ஐ.நா சுற்றாடல் மாநாட்டுக்கு இலங்​ைக நான்கு புதிய யோசனைகள் முன்வைப்பு

*சூழல் நேய பொருளாதாரத்தை ஏற்படுத்துவது ​அனைத்து நாடுகளினதும் பொறுப்பு

*ஜனாதிபதியின் சூழல்நேய  திட்டங்களுக்கு சர்வதேச சமூகம் பாராட்டு

பாதுகாப்பான சூழலில் வாழும் உரிமையை உறுதிப்படுத்த சூழல் தேசிய பொருளாதார இலக்குகளை அறிமுகப்படுத்துவது இன்றுள்ளோரின் முக்கிய பொறுப்பென ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன தெரிவித்தார்.

கென்யாவின் நைரோபி நகரில் நேற்று (14) நடைபெற்ற ஐ.நா. சபையின் சுற்றாடல் மாநாட்டின் நான்காவது கூட்டத்தொடரில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கென்ய ஜனாதிபதி உஹூரு கென்யாட்டாவின் விசேட அழைப்பின்பேரில் ஜனாதிபதி இந்த மாநாட்டில் பங்குபற்றினார்.

கென்ய ஜனாதிபதி உஹூரு கென்யாட்டா, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன், இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, மடகஸ்கார் ஜனாதிபதி என்ட்ரி ரஜோயிலினா ஆகியோரின் தலைமையில் நைரோபி நகரில் உள்ள ஐ.நா. சுற்றாடல் அமைப்பின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த மாநாட்டில் 58 நாடுகளின் சுற்றாடல்துறை அமைச்சர்களும் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

“சுற்றாடல் சவால்கள் மற்றும் பேண்தகு நுகர்வு மற்றும் உற்பத்திக்கான புத்தாக்க தீர்வுகள்” என்பது இம்மாநாட்டின் கருப்பொருளாகும். இம்மாநாட்டில் பங்குபற்றுவதற்காக கென்ய ஜனாதிபதி உள்ளிட்ட ஏனைய அரச தலைவர்களுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் மாநாட்டு வளாகத்தை நோக்கி நடை பவனியாக அழைத்து வரப்பட்டனர்.

மாநாட்டுக்கு வருகை தந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கென்யாவின் அமைச்சரவை செயலாளர் மொனிக்க குமா (Monica Kuma) அவர்களும் ஐக்கிய நாடுகள் சபையின் கென்யாவின் பிரதி பொதுச் செயலாளர் உள்ளிட்ட பிரதிநிதிகளும் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

“மீள் பிறப்பாக்க சக்தி வளத்திற்கான புதிய வர்த்தக வடிவங்கள்” என்ற பெயரில் இந்த மாநாட்டுடன் இணைந்ததாக இடம்பெற்ற மாநாட்டிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்குபற்றினார்.

ஐ.நா சுற்றாடல் மாநாட்டின் நான்காவது கூட்டத்தொடர் இதனைத் தொடர்ந்து ஆரம்பமானது. கென்ய ஜனாதிபதி உஹூரு கென்யாட்டா மாநாட்டின் ஆரம்ப உரையை நிகழ்த்தினார். இந்த மாநாட்டின் மூன்றாவது உரையை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஆற்றினார்.

பௌத்த தத்துவத்தை பின்பற்றுகின்றவன் என்ற வகையில் இந்த பூவுலகை மனிதர்களுக்கு மட்டுமன்றி அனைத்து ஜீவராசிகளுக்கும் உரிய இடமாக பாதுகாக்கும் பொறுப்பை நாம் கொண்டுள்ளோம் என ஜனாதிபதி இம்மாநாட்டில் மேலும் தெரிவித்தார்.

இயற்கை, கலாசாரம் மற்றும் மரபுரிமைகளில் வளமான நாடு என்ற வகையில் இலங்கை நாட்டின் சமூக, பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்துவதற்காக இயற்கையோடு தொடர்புடைய பேண்தகு வர்த்தக துறைகளில் முதலீடு செய்வதற்கு விருப்பத்துடன் இருப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, அந்த வகையில் ஐ.நா. சுற்றாடல் பேரவையின் நான்காவது கூட்டத்தொடர் அதற்கான ஒரு பலமான அடித்தளத்தை வழங்கியிருப்பதாகவும் தெரிவித்தார். காலநிலை மாற்றம் பற்றிய பிரச்சினையை ஒழிப்பதற்கு முன்னெப்போதும் இல்லாத சர்வதேச அர்ப்பணிப்பை கொண்டுள்ள பரிஸ் உடன்படிக்கையில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளதுடன், 2019ஆம் ஆண்டின் சர்வதேச காலநிலை இடர் சுட்டியில் எமது நாடு இரண்டாவது இடத்தில் பட்டியல் படுத்தப்பட்டுள்ளது என்ற வகையில் காலநிலை மாற்றம் தொடர்பான செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளதென்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

சுற்றாடல் பிரச்சினைகளுக்கு வறுமை ஒரு முக்கிய காரணமாகும் என்றும் ஜனாதிபதி அவர்கள் மேலும் சுட்டிக்காட்டினார். சுற்றாடல் சீரழிவுகளும் வறுமையும் அபிவிருத்தி அடைந்து வருகின்ற நாடுகளில் பின்னிப் பிணைந்த அம்சங்களாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். இலங்கையில் கிராமப் புறங்களில் வாழும் மக்களின் பிரதான வாழ்வாதாரமாக விவசாயம் உள்ளதென குறிப்பிட்ட ஜனாதிபதி, இலங்கையின் கிராமிய சூழல் விவசாயத்திற்கு தேவையான காலநிலையையும் பசுமை தன்மைக்கான அதிக ஆற்றல் வளத்தையும் கொண்டுள்ளதெனக் குறிப்பிட்டார். அந்த வகையில் இலங்கை விவசாயத்துறையில் பேண்தகு நுகர்வு, உற்பத்தி மற்றும் விஞ்ஞான தொழிநுட்பத்தை இணைத்துக்கொள்ள விருப்பத்துடன் உள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இதேநேரம் இலங்கை இணை அனுசரணையில் நான்கு முன்மொழிவுகள் ஐ.நா. சுற்றாடல் மாநாட்டின் நான்காவது கூட்டத்தொடருக்கு முன் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். கண்டல் தாவரங்களின் முகாமைத்துவம், உணவு விரயமாதலை முகாமைத்துவம் செய்தல், சமுத்திர மாசடைதல், நுன் பிளாஸ்டிக் மற்றும் திண்மக் கழிவு முகாமைத்துவம் ஆகிய துறைகளில் இந்த முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டன.

அண்மையில் நிறைவுபெற்ற பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின்போது இலங்கை பொதுநலவாய நீல சமவாயத்தின் கீழ் கண்டல் தாவரங்களை நடுவதற்கான செயலணியின் முன்னோடியாக செயற்படுவதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

பேண்தகு நுகர்வு மற்றும் உற்பத்தி கொள்கையை தயாரித்த முதலாவது தெற்காசிய பிராந்திய நாடு இலங்கை ஆகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், கடல் மற்றும் தரையை உள்ளடக்கிய வகையில் “நீலப் பசுமை” கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காக இலங்கை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இதே நேரம் இலங்கை நீர்வள மாசடைதலை தவிர்ப்பதற்காக கரையோர முகாமைத்துவம் தொடர்பான சிறந்ததோர் அணுகுமுறையை நடைமுறைப்படுத்தி வருவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, இதன்மூலம் இரசாயனம் மற்றும் பிளாஸ்டிக் போன்றவற்றினால் கடல் வளங்கள் மாசடைவதை தவிர்ப்பதற்காக நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

சுற்றாடல் துறை அமைச்சர் என்ற வகையில் பொலித்தீனை தடை செய்வதற்கு நடவடிக்கை எடுத்ததுடன், தனது வழிகாட்டலின் கீழ் வன அடர்த்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கையாக ஆரம்பிக்கப்பட்டுள்ள “வனரோபா” நிகழ்ச்சித்திட்டம் பற்றியும் ஜனாதிபதி கருத்து தெரிவித்தார்.

சுற்றாடல் துறை அமைச்சர் என்ற வகையிலும் அரச தலைவர் என்ற வகையிலும் சுற்றாடலை பாதுகாப்பதற்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவரும் மற்றும் அது தொடர்பாக பல்வேறு கொள்கை ரீதியான தீர்மானங்களை மேற்கொண்ட தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் உரை மாநாட்டில் பங்குபற்றிய அனைவரினதும் கவனத்தை ஈர்த்திருந்ததுடன், ஜனாதிபதியின் சுழல்நேய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களையும் அவர்கள் பாராட்டினர்.

Fri, 03/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை