பலஸ்தீனுக்கான இலங்கை தூதுவருக்கு ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் தங்க விருது

பலஸ்தீனுக்கான இலங்கைத் தூதுவர் எம் பௌஸான் அன்வர், பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸினால் 'நட்புறவின் நட்சத்திரம் (Star of Friendship) என்ற தங்கப்பதக்க விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளார்.

பலஸ்தீனுக்கான இலங்கை தூதுவர் சேவையை நிறைவு செய்து நாடு திரும்பும் தூதுவர் அன்வருக்கு பலஸ்தீன ஜனாதிபதியின் ஜனாதிபதி மாளிகையில் அளிக்கப்பட்ட பிரியாவிடை வைபவத்தின் போது இவ்விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. பலஸ்தீன ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ரியாட் அல் மல்க், ஜனாதிபதியின் விஷேட ஆலோசகர் மஜ்டி அல் காலிடி உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இவ்வைபவத்தில் உரையாற்றிய பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் முதலில் இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டார். இலங்கையில் பலஸ்தீன தூதரகக் கட்டிடத்திற்குரிய காணியையும் கட்டிடத்தையும் வழங்கியமைக்காக நன்றிகளைத் தெரிவித்த ஜனாதிபதி அப்பாஸ், நிவ்யோர்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் 73 வது பொது அமர்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பலஸ்தீனுக்கு அளித்த ஆதரவுக்கும் நன்றிகளைத் தெரிவித்து கொண்டார்.

அதனைத் தொடர்ந்து தூதுவர் அன்வர் தமது பதவிக் காலத்தில் பலஸ்தீனுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவை மேலும் மேம்படுத்தவென மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கும் அவர் நன்றிகளைத் தெரிவிக்கவும் அவர் தவறவில்லை.

Tue, 03/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை