'வெசாக் தினத்திற்கு முன்னர் கசிப்பு பாவனை முற்றாக ஒழிக்கப்படும்'

அமைச்சர் மனோவிடம் ஜனாதிபதி உறுதி

வெசாக் தினத்திற்கு முன்னர் நாட்டிலிருந்து கசிப்பு பாவனை முற்றாக இல்லாதொழிக்கப்படுமென, அமைச்சர் மனோ கணேசனிடம் ஜனாதிபதி மைத்திரி பாலசிறிசேன உறுதியளித்துள்ளார். இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, மாத்தளை மாவட்டங்களில் கசிப்பு விற்பனை பாவனைகள் அதிகரித்துள்ளமை தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் கவனத்திற்கு கொண்டுவரப்படது. 

ஜனாதிபதி தலைமையில் நடந்த இக்கூட்டத்திலே, அமைச்சர் மனோ கணேசன் இவ்விடயங்கள் குறித்து எடுத்துரைத்தார். இதைக் கருத்திற்கொண்ட ஜனாதிபதி எதிர்வரும் வெசாக் தினத்திற்குள் கசிப்பு பாவனை,வியாபாரங்கள் முற்றாக ஒழிக்கப்படுமென உறுதியளித்தார்.  

ஜனாதிபதி, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் , அமைச்சர்கள்,  பாராளுமன்ற உறுப்பினர்கள், பாதுகாப்பு செயலாளர்,முப்படை தளபதிகள், பதில்  பொலிஸ் மா அதிபர் உட்பட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள், அரசாங்க அதிகாரிகள்  கலந்துகொண்ட பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் மனோ  கணேசன் மேலும் கருத்து தெரிவித்ததாவது: இரத்தினபுரி பாம் கார்டன் தோட்டங்களில் கசிப்பு வியாபாரத்துக்கு எதிராகச் செயற்பட்ட   தமிழ் இளைஞன் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதைக் கட்டுப்படுத்தும் பொருட்டு அங்கு ஒரு காவலரணை ஸ்தாபிக்குமாறு பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவிடம் கூறினேன். எனினும் காவலரண் அங்கு அமைக்கப்படவில்லை. அப்பகுதியில் இன்னொரு கொலை நடந்தால் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவே பொறுப்பேற்க வேண்டும். கசிப்பு விற்பனையின் பின்னணியில் ஏற்படவுள்ள ஆபத்துக்கள், கொலைகளைத் தடுக்க படையினரின் விழிப்புணர்வு அவசியம்.

இந்த பிரச்சினையை அமைச்சரவையில் சமர்ப்பித்து ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவந்திருக்க முடியும். ஆனால்,   பாதுகாப்பு அமைச்சுக் கூட்டத்தில் இராணுவ, பொலிஸ் அதிகாரிகள் அனைவரும் இருப்பர் என்பதாலே இங்கு இதைப் பற்றிப் பேசினேன்.

இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, மாத்தளை மாவட்டங்களில் கசிப்பு வியாபாரம்,தோட்ட தொழிலாளர்களை குறி வைத்து நடைபெறுகிறது. இதில் பொலிஸாருக்கும், கள்ளச்சாராய உற்பத்தியாளர்களுக்கும் இரகசியத் தொடர்பாடுகள் உடன்படிக்கைகள் உள்ளன. இதனால் இச்சட்டவிரோத செயற்பாடுகளை சிலர் கண்டுகொள்ளாதுள்ளனர்.

கசிப்பு பாவனை, விற்பனைகளால் தோட்டப்புற பெண்கள், ஆண்களின் உடல் தேகாரோக்கியம் சீரழிந்து பலர் உயிரிழக்கின்றனர். தோட்ட அதிகாரிகளும் இதை கண்டுகொள்வதில்லை.

நாட்டில் இன்று போதைவஸ்து வியாபாரத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் ஜனாதிபதி தோட்ட தொழிலாளர்களை குறிவைத்து நடைபெறும் இந்த கசிப்பு வியாபாரத்தை நிறுத்த வேண்டும் என்றார்.

இதற்கு பதிலளித்த, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர் மனோ கணேசன் சொல்வதில் மிகுந்த உண்மைகள் உள்ளன. தேசிய மட்டத்தில் போதைவஸ்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கும் பொலிஸ் துறை. அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்ட பிரதேசங்களில் கசிப்பு வியாபாரத்தை நிறுத்த வேண்டும். போதைவஸ்து உலகை ஒழிக்கும் விசேட பிரதி பொலிஸ் மா அதிபர் லத்தீப், எதிர்வரும் வெசாக் தினத்துக்கு முன்னர் கசிப்பு வியாபாரம்  பாவனைகளை முற்றாக நாட்டிலிருந்து துடைத்து எறிய வேண்டும் என்றார்.

Sat, 03/02/2019 - 09:11


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை