொன்றை அமைப்பது பற்றிய ஆய்வினை மேற்கொண்டேன். இதனை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் தொடர்ந்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அது மாத்திரமன்றி கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரண்டாவது பயணிகள் முனையத்தை அமைப்பதற்கான நிதியுதவியை வேறு நாட்டிலிருந்து கோருவது குறித்தும் கவனம் செலுத்த வேண்டும். 

(லக்ஷ்மி பரசுராமன், மகேஸ்வரன் பிரசாத்)

Tue, 03/26/2019 - 09:46


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை