இலங்கையையும் இணைத்து மற்றொரு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்

தவறினால் சர்வதேசம் தலையிட முடியாத நிலை ஏற்படும்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கையையும் இணைத்து மற்றுமொரு தீர்மானம் நிறைவேற்றப்படாவிட்டால் இலங்கை விடயத்தில் சர்வதேச நாடுகள் தலையிட முடியாத நிலைமை ஏற்பட்டுவிடும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்குவதாக போலிப்பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். வரவு-செலவுத்திட்ட இரண்டாவது வாசிப்பு மீதான இரண்டாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சுமந்திரன் இந்தக் கருத்துக்களை முன்வைத்தார்.

30/1 பிரேரணையில் இணங்கிய விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் அரசாங்கம் மேலும் கால அவகாசம் கோரியது. இது கால அவகாசம் என்பதற்கு அப்பால் இது விடயத்தில் சர்வதேசத்தின் கண்காணிப்பு என்பதே முக்கியமாகும். இவ்வாறான நிலையில் அரசாங்கம் சர்வதேசத்துக்கு வழங்கிய உறுதிமொழிகளை நடைமுறைப்படுத்துவதில் சர்வதேசத்தின் கண்காணிப்பு இருப்பது அவசியம்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தனது மூன்று பிரதிநிதிகளை ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பவுள்ளார். அடிப்படைவாத தரப்புக்களுடன் இணைந்துகொண்டு, இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்படவிருக்கும் பிரேரணையிலிருந்து விலகுவதற்கே அவர் முயற்சிக்கின்றார். இவ்வாறான நிலையில் இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படக்கூடாது என பிரசாரங்களை முன்னெடுப்பது ஜனாதிபதிக்கே அனுகூலமாக அமைந்துவிடும்.

எனவே இலங்கை விவகாரத்தில் சர்வதேசத்தின் கண்காணிப்பு தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 பிரேரணையை நடைமுறைப்படுத்துவதற்கு கால அவகாசம் கோரியே 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31/1 பிரேரணை நிறைவேற்றப்பட்டது. அப்போது கூட கால அவகாசம் வழங்குவதற்கு கூட்டமைப்பு ஆதரவு வழங்குவதாக தமிழ் ஊடகங்களும், தமிழ் அரசியல்வாதிகளும் போலிப் பரப்புரைகளை முன்னெடுத்தனர். எனினும், இது கால அவகாசம் வழங்குவது பற்றியல்ல. இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு சர்வதேசத்தின் கண்காணிப்பு அவசியம் என்ற அடிப்படையிலேயே நாம் அதனை வரவேற்றோம்.

இவ்வாறான நிலையிலேயே ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நாளை (இன்று) இலங்கை தொடர்பில் எழுத்துமூல அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதன் அடிப்படையில் பிரேரணையொன்று நிறைவேற்றப்பட வேண்டும். இதில் இலங்கை அரசாங்கமும் இணை அனுசரணை வழங்க வேண்டும். அதனூடாகவே சர்வதேசத்தின் கண்காணிப்பை உறுதிப்படுத்த முடியும் என்றார்.

 ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்

Fri, 03/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை