மாத்தறை -பெலியத்தை புதிய ரயில் பாதை பணி நிறைவு

சித்திரை புத்தாண்டுக்கு முன் பயணம் ஆரம்பம்  

மாத்தறை -பெலியத்தைக்கிடையில் நிர்மாணிக்கப்பட்டுவந்த புதிய ரயில் பாதைப் பணிகள் நிறைவு பெற்றுவரும் நிலையில், ரயில் பயணம் எதிர்வரும் தமிழ் -சிங்கள சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னர் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  

சகல ரயில்களும் பெலியத்தை ரயில் நிலையத்திலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதோடு சகல கரையோர ரயில்களும் பெலியத்தை வரை பயணத்தை தொடர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  

மாத்தறை மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டம் இணைத் தலைவர்களுள் ஒருவரான வர்த்தக மற்றும் கைத்தொழில் பிரதி அமைச்சர் புத்திக பதிரன தலைமையில் இடம்பெற்றது.

மாத்தறை மாவட்ட செயலாளர் பிரதீப் ரத்னாயக்கா ஏற்பாடு செய்திருந்த இக் கூட்டத்தில் பதில் செயற்திட்ட பொறியியலாளர் ஏ.ஜி.ஸீ. விமலசூரிய மேற்படி விடயம் தொடர்பாக தெளிவுபடுத்தினார்.  

27 கிலோமீற்றர் நீளமான இந்த ரயில் பாதை, மணித்தியாலத்திற்கு 120கிலோமீற்றர் வேகத்தில் செல்லக்கூடியவை. சீனாவின் உதவியின் கீழ் 278.2அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.  

இதற்கு இடையில் கெகனதுர, பம்பரந்த, வௌருகன்னல மற்றும் பெலியத்தை ஆகிய நான்கு பிரதான ரயில் நிலையங்களும் மேலும் பிலுதுவ, வெஹரஹேன ஆகிய இரண்டு உப ரயில் நிலையங்கள் இரண்டும் அமைக்கப்பட்டுள்ளன.  

பெலியத்தை தங்காலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து தெற்கு அதிவேக வீதியில் கொழும்பு பயணிக்கும் அரச ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் இதன் மூலம் பெரும் நன்மையை பெறுவர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.  

(வெலிகம தினகரன் நிருபர்)

 

Tue, 03/05/2019 - 09:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை