இராணுவத்தை விசாரிப்பதாயின் புனர்வாழ்வு பெற்ற புலிகளையும் விசாரிக்க வேண்டும்

யுத்தக் குற்றம் தொடர்பில் இராணுவத்தினரை விசாரணைக்கு உட்படுத்துவதாயின், கடந்த அரசின் ஆட்சிக்காலத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட 12,600 எல்.ரி.ரி.ஈ உறுப்பினர்களும் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளரும் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விவகாரம் ஆறாத காயம் போல மீண்டும் மீண்டும் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்த விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர இலங்கை அரசாங்கம் யதார்த்தபூர்வமான யோசனைத் திட்டமொன்றை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பித்து அதனை இரண்டு வருடங்களுக்குள் நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். பத்தரமுல்லையிலுள்ள ஜாதிக ஹெல உறுமய கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் இந்தக் கருத்தை முன்வைத்தார்.

ஈழக் கனவில் உள்ள அரசியல் கட்சிகளும் அமைப்புக்களும் அந்தக் கனவைக் கைவிட வேண்டும் எனச் சுட்டிக்காட்டிய அவர், நாட்டில் நிலவிய யுத்த சூழலில் பல்வேறு தரப்புக்கள் தவறிழைத்துள்ளன. உண்மையைக் கண்டறிவதற்கு விசாரணை நடத்தப்படவேண்டுமாயின் சகலரையும் நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.

இது சாத்தியமற்றது என்பதுடன் நாட்டில் குழப்பத்தை மேலும் அதிகரிக்கும். நாட்டின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு சகலரும் ஒன்றிணைந்து பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் கோரிக்கைவிடுத்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் வடக்கில் முன்னெடுத்த ஹர்த்தாலின் போதும் இராணுவத்தினர் யுத்தக் குற்றத்தில் ஈடுபட்டதாகவும் அவர்கள் விசாரிக்கப்பட வேண்டும் என்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

இராணுவத்தினரை விசாரிப்பதாயின், மஹிந்த ராஜபக்ஷ்வின் ஆட்சிக்காலத்தில் எதுவித ஆராய்வுகளும் மேற்கொள்ளாமல் விடுவிக்கப்பட்ட 12,600 எல்.ரி.ரி.ஈ உறுப்பினர்களும் மீள கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரிக்கப்பட வேண்டும்.

ஏனெனில் 9 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களைக் கொன்ற குற்றச்சாட்டு அவர்கள் மீது உள்ளது. பிரபாகரன் மாத்திரம் ஆயுதம் ஏந்தவில்லை, பல தமிழ் அமைப்புக்கள் ஆயுதம் ஏந்திப் போராடின.

அப்படியாயின் அந்த அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள், இந்திய அமைதிகாக்கும் படையினர், தெற்கில் புரட்சியில் ஈடுபட்ட ஜே.வி.பியினர், அவர்களை அழிப்பதற்காக செயற்பட்ட குழுவினர் என சகல தரப்பினரும் யுத்தக்குற்றம் தொடர்பான விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறினார்.

கடந்த நான்கு வருடங்களில் அரசாங்கம் மனித உரிமை நிலைமைகளை சீர்செய்வதற்கு பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுத்துள்ளது.

19ஆவது திருத்தத்தின் ஊடாக சுயாதீன ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நீதித்துறை மற்றும் பொலிஸ்துறை என்பன சுதந்திரமாக செயற்படுகின்றன.

தமக்கு கீழ் செயற்பட்ட சிலர் மேற்கொண்ட குற்றச்செயல்களால் உயர் பதவிகளில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகளுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு நீதிமன்றங்களில் விசாரிக்கப்படுகின்றன.

இவ்வாறான நிலையில் தனிப்பட்ட ரீதியில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட பாதுகாப்புத் தரப்பினரை அடையாளம் கண்டு விசாரணை செய்வதில் எந்தவித தவறும் இல்லை.

ஒட்டுமொத்தமாக இராணுவத்தினர் மீது யுத்தக் குற்றவிசாரணை நடத்துமாறு கோருவது நடைமுறைக்கு சாத்தியமற்றது.

காணாமல்போனவர்கள் தொடர்பில் ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டு விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

எனவே இது விடயத்தில் தொடர்ந்தும் காலத்தை இழுத்தடிக்காது காணாமல்போனவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டு அவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். யுத்தம் முடிவடைந்த பின்னர் சொத்துக்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கள் குறித்து வடக்கு கிழக்கில் மாவட்ட செயலகங்கள் ஊடாக தகவல்கள் திரட்டப்பட்டன. மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்களுக்கு நஷ்ட ஈடுகளை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இவ்வாறான நிலையில் ஜெனீவாவில் நடைபெற்றுவரும் மனித உரிமைகள் பேரவையின் 40வது கூட்டத் தொடருடன் இலங்கை தொடர்பான பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதற்காக நடைமுறைச்சாத்தியமான யோசனைத் திட்டமொன்றை அரசாங்கம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைத்து அதனை இரண்டு வருடங்களில் நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது பற்றிய திட்டமொன்றை தான் அமைச்சரவைக்கு சமர்ப்பித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

அது மாத்திரமன்றி யுத்த சூழலில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழர்கள் மற்றும் இராணுவத்தினர் உள்ளிட்ட சகலருக்கும் பொது மன்னிப்பை வழங்குவது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தையும் தான் முன்வைத்திருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மகேஸ்வரன் பிரசாத்

 

Fri, 03/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை