வெறுப்பு பேச்சை தடை செய்வதற்கு சட்ட ஏற்பாடுகள் இன்னும் இல்லை

சுவிஸ் நாட்டு தூதுவரிடம் அமைச்சர் ஹக்கீம் விசனம்

வெறுப்பு பேச்சைத் தடை செய்யக் கூடிய சட்ட ஏற்பாடுகள் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை. அத்துடன், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை பாதிக்கக்கூடிய வகையிலான விடயங்கள் சமூக வலைதளங்களூடாக பாரியளவில் முன்னெடுக்கப்படுகின்றன என நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம், சுவிஸ் தூதுவரிடம் தெரிவித்தார்.

இலங்கை, மாலைதீவுக்கான சுவிற்ஸர்லாந்து தூதுவர் ஹன்ஸ்பீட்டர் மொக் (14), அமைச்சர் ஹக்கீமை உயர் கல்வி அமைச்சில் சந்தித்து கலந்துரையாடினார்.

தற்போதைய அரசியல் சூழ்நிலை, அரசியலமைப்பு தொடர்பிலான இன்றைய நிலைமை, இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம், சட்டமும் ஓழுங்கும் பேணப்படுவதன் அவசியம்போன்றவற்றை மையப்படுத்தி தூதுவர்அமைச்சரிடமிருந்து விளக்கங்களை அறிந்து கொள்வதில் அதிக ஆர்வம் செலுத்தினார்.

அமைச்சர் ஹக்கீம் சுவிஸ் தூதுவரிடம் கூறியதாவது,

அரசியலமைப்பு சீர்த்திருத்தம் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனும் பிரமர் ரணில் விக்கிரமசிங்கவுடனும் தனித்தனியே பேச்சு வார்த்தைகளை நடத்தியுள்ளனர். இதில் அவர்களின் குறைந்தபட்ச எதிர்பார்ப்புகள் வலியுறுத்தப்பட்டுள்ளன. கொந்தளிப்பான, சர்ச்சைக்குரிய அம்சங்களை தவிர்த்து, அவசியமான குறைந்தபட்ச அணுகுமுறையை கையாள்வது பயனளிக்கும் என பொதுவாக கருதப்படுகின்றது.

அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தை பொறுத்தவரை வழிநடத்தல் குழுவானது, நிபுணத்துவ குழுவின் அறிக்கையை பரிசீலித்துள்ளது. அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தம் விரைவில் சாத்தியப்படக் கூடியதாகத் தெரியவில்லை.

இன்றுள்ள சூழ்நிலையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையையே இல்லாதொழித்தல்,நடைமுறையில் உள்ள தேர்தல் முறையில் மாற்றங்களை எற்படுத்தல் என்பன சர்ச்சைக்குரியனவாகவுள்ளன. தற்போது நடைமுறையிலுள்ள தேர்தல் முறையையே அதிகமானோர் ஆதரிக்கின்றனர். அர்த்தமுள்ள அதிகாரப் பரவலாக்கம் காலத்தின் தேவையாகும். அதனடிப்படையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களை விட அவற்றிற்கு வெளியே தெற்கில் உள்ள ஏனைய ஏழு மாகாணங்களிலும் இதன் அவசியம் வெகுவாக வலியுறுத்தப்படுகின்றது.

 

Sat, 03/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை