உற்பத்தி பொருட்களுக்குத் தடை: அமெரிக்கா மீது ஹுவாவி வழக்கு

தனது உற்பத்திகளை மத்திய அரச ஊழியர்கள் பயன்படுத்துவதற்கு தடை விதித்ததற்கு எதிராக அமெரிக்க அரசு மீது ஹுவாவி நிறுவனம் வழக்குத் தொடுத்துள்ளது.

சீன அரசுடனான தொடர்பு பற்றி கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்திருக்கும் ஹுவாவி, இந்த தடையை விதிப்பதற்கு ஆதாரங்களை வழங்க அமெரிக்கா தவறிவிட்டதாக குறிப்பிட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பை காரணமாகக் கூறி ஹுவாவி உற்பத்திகளை பயன்படுத்துவதற்கு அமெரிக்கா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அந்த நிறுவனத்திற்கு எதிராக கூட்டணி நாடுகளிலும் அமெரிக்கா பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. உலகின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு உபகணங்கள் மற்றும் சேவைகள் வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாக ஹுவாவி உள்ளது.

டெக்ஸாஸில் அமெரிக்க பெடரல் நீதிமன்றம் ஒன்றில் தொடுக்கப்பட்டிருக்கும் இந்த வழக்கு ஹுவாவி தனது நிறுவனத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கான ஒரு பரந்த நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

“ஹுவாவி உற்பத்திகள் மீது கொண்டுவந்திருக்கும் கட்டுப்பாடுகளுக்கு ஆதரவாக எந்த ஒரு ஆதாரத்தையும் வழங்குவதற்கு அமெரிக்க கொங்கிரஸ் தொடர்ச்சியாக தவறியுள்ளது. கடைசி நடவடிக்கையாக மற்றும் சட்ட ரீதியாக இந்த சரியான நடவடிக்கையை எடுக்க நாம் நிர்ப்பந்திக்கப்பட்டோம்” என்று ஹுவாவி சுழற்சி தலைவர் கியுவே பிங் குறிப்பிட்டார்.

அரசுடனான தொடர்பை மறுத்திருக்கும் ஹுவாவி, சீன அரசு நிறுவனத்தின் “உரிமை, கட்டுப்பாடு அல்லது செல்வாக்கில்” தாக்கம் செலுத்துவதில்லை என்று வலியுறுத்தியுள்ளது. ஹுவாவியின் அடுத்த தலைமுறை 5ஜி கைபேசி வலையமைப்பை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பயன்படுத்துவதை அவுஸ்திரேலியா, நியூசிலாந்து உட்பட பல அரசுகளும் பாதுகாப்பு காரணங்களுக்காக தடுத்துள்ளன.

இது தவிர அந்த நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மெங் வென்சு மீது அமெரிக்கா குற்றவியல் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது. ஹுவாவி நிறுவனர் ரென் செய்பேயின் மகளான வென்சு கடந்த டிசம்பரில் கனடாவில் கைது செய்யப்பட்டதோடு அவரை அமெரிக்காவுக்கு நாடுகடத்த கோரப்பட்டுள்ளது.

ஈரான் மீதான அமெரிக்காவின் தடையை மீறியது மற்றும் மோசடியில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதனை ஹுவாவி நிறுவனம் மறுத்து வருகிறது.

Fri, 03/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை