பரஸ்பரம் தாக்குதல்களுக்கு பின்னர் காசாவில் யுத்த நிறுத்த அறிவிப்பு

பதற்றம் தொடர்ந்து நீடிப்பு

இஸ்ரேல் மற்றும் காசா இடையே பரஸ்பரம் தாக்குதல்கள் இடம்பெற்ற நிலையில் எகிப்தின் மத்தியஸ்தத்தில் யுத்த நிறுத்தம் ஒன்று எட்டப்பட்டதாக காசாவில் ஆட்சியில் உள்ள ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது. எனினும் நேற்றைய தினத்திலும் காசாவில் வெடிப்புச் சத்தங்கள் கேட்ட வண்ணம் இருந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் குறிப்பிடுகின்றனர்.

“ஆக்கிரமிப்பு மற்றும் போராட்டத் தரப்புகளுக்கு இடையில் யுத்த நிறுத்தம் ஒன்றுடன் எகிப்தின் முயற்சி வெற்றி அளித்தது” என்று ஹமாஸ் பேச்சாளர் பவுஸி பர்ஹும் குறிப்பிட்டார். இது தொடர்பில் இஸ்ரேல் தரப்பில் இருந்து உடன் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

காசாவின் பல பகுதிகள் மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல்களுக்கு பதிலடியாக காசாவில் இருந்து திங்கட்கிழமை மாலை தெற்கு இஸ்ரேலை நோக்கி ரொக்கெட் குண்டுகள் வீசப்பட்டதைத் தொடர்ந்தே இந்த யுத்த நிறுத்தம் பற்றிய அறிவிப்பு வெளியானது.

இஸ்ரேல் இராணுவம் தனது வான் தாக்குதல்களை தொடர்ந்தால் எல்லைப் பகுதிகள் மீது தாக்குதல்களை தொடர்வதாக ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் அமைப்புகள் எச்சரித்திருந்தன.

காசா எல்லையை ஒட்டிய தெற்கு இஸ்ரேலின் பல பகுதிகளிலும் சைரன் ஒலி எழுப்பப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டது.

முன்னதாக இஸ்ரேலிய வீடு ஒன்றின் மீது காசாவில் இருந்து வீசப்பட்ட ரொக்கெட் குண்டு ஒன்றுக்கு பதிலடியாக காசாவின் ஹமாஸ் நிலைகள் மீது இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தியது.

காசாவின் தெற்கில் திங்கட்கிழமை மாலை இஸ்ரேலிய போர் விமானங்கள் குடியிருப்பு பகுதிகளில் தாக்குதல் நடத்தியது. இந்த வான் தாக்குதல்கள் விவசாய நிலம் ஒன்றில் விழுந்ததாக உள்ளூர் செய்திகள் குறிப்பிடுகின்றன.

இஸ்ரேலுடனான எல்லையை ஒட்டி இருக்கும் ஹமாஸ் அமைப்புடன் தொடர்புபட்ட பல காலியான கட்டிடங்கள் இதன்போது தாக்கப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

இந்த தாக்குதல்களில் ஏழு பலஸ்தீனர்கள் காயமடைந்ததாக காசா சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மோதல்கள் தணிந்தபோதும் இஸ்ரேல் இராணுவம் உஷார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதோடு எந்த ஒரு சூழலுக்கும் தயாராக இருப்பதாக அந்த இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

காசா எல்லையை ஒட்டிய இஸ்ரேலிய பாடசாலைகள் மூடப்பட்டிருப்பதோடு குண்டு பாதுகாப்பு தளங்களுக்கு அருகில் இருக்கும்படி குடியிருப்பாளர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

காசாவில் சில பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டிருப்பதோடு பாடசாலைகள் திறக்கப்பட்டபோதும் பெரும்பாலானவர்கள் தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பவில்லை.

கடந்த திங்கட்கிழமை இஸ்ரேல் போர் விமானங்களுக்கு இலக்கான கட்டிடங்களில் ஹமாஸ் தலைவர் இஸ்மைல் ஹனியாவின் அலுவலகமும் உள்ளது. எனினும் அவர் முன்கூட்டியே வெளியேற்றப்பட்டார்.

2007 ஆம் ஆண்டு காசாவில் ஹமாஸ் ஆட்சியை பிடித்தது தொடக்கம் காசாவில் இஸ்ரேல் மூன்று யுத்தங்களை நடத்தியுள்ளது.

Wed, 03/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை