பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள போதிலும் பணவீக்கம் கட்டுப்பாட்டுக்குள்

1. கௌரவ சபாநாயகர் அவர்களே, எனது இரண்டாவது வரவு செலவுத்திட்டத்தினை இச்சபைக்கு சமர்ப்பிப்பதனையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன்.

2. 2018 இன் இறுதியில் ஏற்பட்ட அரசியல் ஸ்திரமற்ற நிலைமை முடிவுறுத்தப்பட்டதன் பின்னர் நாட்டின் பொருளாதாரமானது உறுதிப்படுத்தப்பட்டு வளர்ச்சியை நோக்கி நகர்வதினை நாம் காணலாம் என்பதனை இச்சபைக்குத் தெரிவித்துக் கொள்வதனையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். இலங்கையின் சுதந்திரத்திரத்திற்குப் பின்னரான வரலாற்றில் மிகவும் இருண்ட 52 நாட்களின் பின்னர் ஸ்திரநிலைமையினை மீண்டும் அடைந்து கொள்வதற்கு நாம் கடுமையாக உழைக்க வேண்டியேற்பட்டது.

3. தொடர்ச்சியான பல வருடங்களாக ஏற்பட்ட பல வரட்சியினால் கிராமிய வருமானம் வீழ்ச்சியடைந்து முழுப் பொருளாதாரமும் பாதிப்படைந்த நிலையில் 2018 ஒக்டோபர் 26 ஆந் திகதி இடம்பெற்ற நிகழ்வு பொருளாதாரத்தினை மேலும் மோசமாகப் பாதித்தது. உலக எண்ணெய் விலை இரட்டிப்பாகியதுடன் ஐக்கிய அமெரிக்க பெடரல் ரிசேவ் ஆனது வட்டி வீதங்களை மிக விரைவில் அதிகரித்தது. இவ்வாறான உள்நாட்டு வெளிநாட்டு சவால்களுக்கு வெற்றிகரமாக முகம் கொடுத்த அதேவேளை எமது அரசாங்கம் பொருளாதார ஸ்திரத்தன்மையினையும் ஏற்படுத்தியுள்ளது.

4. 2018 ஒக்டோபர் இறுதியிலிருந்து உலக எண்ணெய் விலையானது பாரியளவு வீழ்ச்சியடைந்திருந்ததுடன் ஐக்கிய அமெரிக்க பெடரல் ரிசேவ் ஆனது குறைந்த வட்டி வீதங்களுக்கான சமிக்ஞையினைக் காட்டியதுடன் நுகர்வானது பழைய நிலைமைக்குத் திரும்பியது. இந்நிலைமையினால் இலங்கை பெற்றுக் கொள்ள முடியுமாகவிருந்த பொருளாதார வளர்ச்சியினை 2019 வரையில் அனுபவிக்க முடியாது போனது.துரதிர்ஷ்டவசமாக, நாம் அரசியல் சதியொன்றிற்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்பட்டதால் மேற்குறித்த நன்மைகளின் விளைவுகளை அனுபவிப்பதற்கான வாய்ப்பினை இழந்தோம்.

5. இலங்கையின் மீதான நம்பிக்கை இழந்ததன் விளைவாக, அந்த 52 நாட்களுக்குள் எமது கடன் மற்றும் பங்குச் சந்தையிலிருந்து மூலதன வெளியேற்றம் பாரியளவு இடம்பெற்றதுடன் மிகவும் கடினமான உழைப்பின் மூலம் கட்டியெழுப்பப்பட்ட எமது வெளிநாட்டு ஒதுக்குகளிலிருந்து பல பில்லியன் டொலர்களை இழக்க வேண்டியேற்பட்டது.இக்காலப் பகுதியல், ஏனைய வளர்ந்துவரும் சந்தைகளின் நாணயங்கள் மதிப்பேற்றமடைந்த அதேவேளை, எமது நாணயத்தின் பெறுமதியானது வரலாற்றில் மிகக் குறைந்த மட்டத்திலான வீழ்ச்சியினை பதிவு செய்தது.

6. இலங்கையின் கடன் தரப்படுத்தலானது கீழ் மட்டத்திற்குத் தள்ளப்பட்டதன் விளைவாக எமது வெளிநாட்டுக் கடன் பெறுகைச் செலவினம் இரட்டை இலக்க மட்டத்திற்கு அதிகரித்துள்ளது. 2019 இல் வெளிநாட்டுப் படுகடன் மீள் கொடுப்பனவாக 5.9 பில்லியன் ஐ.அ. டொலரினை மீள் நிதியளிக்க வேண்டியிருப்பதனால் மிகவும் சாதகமற்ற தன்மைஉருவாகியுள்ளது. இலங்கை சிறந்த பிரயாணம் செய்யக்கூடிய இடமாக 'லோன்லி பிலனற்' சஞ்சிகையினால் தரப்படுத்தப்பட்டதன் பின்னரும் கூட, அப்போது காணப்பட்ட அரசியல் நிலமையின் காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகையானது மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டது. இந்நிலையின் நிவர்த்தி செய்யும் பொருட்டு புதிய பிரச்சார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

7. நிலைமை இவ்வாறிருக்க, 2018 டிசெம்பர் 17 ஆம் திகதி நாம் மீண்டும் அதிகாரத்திற்கு வந்தோம். எமது வெளிநாட்டுத்துறைக் காரணிகளுக்கு ஏற்பட்ட சேதத்தினை நாம் தற்பொழுது சீர்படுத்தியுள்ளதுடன் சந்தைகள் கடந்த இரண்டு மாதங்களில் நம்பிக்கை தரக்கூடிய வகையில் மீள் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. இன்று எமது வெளிநாட்டுக் கடன் பெறுகை செலவினமானது 200 அடிப்படை புள்ளிகளுக்கு மேலாக வீழ்ச்சியடைந்துள்ளது.எமது பொருளாதாரத்தினை நோக்கி வெளிநாட்டு மூலதனமானது நகர்ந்துள்ள அதேவேளை சனவரியிலிருந்து அரசாங்க பிணையங்கள் மீது ரூபா 3,400 மில்லியன் வெளிநாட்டு நிதியானது உட்பாய்ச்சப்பட்டுள்ளதுடன் இன்றுவரை ரூபாவானது 1.5 சதவீதத்தினால் மதிப்பேற்றம் அடைந்துள்ளது.

8. எனவே, அரசியல் சதியினால் ஏற்பட்ட பல்வேறுபட்ட பாதிப்புக்களை நிவர்த்திசெய்ய வேண்டியுள்ளதுடன், பொருளாதாரம் மீண்டும் ஸ்திரப்படுத்தப்பட வேண்டியுள்ளது. 'என்டர்பிறைஸ் ஸ்ரீ லங்கா – மக்களை வலுவூட்டலும் வறியோரைப் ராமரித்தலும்' பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு நாம் மேற்கொண்ட பணிகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கான வாய்ப்பினை தற்பொழுது நாம் பெற்றுள்ளோம்.

9. அரசிறை முகாமைத்துவம் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகின்றது. ஐந்து தசாப்தங்களில் முதல் முறையாக 2017 இல் ஆரம்ப மிகையினை நாம் அடைந்துள்ளதுடன், இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.6 சதவீத வளர்ச்சியாகும்.2015 இல் காணப்பட்ட -2.9 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2018 இல் இது பாரியதொரு முன்னேற்றமாகும். பிரதான உலக நுகர்வுப் பொருட்களின் விலைகள் அதிகரித்த போதிலும் பணவீக்கமானது கட்டுப்பாட்டுக்குள் முகாமை செய்யப்பட்டுள்ளது. 2017 இல் என்றுமில்லாத சிறந்த ஏற்றுமதி மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீட்டினை நாம் அடைந்துள்ளதுடன் 2018 இல் அதற்கான உத்வேகம் அதிகரித்துள்ளது. இந்நிலைமை பொருளாதாரத்தினை பாரிய வெளிநாட்டு உட்பாய்ச்சலினை நோக்கி மீள்ஒருமுகப்படுத்துகின்ற எமது அரசாங்கத்தின் நோக்கத்துடன் இணைந்ததாகக் காணப்படுகின்றது.

10. 2015 ஆம் ஆண்டில் நாம் எச்சந்தர்ப்பத்திலும் வெடித்துச் சிதறக் கூடிய குண்டைப் போன்ற பொருளாதாரமொன்றினையே பெற்றோம்.எவ்வாறாயினும் நாம் வெற்றிகரமாக ஸ்திரத் தன்மையினையும் மீள் சமநிலையினையும் அடைந்துள்ளோம். முன்னைய அரசாங்கமானது படுகடனை மீளச்செலுத்துவதற்கான எவ்வித நியாயமான திட்டமும் இல்லாது செலவு மிக்க வெளிநாட்டு கடன்கள் மூலம் வீண்விரயம் மிக்க செலவினங்களை செய்து கொண்டிருந்தது. 2014 இல் வரி வருமானம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதமாக வீழ்ச்சியடைந்திருந்ததுடன் ஏற்றுமதியானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14 சதவீதமாக சரிவடைந்து காணப்பட்டது. இது இரண்டு தசாப்த காலத்தில் ஏற்பட்ட பின்னடைவாகும். விசேடமாக 2000 ஆம் ஆண்டில் வரி வருமானம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15 சதவீதமாகக் காணப்பட்டதுடன் ஏற்றுமதிகள் 30 சதவீதமாக இருந்தது. இது பொருளாதாரமானது ஸ்திரமற்ற நிலையை அடைந்து சிதைவடைந்ததென்பதை காண்பிக்கின்றது.

11. இந்த அரசாங்கம் பொருளாதார வளர்ச்சியானது தனியார் தொழில் முயற்சிகளினால் வழிப்படுத்தப்படுகின்றது என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளது. இதுவே, முன்னைய நீல மற்றும் பசுமை வரவு செலவுத்திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 'என்டர்பிறைஸ் ஸ்ரீலங்கா' எண்ணக்கருவாகும். எவ்வாறாயினும், நியாயமான சந்தையே இலங்கையின் வர்த்தக மற்றும் வாணிபத்தின் உயிரோட்டமாகும். சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வியாபார தொழில் முயற்சிகள் மற்றும் சர்வதேச மட்டத்தில் போட்டியிடக் கூடிய இலங்கை கம்பனிகளின் வளர்ச்சிக்காக தனது புத்திக் கூர்மையினை பயன்படுத்தும் உண்மையான தொழில் முயற்சியாளரையே தனியார் தொழில் முயற்சி என நான் நம்புகின்றேன்.

12. இதற்கு மாற்றமாக தனியார் துறையில் இன்னுமொரு வகுதியினர் காணப்படுகின்றனர்.அவர்கள் போட்டித்தன்மை மற்றும் நியாயமான சந்தைகளுக்கு உடன்பாடற்ற ஊழல்களை ஊக்குவிக்கின்ற முன்னைய அரசாங்கத்துடன் தொடர்பு வைத்து தம்மை வளர்த்துக் கொண்டவர்களாவர். இவர்கள் 20 மில்லியன் மக்களின் மீது செலவினத்தின் சுமையினை ஏற்படுத்தி மக்களின் வரித் தீர்வைகளின் மூலம் தம்மை வளர்த்துக் கொண்டவர்களாவர். மேலும் இன்றுவரை நாம் செலுத்தி வருகின்ற அதிகரித்த செலவினங்களை ஏற்படுத்திய பெருமளவு அரசாங்க ஒப்பந்தங்களின் மூலம் நன்மை அடைந்தவர்களாவர். இவர்களில் சில சுயநலவாதிகள் தமது கம்பனிகள் மற்றும் தனிப்பட்ட கணக்குகளுக்கு அதிகளவான செல்வத்தினை இறைக்கின்ற சர்வாதிகாரத்தினை நோக்கிச் செல்வதற்கு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இக்குழுவினர் தனியார் துறையில் சிறியதொரு வகுதியாயினும் அதிகாரமும் செல்வாக்கும் மிக்கவர்களாவர். பொருளாதார வளர்ச்சியின் இயந்திரமாக நாம் காண வேண்டிய தனியார் துறை இதுவல்ல. ஆனால், இவை கடந்த கால ஆட்சியாளர்கள் விட்டுச் சென்ற எச்சங்களாகும்.

13. நாம் தனியார் தொழில் முயற்சிகளின் அடிப்படை விதிகளை பின்பற்றுகின்ற சிறந்த சந்தை தொழிற்படுத்தலில் வெற்றியடையக் கூடிய புதிய நிறுவனங்களை உருவாக்குகின்றோம். எமது நாட்டின் அபிவிருத்தி மற்றும் நவீன மயப்படுத்தலினை தொடர்ந்து பின்னடையச் செய்கின்ற பாதுகாப்புச் சிந்தனைகளிலிருந்து விடுபட்ட தனியார் துறையொன்று இலங்கைக்குத் தேவை. பொருளாதார தாராளமயமாக்கல், பாதுகாப்பு வலையமைப்புக்கான ஆதரவளிப்பு மற்றும் சந்தை நெருக்கடிகளை நீக்குவதற்கான அரச தலையீடு மற்றும் சமூக நீதியினை உறுதிப்படுத்தல் என்பவற்றினை கடந்த வருட வரவு செலவுத்திட்டத்தில் நான் சமர்ப்பித்தேன். இந்த வேலைச்சட்டகத்தினை நாம் தொடர்ந்து முன்னெடுப்பதற்காக அதன் பிரதான காரணிகளை வலுப்படுத்துவோம்.

14. தாராளப் பொருளாதாரத்தினை நோக்கிய எமது தீர்மானங்கள் என்றுமில்லாதவாறு விரைவானதாகும். இதன் முடிவாக துணைத் தீர்வைகளை ஒழிப்பதுடன் வர்த்தக தடைகளை நீக்குவதற்கான ஏற்பாடுகளை நாம் தொடர்ந்து முன்னெடுப்போம். அதேவேளை, போட்டித்தன்மை சவால்களை எதிர்கொள்வதில் நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு மிகைப்பொருள் திணிப்பெதிர்ப்பு சட்டவாக்கத்திற்கான ஏற்பாடுகள் மற்றும் வர்த்தக மறுசீரமைப்பு நிகழ்ச்சித் திட்டத்தினை உருவாக்கலுடன் பாதுகாப்பான ஏற்பாடுகளை நாம் முன்னெடுப்போம்.

15. சமூக உட்கட்டமைப்பு மற்றும் சமூக பாதுகாப்பு வலையமைப்பில் நாம் மேலும் முதலீடு செய்யவுள்ளோம். கல்வி மற்றும் சுகாதாரத்துறைக்கு அதிக நிதி வழங்கும் அதேவேளை அவற்றின் தரம் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படும். உபாய ரீதியாகவும் வினைத்திறனிலும் வீழ்ச்சிப் போக்கினைக் கொண்டுள்ள எமது சமூகப் பாதுகாப்பு வலையமைப்பினை மீளெழுச்சி பெறச் செய்வதற்கான நேரம் இதுவாகும். எமது கவனமானது, பயனாளிகளை படிப்படியாக தன்னிறைவு பெற்ற வலுவூட்டப்பட்ட பிரசைகளாக மாற்றுவதனை நோக்கிச் செலுத்தப்பட வேண்டியுள்ளது.

16. எமது பிரஜைகளை வலுவூட்டுவது எமது அரசாங்கத்தின் அடிப்படை நோக்கமாகும். இது அரசியல் சமூக பொருளாதார வலுவூட்டல் என்பவற்றின் ஊடாக இடம்பெறும்.'என்டர்பிறைஸ் ஸ்ரீ லங்கா – மக்களை வலுவூட்டல்' என்ற இவ்வருட வரவு செலவுத்திட்டத் தொனிப்பொருளானது, எமது மக்கள் தாமாகவே முன்னேற்றப் பாதையில் சென்று நாட்டினை வளமடையச் செய்யும் வகையில் அவர்களுக்கான உதவியை வழங்குகின்ற அதேவேளை, சமூகத்தில் காணப்படும் வறிய மற்றும் பலவீனமான மக்களை நிலைபேறான மற்றும் இலக்கிடப்பட்ட சமூகப் பாதுகாப்பு வலையமைப்பினூடாக பாதுகாப்பதுமாகும்.

17. வளர்ச்சி மையங்களாக மாறுவதற்கான ஆற்றல்களைக் கொண்டுள்ள எமது கிராமங்கள் மற்றும் நகரங்களில் இதுவரை வழங்கப்படாத உட்கட்டமைப்பு தேவைகளின் பற்றாக்குறையினை நீக்குவதற்கு 2018 யூன் மாதத்தில் கம்பெறளிய நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சித் திட்டமானது '52 நாள் சதி' யினால் பாதிக்கப்பட்டவற்றில் முதன்மையானதாகும். சட்டரீதியற்ற அமைச்சரவை அதன் முதலாவது கூட்டத்திலேயே இத்திட்டத்தினை நிறுத்தியது. எவ்வாறாயினும், முக்கியத்துவம் வாய்ந்த இக்கருத்திட்டமானது இவ்வருடத்தின் சனவரி மாதத்தில் எமது அரசாங்கத்தினால் மீளெழுச்சி பெறச் செய்யப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டில் தேர்தல் தொகுதியொன்றுக்கான ஒதுக்கீடானது 200 மில்லியன் ரூபாவிலிருந்து 300 மில்லியன் ரூபாவாக அதிகரிக்கப்பட்டது. இதற்காக ரூபா 48,000 மில்லியன் 2019 ஆம் ஆண்டுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் விடயப்பரப்பானது மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. உதாரணமாக வழிபாட்டுத்தளங்களுக்கான ஒதுக்கீடானது ரூபா 500,000 இலிருந்து ரூபா 1மில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

18. 'என்டர்பிறைஸ் ஸ்ரீ லங்கா' கடன் திட்டத்தினை 2018 இல் நாடு முழுவதிலும் நாம் ஆரம்பித்துள்ளோம். இதன் மூலம் குறிப்பாக எமது இளைஞர்களுக்கு மத்தியில் தொழில் முயற்சியாண்மையுடைய சமூகமொன்றினை உருவாக்கும் நோக்கில், வங்கிகளுக்கு சமர்ப்பிக்கப்பட்ட கருத்திட்டங்களின் அடிப்படையில் சலுகை வட்டி வீதத்தில் கடன்கள் பெற்றுக் கொடுக்கப்படும். இத்திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படுவதுடன் நாடளாவியரீதியில் விழிப்புணர்வு மற்றும் ஏனைய நிகழ்ச்சிகளினூடாக ஊக்குவிக்கப்படும். தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் சான்றிதழ் பெற்றவர்களுக்கு 'என்டர்பிறைஸ் ஸ்ரீ லங்கா' கடன் திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படும்.

19. கடந்த சில மாதங்களில் 'என்டர்பிறைஸ் ஸ்ரீ லங்கா' கடன் திட்டத்திலிருந்து 30,000 இற்கு அதிகமான தொழில் முயற்சியாளர்கள் பயன் பெற்றுள்ளதுடன், இதற்காக ரூபா 60,000 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது. இக்கடன் திட்டங்கள் அனைத்தினதும் முழுமையான விபரங்கள் அடங்கிய பட்டியல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

20. எவ்வாறாயினும், 'என்டர்பிறைஸ் ஸ்ரீ லங்கா' நிகழ்ச்சித் திட்டத்தின் கடன்களுக்கான

வட்டியின் குறிப்பிடத்தக்களவு பகுதியினை அரசாங்கம் பொறுப்பேற்கின்ற போதும்'கம்பெறளிய' – துரிதப்படுத்தப்பட்ட கிராமிய அபிவிருத்தி; பராமரித்தலும்' 'என்டர்பிறைஸ் ஸ்ரீ லங்கா' முன்னேற்றத்தை நோக்கிசிறியளவு தொழில் முயற்சியாளர்கள் வங்கிகளினால் கோரப்படுகின்ற பிணைகளை வழங்குவதில் பல்வேறு சவால்களை எதிர்நோக்குகின்றனர். இந்த வகையில், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளுக்கு உத்தரவாதங்களை வழங்குவதற்குத் தேவையான ஒதுக்கீடுகளை மேற்கொள்வதற்கு இலங்கை மத்திய வங்கியின் கீழ் நிதியமொன்றினைத் தாபிப்பதற்கு நான் முன்மொழிகின்றேன்.

21. வங்கி அலுவலர்கள், புதிய தொழில் முயற்சியாளர்களை அதைரியப்படுத்துவதாக எமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. எனவே, அவ்வாறான முறைப்பாடுகளை பெற்றுக் கொள்வதற்கு '1925' என்ற தொலைபேசி அழைப்பு நிலையமொன்றினை ஆரம்பித்துள்ளோம்.

22. நிதிச் செலவினங்களை நிவர்த்தி செய்வதற்கு மேலதிகமாக, 'என்டர்பிறைஸ் ஸ்ரீ லங்கா' நிகழ்ச்சித் திட்டம் உற்பத்தி அபிவிருத்தி மற்றும் வியாபார முகாமைத்துவத்தில் சந்தைகளுடன் தொழில் முயற்சிகளையும் சிறிய வியாபாரங்களையும் இணைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கும். 'என்டர்பிறைஸ் ஸ்ரீ லங்கா' நிகழ்ச்சித் திட்டத்தின் வாடிக்கையாளர்களுக்கு குறித்த துறைகளில் ஆற்றலினை விருத்தி செய்து கொள்வதற்காக பாரிய தனியார் துறை கம்பனிகளுடனும் கைத்தொழில் பயிற்சி நிறுவகம், தகவல்தொடர்பாடல் தொழில்நுட்ப முகவராண்மை, ஏற்றுமதி அபிவிருத்திச் சபை போன்ற அரசாங்க நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும். 'என்டர்பிறைஸ் ஸ்ரீ லங்கா' நிகழ்ச்சித்திட்டமானது தொழில் முயற்சிகள் மற்றும் சிறிய வியாபாரங்கள் விருத்தியடைவதற்கு சாத்தியமான சூழலினை உருவாக்கும் வகையில் மாற்றமடையும்.

23. சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் மற்றும் சிறிய வியாபாரங்களின் வளர்ச்சிக்கு ஒத்துழைப்பதற்கான மேலதிக நடவடிக்கையாக அரசாங்கத்தின் பெறுகைகளை சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளுக்கு வழங்குவது அவசியமாகும். அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் கொள்வனவுப் பெறுமதியில் ஆகக் குறைந்தது 10சதவீதத்தினை இலங்கை சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளுக்கு வழங்குவதற்கு நான் முன்மொழிகின்றேன். இதற்கு மேலதிகமாக, சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளரகளுக்கான ஊக்விப்பாக சிறிய ட்ரக்ரக வாகனங்களுக்கான உற்பத்தித் தீர்வை குறைக்கப்படுவதோடு, வாகனப் பெறுமதியில் பெற்றுக் கொடுக்கப்படும் கடனுக்கான விகிதம் அதிகரிக்கப்படும்.

24. விவசாயம், கடற்றொழில் மற்றும் பெருந்தோட்டத்துறையின் செயலாற்றுகையானது நவீன தொழில்நுட்ப உள்ளீடுகள் மற்றும் முறைமை மாற்றத்தினூடாக அவற்றினது உற்பத்தித் திறனை அதிகரித்துள்ளதுடன், இது உயர் விளைச்சல் மற்றும் தரமான உற்பத்திக்கு வழிகோலியது.

25. விவசாயத்துறை நவீனமயப்படுத்தல் கருத்திட்டத்தின் மூலம் தற்பொழுது தாபிக்கப்பட்டுள்ள விவசாய தொழில்நுட்ப செயன்முறைப் பூங்காக்களின் வெற்றியின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள தொழில் நுட்ப உள்ளீடு மற்றும் உயர் பெறுமதிமிக்க பயிர்களின் அபிவிருத்திக்கான விவசாய வியாபார பெறுமதிச் சங்கிலிகளுடன் விவசாயிகளை இணைப்பதற்கு நாம் ஒத்துழைப்பு வழங்குவோம். இந்நிகழ்ச்சித்திட்டமானது அம்பாந்தோட்டை, குருநாகல், புத்தளம், இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.

26. விவசாயத்துறையில் காணப்படும் பிரதான தேவையாக அறுவடையின் பின்னரான இழப்புகளைக் குறைப்பதற்கு அவசியமான சிறந்த களஞ்சியப்படுத்தல் மற்றும்

களஞ்சியசாலை வசதிகள் காணப்படுகின்றன. தம்புள்ளையில் அமைக்கப்பட்டிருக்கும் அவ்வாறான களஞ்சியசாலையின் நிர்மாணப் பணிகள் முடிவடைந்ததன் பின்னர் அரசாங்கம் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சீதோசன நிலைக் கட்டுப்பாட்டு வசதியினைக் கொண்ட களஞ்சியசாலைகள் கட்டுநாயக்க, எம்பிலிப்பிட்டிய, யாழ்ப்பாணம்மற்றும் கெப்பெட்டிப்பொல ஆகிய இடங்களில் நிறுவப்படவுள்ளன.

27. 'திரிசவிய' கடன் திட்டம் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டு கோழி வளர்ப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் விநியோக வலையமைப்பை விரிவுபடுத்துவதற்கு வசதியளிக்கப்படும். அத்துடன் சிறியளவிலான கால்நடை தொழில்முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் கால்நடை உற்பத்திப் பொருட்கள் தொடர்பான சுயதொழில் முயற்சிகளில் ஈடுபட்டள்ளவர்களுக்கும் உதவிகள் விரிவுபடுத்தப்படும்.

28. பெறுமதி சேர்க்கப்பட்ட இறப்பர் அடிப்படை வாகன டயர் உற்பத்தி போன்ற கைத்தொழில்களில் செயற்கை இறப்பர் தட்டுப்பாடு ஒரு முக்கிய பிரச்சினையாககாணப்படுகின்றது. இதனால் இறப்பர் மீள்நடுகை மற்றும் புதிய இறப்பர் மரக் கன்றுகளை நடுதல் என்பவற்றுக்காக நாம் நிதியுதவியினை இரட்டிப்பாக்கியுள்ளோம். இதற்காக ரூபா 800 மில்லியன் ஏற்கெனவே ஒதுக்கப்பட்டுள்ளது.

29. தற்போது உள்ளூர் வாகன டயர் தயாரிப்பாளர்களின் உற்பத்திகளை தரப்படுத்தல் மற்றும் பரிசோதனை செய்வதற்கு நாட்டில் உரிய வசதிகள் காணப்படுவதில்லை. ஆகவே, நவீன வசதிகளைக் கொண்ட ஆய்வுகூட வசதிகள் ஏற்றுமதி அபிவிருத்தி சபையினால் தனியார் துறையின் பங்களிப்புடன் உருவாக்கப்படும்.

30. தெங்குப் பொருள் உற்பத்திக் கைத்தொழில் பெறுமதி சேர்க்கைக்கு பெறுமளவிலான சந்தர்ப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. எவ்வாறாயினும், நாட்டில் இத்தொழிற் துறையின் ஒழுங்குபடுத்தல் வேலைச் சட்டகமானது இத்துறையில் தொழில் முயற்சியாளர்கள்

முதலீடுகளை மேற்கொள்வதற்குத் தடையாகவுள்ளது. இதன் காரணமாக தற்போது நடைமுறையிலுள்ள உலர்த்திய தேங்காய்த் துருவல் பதப்படுத்தல் முறைமை, தேங்காய் நொறுக்கிகள், சிரட்டைக் கரி என்பவற்றுக்கான பதப்படுத்தல் முறைமைகளிற்கான அனுமதிப்பத்திர செயன்முறையை இலகுபடுத்தக்கூடிய வகையில் தற்போதுள்ள நடைமுறைகள மீளாய்விற்குட்படுத்தப்படும்.

31. களிமண், மூலப்பொருளகழ்வு மற்றும் இடத்துக்கிடம் எடுத்துச் செல்லல் போன்ற செயற்பாடுகளின் போது மட்பாண்டக் கைத்தொழிலும் மேற்போந்த பிரச்சனைகளிற்கு முகம் கொடுக்கின்றது. ஆகவே தேவையான சூழல் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் அதேவேளை தற்போதுள்ள ஒழுங்குமுறைகள் மீளாய்வு செய்யப்பட்டு இத்தொழிற்றுறை மேம்படுத்தப்படும்.

32. உலகச் சிறப்புமிக்க இலங்கை கறுவா உற்பத்தி பல்வேறுபட்ட பிரச்சினைகளை முகங்கொடுக்க வேண்டியுள்ளது. எவ்வாறாயினும், உலகச் சந்தையில் அதன் ஒப்பீட்டு அனுகூலத்தினை தக்கவைத்துக் கொண்டுள்ளது. ஆகவே, அனைத்துக் கறுவா ஏற்றுமதியாளர்களும் ஏற்றுமதியின் போது தரக் கட்டுப்பாட்டு பரிசோதனைச் சான்றிதழைப் பெற்றுக் கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் பரிசோதனையின் போது தேர்ச்சி பெறாத ஏற்றுமதியாளர்கள் 12 மாதங்களுக்குள் தமது செயற்பாடுகளை சீர்செய்து கொள்வதற்குத் தேவையான உதவிகள் ஏற்றுமதி அபிவிருத்திச் சபையினால் அமுல்படுத்தப்படும் ஏற்றுமதிச் சந்தை நுழைவுத் திட்டத்தின் ஒரு பகுதியாக வசதியளிக்கப்படுவர்.

33. பலப்பிட்டி - கொஸ்கொடையில் அமைந்துள்ள கறுவா பயிற்சி நிலையம் கறுவாப் பட்டை உரிப்பவர்களின் தட்டுப்பாட்டினை நீக்கும் வகையில் அதன் முழுமையான செயற்பாடுகளை மேம்படுத்தும்.

34. இலங்கை கறுவா, அதன் உற்பத்திகளின் தனித்தன்மையினைப் பேணும் வகையில் நாட்டின் உற்பத்தி அடையாளத்தினை பாதுகாத்தல் என்ற கொள்கைக்கிணங்க புவியியல் தனித்தன்மை அடையாளத்தினை பெற்றுக் கொள்ளுதல் மற்றும் அதனைப் பேணுவதற்காக ஆதரவளிக்கப்படும்.

35. சிறந்த நீர் முகாமைத்துவத்தினை உறுதி செய்யும் முகமாக விவசாய மற்றும் பெருந்தோட்டத் தொழில்துறை என்பவற்றுக்கு வசதியேற்படுத்திக் கொடுக்கும் முகமாக நடைமுறைப்படுத்தப்படும் மொரகஹகந்த களுகங்கை பல்நோக்கு அபிவிருத்தித் திட்டம் எதிர்வரும் 2020 இல் நிறைவுபடுத்தப்படும். வயம்ப கால்வாய், மினிப்பே மற்றும் வடமத்திய மாகாண கால்வாய்கள் என்பன மூலம் மொரகஹகந்த நீர்த்தேக்கத்திலிருந்து நீர் பற்றாக்குறையுள்ள பிரதேசங்களுக்கு நீரைக் கொண்டு செல்வதற்கான செயற்பாடுகள் விரைவில் ஆரம்பிக்கப்படும். இதன் மூலம் சிறுபோக மற்றும் பெரும்போக நெற்செய்கை உறுதிப்படுத்தப்படும். இச் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் முகமாக நாம் ஏற்கெனவே ரூபா 12,000 மில்லியனை ஒதுக்கீடு செய்துள்ளோம். தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக தேயிலைச் சபையுடனான கலந்துரையாடல் மூலம் உடனடித் தீர்வொன்று பெற்றுக்கொடுக்கப்படும்.

36. 'நங்வமு லங்கா' எனும் தொனிப்பொருளில் நுண் மற்றும் சிறு கைத்தொழில்அபிவிருத்திச் செயல்திட்டத்தினை நான் முன்மொழிகின்றேன்.

37. தெதுறு ஓயா செயற்திட்டம், மாணிக்க கங்கை நீர்த்தேக்கத் திட்டம் மற்றும் மொரான

நிர்த்தேக்கத் திட்டம் என்பன உள்ளடங்கலாக 7 பிரதான கருத்திட்டங்களில் கால்வாய்கள் மற்றும் அணைக்கட்டு நிர்மாணப் பணிகளை பூரணப்படுத்துவதற்காக 2019 இல் மேலும் ரூபா 2,410 மில்லியன்களை ஒதுக்கியுள்ளேன். இவற்றின் மூலம் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சுமார் 21,000 குடும்பங்கள் நேரடிப் பயனைப் பெறுவார்கள்.

38. கௌரவ சபாநாயகர் அவர்களே, ஜரோப்பிய ஒன்றியம் இலங்கையின் மீன்பிடி உற்பத்திகளுக்கான அதன் சந்தையைத் திறந்துள்ளதுடன் ஜரோப்பிய ஒன்றியத்துக்கான மொத்த கடல் உணவு ஏற்றுமதிகளானது 14 சதவீதத்தினால் அதிகரித்து 2018 இல் அதன் பெறுமதி 29 மில்லியன் ஜக்கிய அமெரிக்க டொலர்களாகும். அதேவேளை வேண்டப்படும் தரத்தினைப் பேண முடியாமையானது தொடர்ந்தும் நிரம்பலுக்கான தடையாகக் காணப்படுகிறது.

39. நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் துறைமுக புனர்நிர்மாண வேலைத்திட்டம், நங்கூரத்தளம் மற்றும் இறங்கு தளங்கள் ஆகிய வேலைத்திட்டங்களை நிறைவு செய்வதற்காக ரூபா 1,300 மில்லியன் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன்பருத்தித்துறை மற்றும் பேசாலைஆகிய 2 புதிய துறைமுகங்களை அமைப்பதற்கான வேலைகளை ஆரம்பிப்பதற்கும் மண்டைதீவில் நங்கூரத்தளத்தினை அமைப்பதற்குமான வேலைகள் ஆரம்பிக்கப்படும்.

40. நீண்ட வரிசைப் படகுகள் மற்றும் பல்தின படகுகளின் களஞ்சிய வசதிகள் மற்றும் பாதுகாப்பு நியமங்களை மேம்படுத்துவதற்கான உதவிகள் வழங்கப்படும். இதற்காக'என்டர்பிறைஸ் ஸ்ரீ லங்கா' நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 'ரண் அஸ்வன்ன' சகாய கடன் திட்டத்தின் கீழ் அரசாங்கம் 50 சதவீத செலவினை ஏற்றுக் கொள்கின்றது. இதற்கு மேலதிகமாக குளிரூட்டப்பட்ட கடல் நீரை பேணுவதற்கானபொறியினைக் கொள்வனவு செய்தல் மற்றும் பொருத்துதல் மற்றும் அதிகுளிரூட்டப்பட்ட கடல்நீர் முறைமையைப் பொறுத்துவதினூடாக பிடிக்கப்படும் மீன்களின் தரத்தினைப் பேணுதல், கப்பல் கண்காணிப்பு முறைமை, படகிலுள்ளவர்களைக் கண்டுபிடிப்பதற்கான நுண்ணிய தேடுதல் கருவிகள் போன்ற பாதுகாப்புக் கருவிகளை பெற்றுக் கொள்வதற்கு மிகுதி 50 சதவீத நிதியினை இத்திட்டத்தின் கீழ் பெற்றுக் கொள்ளலாம்.

41. நாம் ஆரம்பப் பாடசாலைகளிலுள்ள மாணவர்களுக்கு இலவசமாக பால் வழங்குவதன்

மூலம் அவர்களின் ஊட்டச்சத்தினை மேம்படுத்துவோம். இச்செயற்திட்டம் இலங்கை

முழுவதுமுள்ள கிராமிய பாடசாலைகளில் ஆரம்பிக்கப்படும்.

42. கௌரவ சபாநாயகர் அவர்களே, நாம் வலுவிழந்த மற்றும் சமூகத்தில் பின்தள்ளப்பட்டவர்களின் உரிமைகளை வலுப்படுத்துவதற்கு விசேட கவனம் செலுத்தும் அதேவேளை, அனைத்து மக்களினதும் உரிமைகளையும் உறுதிப்படுத்துவோம்.அதேநேரம் எமது சமூகத்தில் பொருளாதார சுதந்திரம் மற்றும் மக்களின் வலுவூட்டலினை தடுக்கும் சமத்துவமின்மையை நீக்குதல் வேண்டும்.

43. கௌரவ சபாநாயகர் அவர்களே, எமது நாடு நடுத்தர வருமானம் பெறும் நாடு என்ற அந்தஸ்தினை அடைந்திருக்கும் நிலையில், அதிநவீன அதிவேக நெடுஞ்சாலைகள்அமைப்பதில் பல மில்லியன்களை முதலீடு செய்து கொண்டிருக்கும் அதேவேளை எமது நாட்டில் சுமார் 260,000 வீடுகள் அடிப்டை துப்புரவேற்பாடுகளற்ற நிலையில் காணப்படுகின்றன. உதாரணமாக அம்பாந்தோட்டை மாவட்டமானது கலிபோர்ணியா பாணியில் பாரிய கருத்திட்டங்கள் மற்றும் அதிவேக நெடுஞ்சாலைகள், சீன பாணியில் மாநாட்டு மண்டபங்கள் மற்றும் விளையாட்டுத் தொகுதிகள் என்பவற்றைக் கொண்டிருந்த போதிலும் 15,000 இற்கும் மேற்பட்ட மக்கள் அடிப்படை துப்புரவேற்பாடுகளற்ற நிலையில் வாழ்கின்றனர். ஆகவே, நாட்டில் காணப்படும் துப்ரவேற்பாடுகளற்ற அனைத்து வீடுகளுக்கும் இரண்டு வருடங்களுக்குள் மலசலகூட வசதிகள் பெற்றுக் கொடுக்கப்படும்.இதன் மூலம் 1 மில்லியன் மக்கள் பயன்பெறுவர்.

44. பேருந்து நிலையங்கள் மற்றும் புகையிரத நிலையங்களில் காணப்படும் துப்புரவேற்பாட்டு வசதிகள் மிகவும் சீரற்ற நிலையில் காணப்படுகின்றன. ஆண்கள், பெண்கள் மற்றும் அங்கவீனர்களுக்கென பிரத்தியேகமான வசதிகளுடன் துப்பரவேற்பாட்டு வசதிகளை மேம்படுத்துவதற்காக நிதி ஓதுக்கீடு செய்யப்படும். இவ்வசதிகள் மேம்படுத்தப்பட்டதன்பின்பு இவற்றைப் பராமரிப்பதற்காக தனியார்துறையினர் அழைக்கப்படுவர்.

45.எமது பல்கலைக்கழகங்களில் 50 சதவீதம் அல்ல,அதற்கு மேற்பட்டோர் பெண் மாணவிகளாகக் காணப்படுவதையிட்டு நாம் பெருமைப்படும் அதேவேளை, தொழிற்படையில் பெண்களின் வீதமானது 30 சதவீதமாகவே காணப்படுகின்றது. இது அவர்களை நிதி ரீதியில் தங்கியிருப்போராகவும் மற்றும் வலுவிழந்தவர்களாகவும் மாற்றியுள்ளது. பொருத்தமான சிறுவர் மற்றும் முதியோர் பராமரிப்பு வசதிகள் மற்றும் நெகிழ்ச்சியற்ற தொழில் சட்டங்கள் என்பன பெண்கள் தொழிற்படையிலிருந்து வெளியேறுவதற்கு அல்லது நுழைவதற்கு தடையான பிரதான

காரணங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

46. இந்நிலைமையைத் தவிர்க்கும் முகமாக 250 இற்கும் மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்டுள்ள வர்த்தக நிறுவனங்களில் குழந்தைப் பராமரிப்பு வசதிகளை உருவாக்குவதை ஊக்குவிக்கின்றேன். அதேபோல் தெரிவு செய்யப்பட்டுள்ள பாடசாலைகளில் பாடசாலைக்கு பின்னரான விடுமுறை நிலையங்களை உருவாக்குவதற்கு உதவியளிக்கப்படும்.'என்டர்பிறைஸ் ஸ்ரீ லங்கா' நிகழ்ச்சித்திட்டத்தின் 'ரக்கவர்ண' சலுகைக் கடன் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் குழந்தைப்பராமரிப்பு வசதிகளை உருவாக்குவதற்கு தனியார் துறையினருக்கு வசதியளிக்கப்படும்.

47. மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சானது குழந்தைகள் பராமரிப்பு நிலையங்கள், பாடசாலை நேரத்திற்குப் பிந்திய விடுமுறை பராமரிப்பு நிலையங்கள் மற்றும் அதுபோன்ற ஏனைய வசதிகளின் உருவாக்கம் மற்றும் செயற்பாடுகள் தொடர்பாக தேவையான வழிகாட்டல்கள் மற்றும் ஒழுங்குவிதிகளை வெளியிடும்.

48. தொழிற்படையில் பெண்களின் வரையறுத்த பங்குபற்றலானது பொருளாதார வளர்ச்சிக்கான இடையூறொன்றாக அடையாளம் காணப்பட்டுள்ளது. தனியார் துறையில் பணியாற்றும் பெண்களுக்கு வசதியளிப்பதனை நாங்கள் ஊக்குவிப்போம். மூன்று மாதங்களுக்கானகட்டாய பிரசவ விடுமுறை காலத்திற்கான சம்பளத்தில் 50 சதவீதத்தினை நிறுவனெவரியினை கனிப்பீடு செய்யும் போது மேலதிகமாக கழித்துக் கொள்வதற்கு இடமளிக்கப்படுவதோடு, ஊழியரொருவருக்கு உயர்ந்த பட்சமாக மாதத்திற்கு 20,000 ரூபாவினைக் கழிப்பதற்கு அனுமதிக்கப்படும். 4 ஆவது மாதத்திற்கான பிரசவ விடுமுறைக்கு இம்மேலதிகக் கழிப்பனவினை 100 சதவீதமாக நாங்கள் அதிகரிப்போம்.இச்சலுகையானது 5 வருட காலத்திற்கு ஏற்புடையதாகும்.

49. நாட்டின் சனத்தொகையில் பெண்கள் 50 சதவீதத்திற்கு மேற்பட்டதாகக் காணப்படினும், வியாபாரத்துறை உயர் பதவிகளில் அவர்களின் தோற்றமானது மிகவும் வரையறுக்கப்பட்டதாகும். இது பல்வேறுபட்ட சமூகக் கட்டமைப்பு மற்றும் வியாபார நடைமுறைகளால் உருவாக்கப்பட்டதாகும். அதனால் பெண்ணானவள் சமூகத்தில் முக்கிய தீர்மானமெடுக்கும் வகிபாகத்திலிருந்து தடுக்கப்படுகின்றாள். ஆகவே பங்குச் சந்தையில் நிரல்படுத்தப்பட்ட கம்பனிகளின் இயக்குனர் சபைகளில் பெண்களின் அதிகளவான பங்குபற்றுதலினை ஊக்குவிப்பதற்காக தொடர்ச்சியான அனுகுமுறை ஒன்றினை முன்மொழிகின்றேன். பிணையங்கள் மற்றும் பங்குப் பரிவர்த்தனை ஆணைக்குழு இம்முன்மொழிவினை செயற்படுத்துவதற்கு ஊக்குவிக்கப்படும்.

50. பெண்கள் பெருமளவில் பொருளாதார நடவடிக்கைகளில் பங்குபற்றக் கூடிய வகையில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் பொருட்டு அவர்கள் பகுதிநேர வேலை,நெகிழ்ச்சியான வேலை நேரம் மற்றும் வீட்டிலிருந்து வேலையாற்றல் போன்றவற்றிற்கு இடமளிக்கும் வகையில் தொழில் சட்டத்தினை திருத்துவதற்கு இச்சபையின் ஆதரவினை வேண்டிக் கொள்கின்றேன்.

51. நாட்டில் முதியோர் பாதுகாப்பு நிலையங்களின் தரமானது பொருத்தமான ஒழுங்குபடுத்துதல் வேலைச் சட்டகம் மற்றும் போதியளவான சேவை வழங்கல் காணப்படாமையினாலும் வேறுபட்டுக் காணப்படுகின்றது. ஆகவே, தேசிய முதியோர் செயலகமானது வலுப்படுத்தப்படுவதோடு பொருத்தமான ஒழுங்குபடுத்தல் சட்டகத்தினை உருவாக்குமாறும் வேண்டிக் கொள்கின்றோம். மேலும் 'என்டர்பிறைஸ் ஸ்ரீலங்கா' நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 'ரக்கவர்ண' சலுகைக் கடன் திட்டத்தினூடாக தனியார்த்துறையினர் முதியோர் பராமரிப்பு வசதிகளில் முதலீடு செய்வதற்கு ஊக்குவிப்பு அளிக்கப்படும்.

52. தற்போது மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்தக் கொடுப்பனவாக ரூபா 3,000 வழங்கப்படுகின்றது. இம்மாதாந்த கொடுப்பனவை 5,000 ரூபாவாக அதிகரிப்பதோடு மேலதிகமாக தகுதி பெற்ற குறைந்த வருமானம் பெறும் 72,000 பேரை உள்வாங்குவதற்கும் ரூபா 4,320 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்படும். இவ்வொதுக்கீடு மூலம் காத்திருப்புப் பட்டியல் நீக்கப்படும்.

53. அனைவரையும் உள்ளடக்கிய தொழில்வாய்ப்பினை ஊக்குவிக்குமுகமாக குறைந்தபட்சம் 5 மாற்றுத் திறனாளிகளுக்கு தொழிலில் வழங்கும் நிறுவனங்களுக்கு ஒரு நபருக்கு 50 சதவீதமான சம்பளம் மானியமாகப் பெற்றுக் கொடுக்கப்படும். இது ஆளொருவருக்கு ஆகக்கூடியது 15,000 ரூபாவாக 24 மாதங்களுக்கு பெற்றுக் கொடுக்கப்படும்.

54. அதேபோன்று தற்போது 21,000 தீராத சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதாந்தம் ரூபா 5,000 உதவித் தொகையாக வழங்கப்படுகின்றது. மேலும் 5,000 நோயாளிகளை உள்வாங்கும் வகையில் இத்திட்டமானது விரிவுபடுத்தப்படும். இதன் மூலம் உதவித் தொகைக்காகக் காத்திருப்போர் பட்டியல் நீக்கப்படுவதோடு இதற்காக ரூபா

1,840 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்படும்.

55. எமது சிறைச்சாலைகளானது போதைப் பொருள் கடத்தல்காரர்களன்றி போதைப் பொருள் மாபியாக்களினால் பாதிக்கப்பட்ட அப்பாவிகளினால் நிரம்பி வழிகின்றன. இவர்களின் பெரும்பாலானோர் 30 வயதிற்குக் குறைவானவர்களாகும். இவர்களை பாரிய குற்றவாளிகளுடன் அடைத்து வைப்பது அவர்களை போதைப் பொருள் பாவனையிலிருந்து தடுப்பதற்கான சிறந்த முறையாகாது. இவ்வாறான கைதிகளுக்கு புனர்வாழ்வளிப்பதற்கான வசதிகளுடன் சிறைச்சாலை திணைக்களத்தின் மேற்பார்வையில் அம்பேபுஸ்ஸ மற்றும் வீரவில ஆகிய இடங்களில் 2 'கிப்புட்ஸ்' முறையிலான பண்ணைகள் உருவாக்கப்படும். இம்முயற்சியில் தனியார்துறை மற்றும் சிவில் சமூகம் பங்குபற்றுவது ஊக்குவிக்கப்படும்.

56. தற்போது சிறிய குற்றங்களுக்காக தண்டனை வழங்கப்பட்ட பெண்களினால் சிறைச்சாலைகள் நிரம்பிக் காணப்படுகின்றது. அவர்கள் தனிமையில் விடப்படுவதுடன் எவ்வித கவனிப்புமற்று புனர்வாழ்வளிக்கப்படாத நிலையில், அவர்களும் பாரிய குற்றவாளிகளாக மாற்றப்படலாம். ஆகவே, சிறந்த வசதிகளுடன் தொழிற்பயிற்சி மற்றும் அபிவிருத்தி துறைகளான கலை, கைவினை மற்றும் வினைத்திறன்மிக்க வாழ்வாதார திறன்களுடன் பயிற்சி வசதிகளைக் கொண்ட நிலையமொன்றினை தொம்பே பிரதேசத்தில் உருவாக்கப் பொருத்தமான இடத்தினை அடையாளங் காண்பதற்கு முன்மொழிகின்றேன்.

57. 2018 ஆண்டுக் காலப்பகுதியில் மக்களின் வீட்டுத் தேவைகளைப் பெற்றுக் கொடுப்பதில் குறிப்பிடும்படியான முன்னேற்றத்தினை நாம் அடைந்துள்ளோம். எமது முயற்சியானது விசேடமாக சமூகத்தின் வலுவிழந்தவர்களுக்கான வீட்டு வசதிகளை பெற்றுக் கொடுப்பதுடன், அனைவரினதும் வீட்டுப் பிரச்சினையினைத் தீர்ப்பதற்கு வசதியளிப்பதுமாகும். விசேடமாக குறைந்த வருமானம் பெறும் நகர, கிராமிய, பெருந்தோட்டத் தொழிலாளர் மற்றும் வடக்குக் கிழக்கு ஆகிய வீடமைப்புப்

பிரச்சினைகளை தீர்ப்பதாகும். இது பிரதானமாக நகர மீள்உருவாக்கும் கருத்திட்டம் மற்றும் மாதிரிக் கிராம நிகழ்ச்சித் திட்டம் என்பவற்றினூடாக அமுல்படுத்தப்படும்.இதற்காக ரூபா 24,500 மில்லியன் ஏற்கனவே 2019 இல் ஒதுக்கப்பட்டுள்ளன.

58. அதேவேளை, 2019 ஆம் ஆண்டு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 15,000 செங்கற்களிலாலான வீடுகளின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படும். இதற்காக ரூபா 4,500 மில்லியன் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக மேலும் ரூபா 5,500 மில்லியன்பெற்றுக் கொடுக்கப்படும். வடக்கிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளானது தொடர்ந்தும் அமுல்படுத்தப்படுவதுடன், தேவையான வளங்களும் பெற்றுக் கொடுக்கப்படும்.

59. பல நியாயமாக விலையிடப்பட்ட நடுத்தர வருமான வீடமைப்புத் திட்டங்கள் ஏற்கனவே பூரணப்படுத்தப்பட்டுள்ளன. 2019ஆம் ஆண்டில் வாத்துவை, ராகமை, யக்கலை,குண்டசாலை,பொரலை மற்றும் பன்னிப்பிட்டிய போன்ற இடங்களில் தேசிய வீடமைப்பு அதிகார சபை மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் மேலும் சில வீடமைப்புத் திட்டங்கள் பூரணப்படுத்தப்படவுள்ளதுடன், ஆரம்பிக்கப்படவுமுள்ளன.

60. எவ்வாறாயினும், விசேடமாக நடுத்தர வருமானம் பெறும் முதற் தடவையாக வீட்டினைக் கொள்வனவு செய்யும் புதிய இளம் தம்பதிகளுக்கு வீடொன்றினைக் கொள்வனவு

செய்வதற்கு அல்லது தங்களது முதல் வீட்டினை நிர்மாணித்துக் கொள்வதற்கு'என்டர்பிரைஸ் ஸ்ரீ லங்கா' நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ்இக்கடன் திட்டத்தின் கீழ் 'ஹோம் ஸ்வீட் ஹோம்' கடன் திட்டமானது ரூபா. 10 மில்லியன் வரை 6 சதவீத வட்டியில் 25 வருட காலத்தில் திருப்பிச் செலுத்தல் என்ற வகையில் பெற்றுக் கொள்ளலாம். இக்கடன் திட்டமானது தனியார் துறையினால் நிர்மாணிக்கப்படும் வீடுகள் அல்லது நடுத்தரத்திலான மாடிவீடுகளை கொள்வனவு செய்வதற்கும் பெற்றுக் கொடுக்கப்படும்.

61. எமது வெளிநாட்டுத் தொழிலாளர்கள் வீடொன்றினைக் கட்டிக் கொள்வதில் பெரும் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். ஆகவே, அவர்களது வீடொன்றினைக் கட்டிக் கொள்ளும் கனவினை நிறைவேற்றக் கூடிய வகையில் 'என்டபிரைஸஸ் ஸ்ரீ லங்கா' நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 'சிகின மாளிகா' சலுகைக் கடன் திட்டமானது அறிமுகப்படுத்தப்படும். வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து தற்போது வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் இக்கடன் திட்டத்தின் கீழ் ரூபா 10 மில்லியன் வரை 15 வருட காலத்தில் திருப்பிச் செலுத்தல் என்றவகையில் பெற்றுக்கொள்ளலாம். இக்கடனுக்கான வட்டிச் செலவினத்தில் 75 சதவீதத்தினை அரசாங்கம் பொறுப்பேற்கும். வெளிநாட்டில் வேலைபுரியும் குடும்பங்களுக்கு உதவியாக சர்வதேச தெலைத் தொடர்பு அறவீடானது நீக்கப்படும்.

62. ஏற்றுமதி மற்றும் ஏனைய வெளிநாட்டு வருமான மூலங்களைத் துரிதப்படுத்துதல் நிலைபேறான பொருளாதார வளர்ச்சி மற்றும் கடன் மீள் கொடுப்பனவு இயலுமை என்பவற்றிற்கு மிக முக்கியமானதாகும். 2018ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் நாங்கள் ஏற்றுமதிச் சந்தைப் பிரவேச நிகழச்சித் திட்டம் மற்றும் தேசிய ஏற்றுமதி உபாயத் திட்டம் என்பவற்றின் வெளியீட்டினை அறிவித்தோம். இவ்வருடமும் அவற்றிற்கான ஆதரவுகள் தொடரப்படுவதுடன், ஏற்றுமதி சந்தை பிரவேச நிகழ்ச்சித் திட்டத்திற்கு ரூபா. 400 மில்லியன்களும், தேசிய ஏற்றுமதி உபாயத் திட்டத்திற்கு ரூபா 250 மில்லியன்களும் ஒதுக்கப்படும். தேசிய ஏற்றுமதி உபாயமானது தேசியத் தரத்திலான உட்கட்டமைப்பு உபாயத்தினை அமுல் படுத்துவதினையும் உள்ளடக்கியதாகும். இது ஏற்றுமதி உற்பத்திப் பொருள் அபிவிருத்தி மற்றும் இறக்குமதித் தர பரிசோதனை என்பவற்றிற்கான தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்துவதற்கான அரச தனியார் பங்களிப்பாகும்.

63. அரசாங்கமானது பல வர்த்தக உடன்படிக்கைகளின் வலைப்பின்னல் உபாயத்திற்கு அர்ப்பணித்துள்ளது. இவை பிராந்திய பெறுமதிச் சங்கிலிகளுடன் தொடர்புபட்டதாகும்.

சிங்கப்பூருடனான சுந்திர வர்த்தக உடன்படிக்கையின் வெற்றிகரமான பூரணப்படுத்தலுடன், இதன் செய்முறையின் போது கற்றுக் கொண்ட பாடங்களானது தற்போது கலந்துரையாடப்பட்டு வரும் இந்தியா, சீனா மற்றும் தாய்லாந்துடனான சுதந்திரமானவர்த்தக உடன்படிக்கைகளின் கலந்துரையாடலின் போது கவனத்திற் கொள்ளப்படும்.

64. ஒரு 'இந்தியச் சந்தைக்கான நுழைவு' மற்றும் 'சீன சந்தைக்கு நுழைவதற்கான உபாயம்' இச்சந்தைகளில் இலங்கை தொழில் முயற்சியாளர்களின் வெற்றிகரமான வரலாறுகளின் அடிப்படையில் இவ்வுபாயங்கள் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இச்செயற்பாடானது தனியார் துறையின் பங்களிப்புடன் முக்கிய சந்தைகளின் முன்னுரிமைத் துறைகளுக்கான வர்த்தக இல்லங்கள் உருவாக்கப்படுவதினூடாக ஆதரவளிக்கப்படும். இவ்வர்த்தக இல்லங்களானது இலங்கை நிறுவனங்கள் அச்சந்தைகளில் விநியோக வலையமைப்புக்களை தேடிக்கொள்ளுதல், கொள்வனவாளர்கள் தொடர்புகள் மற்றும் ஏனைய தள உதவிகளை பெற்றுக் கொள்வதில் உதவிகளைப் பெற்றுக் கொடுக்கும்.

65. வாழ்க்கைச் செலவினைக் குறைத்தல் மற்றும் பொருளாதாரத்தில் ஒப்பீட்டு அனுகூலத்தினை மேம்படுத்தும் ஒரு அளவுகோளாக கடந்த வருட வரவுசெலவுத் திட்டத்தில் அனைத்து துணைத் தீர்வைகளையும் கட்டம் கட்டமாக நீக்குவதற்கு முன்மொழியப்பட்டது. இது 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 1200 துணை வரிகளை நீக்குவதுடன் ஆரம்பமாயிற்று. இச்செயற்பாடானாது அனைத்து இயைபு முறைக் குறியீடுகளும் ஒரு இறக்குமதி செஸ் வரி மூலம் இல்லாதொழிக்கப்படுகின்ற வகையில் 2019ஆம் ஆண்டிலும் தொடர்ந்து முன்னெடுக்கப்படும். கைத்தொழில்கள் இதற்கு இயைபாகுவதற்கு அவசியமான கால அவகாசத்தினைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் துணைத் தீர்வை இல்லாதொழித்தலானது ஐந்து வருடங்களுக்கு இடம்பெறும்.

66. வியாபாரங்கள் மற்றும் முதலீடுகளின் மீதான ஆரம்பச் செலவினை குறைக்கும் முகமாக பொறிகள் மற்றும் உபகரணங்கள் மீதான (இயைபு முறைக் குறியீடு அத்தியாயம் 84 மற்றும் 85) துறைமுகம் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீடுகளை உயர்ந்த பட்சம் 2.5 சதவீதமாக குறைப்பதற்கு நான் முன்மொழிகின்றேன். மேலும், நிர்மாணத்துறை, சுற்றுலா மற்றும் தயாரிப்புத் துறைகளின் கிரயத்தினை அதிகரிக்கச் செய்யும் இடைநிலைப் பொருட்கள் மீதான செஸ் வரியினை குறைப்பதற்கான நிகழ்ச்சித் திட்டத்தினைத் துரிதப்படுத்துவதற்கும் நான் முன்மொழிகின்றேன். இப்பொருட்கள் மீதான செஸ் வரியானது மூன்று வருட காலத்தின் போது இல்லாதாக்கப்படும்.

67. இச்செயன்முறையின் போது இறக்குமதிகளின் மூலம் பாரிய போட்டித் தன்மையினை எதிர்கொள்ளும் உள்ளூர் கைத்தொழில்களுக்கு ஆதரவளிப்பது இன்றியமையாததாகும்.மிகைப் பொருள் திணிப்பெதிர்ப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான சட்டவாக்கம்இச்சபையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக வர்த்தக சீராக்கல் நிகழ்ச்சித் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இது வலுவிழந்த நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்கள் தமது தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் பயிற்சிகள் மீதான செலவுகளை ஈடு செய்வதற்கு நிதியுதவிகளை பெற்றுக் கொடுக்கும். அனைத்து இயைபு நிலைக் குறியீடுகளிலும் 10 வீதமானவை மிகவும் உணர்வுபூர்வமான பொருட்களாகும். இவை முழுமையான துணைத் தீர்வை ஒழிப்பிற்கு உட்படமாட்டாது என்பதினை நாம் உறுதிப்படுத்துகின்றோம். இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் உட்பட அனைத்துப் பொருட்களினதும் தர நிர்ணயத்தினை உறுதி செய்யும் முகமாக தேசிய தர உட்கட்டமைப்பிற்குத் தேவையான மேம்படுத்தல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

68. வர்த்தக சீராக்கல் நிகழ்ச்சித் திட்டத்தினை அமுல்படுத்துவதற்கான பரிந்துரைகளை வழங்கும் முகமாக உபாய அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சின் கீழ் ஒரு வர்த்தக மற்றும் உற்பத்தித் திறன் ஆணைக்குழுவினை உருவாக்குவதற்கு நான் முன்மொழிகின்றேன். வர்த்தக சீராக்கல் நிகழ்ச்சித் திட்டத்தினை இரண்டு வருடங்களில் அமுல் படுத்துவதற்கு ரூபா 500 மில்லியன்களை ஒதுக்கீடு செய்வதற்கு முன்மொழிகின்றேன்.

69. நாங்கள் தொழில் முயற்சி புத்தாக்க நிகழ்ச்சித் திட்டத்தினை ஆரம்பிக்கவுள்ளோம். இது இலங்கை நிறுவனங்களினால் புதுமையான புதிய பொருட்கள் மற்றும் தொழில்நுட்பங்களை அபிவிருத்தி செய்வதற்கு மற்றும் கண்டுபிடிப்பதற்கு உதவியளிக்கும். இத்திட்டமானது 3வருட காலப்பகுதியில் அமுல்படுத்தப்படும். கருப்பொருளுக்கான ஆதாரம், ஆராய்ச்சி அபிவிருத்தி மற்றும் தொழில்நுட்ப உள்வாங்கல் என்பன மீதான பொருத்துகை மானியம் பெற்றுக் கொடுக்கப்படும்.

 

 

 

 

70. தொழில் முன்னெடுப்புக்களுக்கு ஆதரவளிக்கும் முகமாக கடந்த வரவு செலவுத் திட்டத்தில் பொறுப்பு வரையறுக்கப்பட்ட பங்குடைமை கட்டமைப்பினை அறிமுகம் செய்வதற்கு முன்மொழியப்பட்டது. இது தொடர்பான ஆரம்ப வரைவு பூரணப்படுத்தப்பட்டுள்ளதுடன், இவ்வருடத்தில் இது சட்டவாக்கமாக அபிவிருத்தி செய்யப்படும்.

71. இலங்கையானது மூலதனச் சந்தையை வங்கி நிதியீட்டத்திற்கு மேலாக அபிவிருத்தி செய்ய வேண்டியுள்ளது. ஆழமான மற்றும் திரவக் கடன் மூலதனச் சந்தையின் முதுகெலும்பானது சிறப்பான அரச பிணையங்கள் சந்தையாகும்.

ஸ்ரீலங்கா அபிவிருத்தி முறிகள் மற்றும் கூப்பன்களற்ற திறைசேரி முறிகள் இயலுமாக்கலை அறிமுகஞ் செய்வோம். இது தொடர்பான அவசியமான உட்கட்டமைப்பு வசதிகளுடன் முதலீடுகளை மேற்கொள்வதற்கு இலங்கை மத்திய வங்கியுடன் இணைந்து செயற்படுவோம்.

72. 2017 மற்றும் 2018 இல் இலங்கையானது வெளிநாட்டு நேரடி முதலீட்டில் என்றுமில்லாதளவிலான அடைவினை காட்டியதுடன், நாட்டில் நிலையான முதலீடுகளை மேலும் விரிவு படுத்துவது அவசியமாகின்றது. ஆகவே மிகப்பெறுமதியான முதலீடுகளை கவர்ந்து கொள்வதற்கு ஊக்குவிப்பு பொதியொன்று முன்மொழியப்படுகின்றது. இது ஐ.அ.டொ. 50 மில்லியன், ஐ.அ.டொ. 100 மில்லியன் மற்றும் ஐ.அ.டொ. 1000 மில்லியனுக்கு மேலதிகமான முதலீடுகளுக்கு முதலீட்டுப் பெறுமதியில் 150 வீதம் வரையிலான மூலதனக் கொடுப்பனவு மற்றும் முதலீடுகள் மீதான முற்பண வரிகள் நீக்கப்படுதல் என்பனவற்றை உள்ளடக்கியதாகும்.

73. தனியார் துறையினருடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து, தனியார் துறையின் சில பொருத்தமான வேண்டுகோள்களை சீர்செய்வதற்கும், அமுல் படுத்துவதற்கும் வசதியளிக்கக் கூடிய வகையில் உள்நாட்டு இறைவரிச் சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொள்வதற்கு முன்மொழிகின்றேன். இவைகள் தொழில்நுட்பக் குறிப்பில் விளக்கப்பட்டுள்ளது.

74. ஏற்றுமதி ஊக்குவிப்பிற்கு வசதியளிக்கக் கூடிய வகையில் பிங்கிரிய மற்றும் போகாவத்த கைத்தொழில் வலயங்களில் வேலைகளுக்கு ஆதரவளிக்கப்படும்.

75. கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் கீழ் காங்கேசன்துறை, மாந்தைக் கிழக்கு,பரந்தன், கொண்டச்சி, கின்னியா, சம்மாந்துறை மற்றும் திருகோணமலையில் கைத்தொழில் பேட்டைகள் உருவாக்கப்படும்.

76. 'தகவல் தொழில்நுட்ப முனைவானது" கலையிலிருந்து விஞ்ஞானத்திற்கான உள்ளகப் பயிற்சி நிகழ்ச்சித் திட்டத்திற்கு வசதியளிக்கக் கூடிய வகையில் விரிவுபடுத்தப்படும்.

இதன் கீழ் 1000 வேலையற்ற கலைத்துறைப் பட்டதாரிகளை தகவல் தொழில்நுட்ப வியாபார செயலாற்றுகைப் பொறிமுறை மற்றும் வெளிவாரி அறிவுச் செயலாற்றுகை ரூபா 250 மில்லியன் முன் மொழியப்பட்டது.

நிறுவனங்களில் ஒரு வருட உள்ளகப் பயிற்சி பெற்றுக் கொடுப்பதுடன் பயிற்சியின் 12 மாதங்களுக்கான மாதாந்த சம்பளத்தின் 50 வீதத்தினை அல்லது உயர்ந்த பட்சமாக 25,000 ரூபாவை அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்படும். இதற்காக ஏற்கனவே ரூபா 300 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

77. நாம் முக்கியமாக தகவல் தொழிநுட்ப சேவைகள் துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் தமது வேதன செலவினத்தில் 35 சதவீதத்தினை மேலதிக செலவாக கழிப்பதற்கு பெற்றுள்ள தகைமையினை நீக்குவோம்.

78. நாம் கடற்படை, சுங்கம், குடிவரவு, தனியான மற்றும் கைத்தொழில் பயிற்சி நிறுவகம்,இலங்கை தர நிர்ணய நிறுவகம் மற்றும் தேசிய நீரியல் வள மூலங்கள் முகவர் போன்ற ஏனைய தேசிய தர உத்தரவாத நிறுவனங்கள் என்பனவற்றை உள்ளடக்கியதான ஒருங்கிணைந்த எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவினை அறிமுகப்படுத்துவோம். சுங்கத் திணைக்களத்தின் கடல் பிரிவினை மீளமைப்பதன் மூலம் சட்டவிரோத கடத்தல் மற்றும் போதைப் பொருள் வர்த்தகம் இல்லாதொழிக்கப்படும்

79. அரசாங்கம் புதிய சுங்க சட்ட நகலினை இயற்றும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளது. இருந்த போதிலும் இந்த இடைப்பட்ட காலத்தில் சில பிரதான மாற்றங்களான வர்த்தக வசதிகளை மேம்படுத்தல் மூலம் வெளிப்படைத் தன்மையை அதிகரித்தல், முறையீட்டு செயற்பாடுகளை அபிவிருத்தி செய்தல், மற்றும் இடர் முகாமைத்துவம் என்பன தொடர்பான விடயங்களில் திருத்தங்களை ஏற்படுத்துவதற்கு பிரேரிக்கின்றேன்.

ஆலோசனை தொடர்பான விடயத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் இவ்வாறான திருத்தங்களிற்கு பங்குபற்றுநர்களின் ஆலோசனை பெறப்பட்டு அதனடிப்படையில் உள்ள ஆதரவினை பெற்றுக் கொள்ளல் வேண்டும்.

80. நிதி அமைச்சின் கீழ் ஓர் வருமான உளவுப் பிரிவு அமைக்கப்படவுள்ளது. எமது பிரதான வருமானம் சேகரிக்கும் திணைக்களங்களான சுங்கம், உள்நாட்டு வருமான வரித் திணைக்களம் மற்றும் மதுவரித் திணைக்களம் என்பவற்றில் வருமான சேகரிப்பினை விரிவுபடுத்தல், சேகரிக்கப்படும் மொத்த வருமானத்தை அதிகரித்தல் பணக்கசிவு மற்றும் வரி ஏய்ப்பினை குறைத்தல் போன்ற வசதிகளை ஏற்படுத்தும் நோக்கில் அமைக்கப்படவுள்ளது.

81. சுங்கவரித் திணைக்களத்தில் அங்கீகரிக்கப்பட்ட பொருளாதார பொறிமுறை செயல் திட்டம் 2019ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட உள்ளது. இது இனங்காணப்பட்ட இடர் குறைந்த வியாபாரிகள் மற்றும் அனுமதி முகவர்கள் ஆகியோருக்கு விரைவுபடுத்தப்பட்ட அனுமதியினை பெற்றுக் கொள்ள வழிவகுக்கும்.

82. அரசாங்கம் நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பாக சில பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலைகளை விதித்துள்ளது. இருந்த போதிலும் நியாயமான விலை சீரமைப்பு மூலம் தடையின்றிய விநியோகம் உறுதிப்படுத்தப்படல் அவசியமானது. இவ்விளைவினை நோக்கி அரசாங்கம் ஒரு பொறிமுறையை அறிமுகப்படுத்தி அதன் மூலம் கட்டுப்பாட்டு விலை தொடர்பான மீளாய்வினை மாற்றி நாணயமாற்று வீதம் மற்றும் ஏனைய மாறிகளைக் கவனத்திற் கொண்டு காலாண்டிற்கொருமுறை நடைமுறைப்படுத்தும்.

83. இரத்தினம் மற்றும் ஆபரண கைத்தொழிலினை மேம்படுத்தும் நோக்கில் பட்டை தீட்டப்படாத இரத்தின இறக்குமதியில் பயன்படுத்தப்பட்ட துறைமுகம் மற்றும் விமான நிலைய அறவீடு, கற்களைப் பதிப்பதற்கான உபகரணம் என்பவற்றுக்கு விதிக்கப்பட்ட சுங்க வரி 7.5 சதவீதத்திலிருந்து 2.5 சதவீதமாக குறைக்கப்படுகிறது.

84. குறைந்த காலப்பகுதியில் அபிவிருத்திக்கு அதிகளவில் பங்களிப்புச் செய்யும் துறையாக சுற்றுலாத் துறை விளங்குகிறது. இத்துறையில் பங்களிக்கப்படும் நிதியினைக் கருத்திற்கொண்டு வெளிநாட்டு நாணய பெறுகைகளை பெற்றுக் கொள்ளும் சுற்றுலா விடுதிகளினை இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் பதிவு செய்யப்படும் போது அறவிடப்படும் தேசக் கட்டுமான வரி நீக்கப்படவுள்ளது.

85. ஹோட்டல்களில் கட்டணச் சிட்டைகள் ஐ.அ. டொலர்களில் வழங்கப்படும் போது பிரயாண முகவர்கள் அதற்கான கட்டணத்தினை ஐ.அ. டொலர்களில் செலுத்துவதனைக் கட்டாயமாக்குவதற்கு நான் முன்மொழிகின்றேன். இது தொடர்பான அறிவுறுத்தல்களை மத்திய வங்கி வெளியிடும்.

86. கௌரவ சபாநாயகர் அவர்களே, முக்கியமாக ஹோட்டல் பதிவுகளை மேற்கொள்வதில் இணைய தள தொழில்நுட்பப் பயன்பாடு காரணமாக பாரம்பரிய விருந்தோம்பல் தொழிற்றுறை முறைசாரா துறையின் வளர்ச்சியுடன் பல்வேறு மாற்றங்களைக் கண்டுள்ளதுடன் தொடர்ந்தும் ஒழுங்குபடுத்தப்படாமலும் காணப்படுகின்றது.

87. இதன் காரணமாக, நாம் இணையத் தள மூலமான ஒதுக்கீடுகளினால் பெறப்படும் நன்மைகளை ஏற்றுக்கொள்ளும் அதேவேளையில் படிப்படியாக சிறிய மற்றும் நடுத்தர தொழிற்றுறையினை முறைசார்ந்த சுற்றுலாத்துறையுடன் இணைத்துக் கொள்ளக்கூடிய தேவையினை கருத்திற் கொள்ளல் அவசியம் அதன்படி 2020 ஏப்ரல் 01 ஆந் திகதியிலிருந்து 5 அறைகளுக்கு மேலதிகமானதாக மேற்கொள்ளப்படும் இணையத்தள பதிவுகள் /வலைத்தள ஒதுக்கீடுகள் ஹோட்டல் அல்லது வேறு நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படுமானால் அவை இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் பதிவு செய்யப்பட்டிருத்தல் வேண்டும். இதனை இலகுபடுத்தும் வகையில் இப் பதிவுச் செயன்முறை மேலும் எளிதாக்கப்படும்.

88. அதேவேளையில், கைத்தொழிற்றுறையினை விளையாட்டுச் சுற்றுலா போன்ற புதிய முன்னெடுப்புகளுக்கு பன்முகப்படுத்துகின்ற எமது கொள்கையினைக் கருத்திற் கொண்டு இலங்கையினை சர்வதேச கோ-கார்ட் விளையாட்டுக்குச் சிறந்த இடமாக முன்னேற்றுவதற்கு இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து தனியார் துறையினை ஊக்குவிப்பதற்கு நான் முன்மொழிகின்றேன். எனவே, இந்த வகையில் கார்ட் பந்தைய வாகனங்கள் மற்றும் கார்ட் வாகனங்களுக்குப் பயன்படுத்தப்படும் ரயர்கள் மீதான செஸ் வரி மற்றும் சுங்கத் தீர்வையினை நீக்குவதற்கு நான் முன்மொழிகின்றேன்.

89. நிறுவன வருமான வரியான 14 சதவீதத்தினை செலுத்துகின்ற ஏற்றுமதித் துறைகளின் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதார சேவைக் கட்டணம் 0.5 சதவீதத்திலிருந்து 0.25 சதவீதமாக குறைக்கப்படவுள்ளது. இது ஏற்றுமதிகள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலா போன்றவற்றிற்கு சிறந்த உந்துதலாக அமையும்.

90. ஹோட்டல்களை புனர்நிர்மாணம் செய்வதற்கு வசதியேற்படுத்திக் கொடுக்கும் முகமாக சில தேர்வு செய்யப்பட்ட பொருட்கள் தொடர்பான செஸ் வரி வீதம் குறைக்கப்படும்.

91. மோசமான நிலையில் காணப்படும் மத்திய கலாசார நிதியம் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதத்தில் ஓய்வு அறைகள், அறிவித்தல் பலகைகள், பாதுகாப்புச் சாவடிகள், தகவல் மையங்கள் போன்ற பொது வசதிகளை உருவாக்குவதற்குத் தேவையான நிதியுதவிகளை வழங்குவதன் மூலம் அபிவிருத்தி செய்யப்படும்.

92. 18 வயதிற்குக் கீழ்பட்ட மாணவராகத் தமது அடையாளத்தினை உறுதிப் படுத்தும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்குரிய தேசியப் பூங்காக்கள் மற்றும் கலாசாரத் தளங்கள் என்பவற்றிற்கான நுழைவுக் கட்டணங்கள் எதிர்வரும் 2019 ஜுன் 1ஆந் திகதியிலிருந்து 50 சதவீதத்தினால் குறைக்கப்படும்.

93. உள்ளூர் கட்டுமான நிறுவனங்களுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் முகமாக முழுமையான வெளிநாட்டு நிதி முதலீடுகள் தவிர்ந்த ஏனைய அரசாங்கக் கருத்திட்டங்கள் உள்நாட்டுக் கட்டுமான நிறுவனங்களுடனோ உள்ளூர் ஆலோசனை வழங்கும் நிறுவனங்களுடனோ கூட்டு ஒப்பந்தங்கள் செய்து கொள்ளாத சர்வதேச நிறுவனங்களுக்கு அரசாங்க கருத்திட்ட ஒப்பந்தங்கள் வழங்கப்படமாட்டாது. இது உள்ளூர்நிறுவனங்கள் புதிய தொழில்நுட்பத்தினை பெற்றுக் கொள்வதற்கு வசதியேற்படுத்திக் கொடுக்கும்.

94. நிர்மாணத் துறை கிரயங்களானது முன்மொழியப்பட்டுள்ள உப தீர்வை திருத்தங்கள் மற்றும் பிரதான நிர்மாணத்துறை ஒப்பந்தக்காரர் மீதான தேசக் கட்டுமான வரியினை நீக்குதல் என்பவற்றின் மூலம் குறைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

95. ஆதன அபிவிருத்தித் துறையினை மேலும் அபிவிருத்தி செய்யும் முகமாக நான் பின்வரும் விடயங்களை முன்மொழிகின்றேன்.

அ. இலங்கையில் 400,000 ஐக்கிய அமெரிக்கா டொலர்கள் அல்லது அதற்கு மேல் கூட்டு ஆதனங்களில் முதலீடு செய்துள்ள வெளிநாட்டினருக்கு மூன்று வருடங்களுக்கு குடியிருப்பு வீஸா வழங்கப்படும். இச்செயன்முறை இவ்வருடத்தில் நடைமுறைப்படுத்தப்படும். இக்குடியிருப்பு வீஸா குறித்த வெளிநாட்டினர் தம் முதலீட்டிலிருந்து வெளியேறும் பட்சத்தில் செல்லுபடியற்றதாக மாறும்.

ஆ. கட்டுமானப் பொருட்களுக்கான இறக்குமதி செஸ் வரி 03 சதவீதத்தினால் குறைக்கப்படவுள்ளது.

96. நிலைபேறான சக்திவள அதிகார சபையானது 2019ஆம் ஆண்டில் அனைத்து வர்த்தக கட்டிடங்கள் மீதான மின்சக்தி தொடர்பான குறைந்த பட்ச நியமங்களை உருவாக்கும்.தற்போதுள்ள அனைத்து வர்த்தகக் கட்டிடங்களுக்கும் குறைந்த பட்ச நியமங்களை உள்வாங்கிக் கொள்வதற்கு 2019இல் இருந்து ஐந்து வருட கால அவகாசத்தைப் பெற்றுக் கொடுக்கும்.

97. அதேவேளை சபாநாயகர் அவர்களே, நிர்மாணத்துறையில் பயன்படுத்தப்படும் பல கட்டிட மூலப் பொருட்களுக்கு குறைந்த பட்ச நியமங்கள் காணப்படாதுள்ளது. இதனால் கட்டிடங்கள் மற்றும் ஏனைய நிர்மாணங்களின் உறுதித் தன்மை மற்றும் நிலைபேற்றுத் தன்மை என்பவற்றில் விட்டுக்கொடுப்பு மற்றும் பல எதிர்மறையான விளைவுகளுக்கும் முகங்கொடுக்க வேண்டியுள்ளது. அதனடிப்படையில் இலங்கை தர நிர்ணய நிறுவகமானது குளியலறை உபகரணங்கள், குழாய்கள், மழைக்குளியல் உபகரணம் போன்றவற்றிற்கான குறைந்தபட்ச தர நியமங்கள் இற்றைப்படுத்தப்பட்டு 2020 ஏப்ரலில் இருந்து அமுல்படுத்தும். இதன் மூலம் நீர்ப்பற்றாக்குறைக்கான பிரதான மூலமானது சீர்செய்யப்படும்.

98. கௌரவ சபநாயகர் அவர்களே, கல்வித் துறை மீதான முதலீட்டு உபாயமானது இரண்டு நோக்கங்களை அடைந்து கொள்வதற்காக வழிநடாத்தப்படுகின்றது. அதாவது உட்கட்டமைப்பு வசதிகளின் கிடைப்பனவினை உறுதிப்படுத்துவதோடு பாடவிதான மற்றும் ஆசிரியர் பயிற்சி மேம்படுத்தல்கள் மூலம் மாணவர்களுக்கு சந்தர்ப்பங்களை உருவாக்குவதுமாகும்.

99. எமது அரசாங்கத்தின் பிரதான நிகழ்ச்சித் திட்டமான அனைத்துச் சிறார்களுக்கும் '13 வருட கல்வி" இவ்வருடத்தில் மேலும் ஆதரவளிக்கப்படும். இதனடிப்படையில் விஞ்ஞான ஆய்வு கூடங்கள், வகுப்பறைகள், துப்புரவு ஏற்பாடுகள் மற்றும் நீர் வசதிகள் ஆசிரியர் விடுதிகள் என்பவற்றினை மேம்படுத்துவதற்காக நாங்கள் ஏற்கனவே ரூபா 32,000 மில்லியன்களை ஒதுக்கியுள்ளோம்.

100. அதே வேளை ஆசிரியர்களின் தொடர்ச்சியான தொழில்வாண்மை அபிவிருத்தியானது தொழில் நுட்ப உட்செலுத்தல் மூலம் வசதியளிக்கப்பட்டு அமுல்படுத்தப்படும்.

இக்கற்கைநெறிகளானது தற்போது காணப்படும் வசதிகளைப் பயன்படுத்தி பாடசாலை விடுமுறை காலங்களில் நடைமுறைப்படுத்தப்படும்.

101. கௌரவ சபாநாயகர் அவர்களே, எமது பாடவிதானங்களானது தர்க்க ரீதியான மற்றும் பகுப்பாய்வுத் திறன், ஆக்கத் திறனான கற்கை முறைமைகள் மீது கவனஞ் செலுத்தப்படும் வண்ணம் நவீனமயப்படுத்தப்படும். எமது எதிர்கால முதலீடுகளானது தற்போது தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் கலையினூடாக விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதக் கல்வித் திட்டத்தினூடாக வழிநடாத்தப்படும். இது மாணவர்கள் சங்கீதத்துடன் கணிதம் அல்லது ஆங்கிலத்துடன் உயிரியல் பாடங்கள் போன்ற பாடங்களின் சேர்க்கையினைத் தெரிவு செய்ய வழிவகுக்கின்றது.

102. கௌரவ சபாநாயகர் அவர்களே, கல்விச் சிறப்புத் தேர்ச்சிக்கான புலமைப் பரிசில் ஒன்றினை ஆரம்பிப்பது தொடர்பான அறிவிப்பினை மேற்கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன். இதன் மூலம் க.பொத. (உ.த) பரீட்சையில் பௌதீக விஞ்ஞானம், உயிரியல் விஞ்ஞானம், தொழில் நுட்பம், வர்த்தகம் மற்றும் கலைப் பிரிவுகளில் உயர் செயலாற்றுகையினைக் காட்டும் மாணவர்கள் தமது பல்கலைக்கழக் கல்வியினை ஹாவட், எம்.ஐ.ரி., ஒக்ஸ்போட், கேம்ப்றிஜ் போன்ற பல்கலைக்கழங்களில் தொடர்வதற்கு இந்நிதியானது வசதியளிக்கும். இதற்கான முதலாவது தகைமை பெறும் மாணவர் தொகுதியானது 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் இடம்பெறவுள்ள உயர் தரப் பரீட்சையிப் பெறுபேறுகளில் இருந்து தெரிவு செய்யப்படுவர். இவ்வருடத்தில் தமது துறைகளில் உயர்ந்த பட்ச செயலாற்றுகையினைக் காட்டும் 14 பேருக்கு புலமைப் பரிசில்கள் பெற்றுக் கொடுக்கப்படும். இதன் கீழ் தெரிவு செய்யப்படுகின்றவர்கள் உயர் கல்வியின் பின்னர் நாடு திரும்பி 15 வருடங்கள் நாட்டிற்காக சேவையாற்ற வேண்டும். இப்புலமைப்பரிசிலானது ஏனைய வருடங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.

103. முன்பள்ளிக் கல்வி அபிவிருத்திக்கான முதலீடுகளானது புறக்கணிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கமானது ஒழுங்குபடுத்தல் வகிபாகத்தினை ஏற்று இத்துறையில் தனியார் துறையின் முதலீட்டினை நாம் ஊக்குவிக்கின்றோம்.

104. இதை அடைந்து கொள்ளவதற்கு அரசாங்கமானது இலங்கையில் முன்பள்ளிக் கல்வி நிருவாகம் மற்றும் ஒழுங்குபடுத்தலுக்கான சட்ட வேலைச் சட்டகத்தினை அறிமுகம் செய்யும். முன்பள்ளிக் கல்வி தொடர்பான தேசிய பாடவிதான வேலைச் சட்டகமொன்று ஆசிரியர் பயிற்சி மற்றும் வேலைச் சூழல்கள் மேம்பாட்டுடன் செயற்படுத்தப்படும்.

105. உரிய தகைமைகளைக் கொண்டுள்ளவர்கள் முன்பள்ளி கல்வி நிலையங்களை உருவாக்குவதற்கும் அரசாங்கத்தின் பதிவு செய்யப்பட்ட முன்பள்ளி நிலையங்களை திருத்தி புதுப்பிப்பதற்கும் வசதிகள் செய்து கொடுக்கப்படும். இதன் பொருட்டு 'என்டபிறைஸ் ஸ்ரீ லங்கா" நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் “சிங்கித்தி பாஸல” சலுகைக் கடன் திட்டமொன்றினை நாம் அறிமுகம் செய்யவுள்ளோம். இக்கடனுக்கான வட்டியில் 50 சதவீதத்தினை அரசாங்கம் மானியமாகப் பெற்றுக் கொடுக்கும்.

106. பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளில் காணப்படும் இடைவெளியினை பூரணப்படுத்துவதற்காக ஏற்கனவே ரூபா. 25,000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

இம்முதலீடுகளினூடாக கேட்போர்கூடங்கள், பேராசிரியர் அலகு, திணைக்களக் கட்டிடத் தொகுதிகள், நூலகங்கள் மற்றும் உணவகங்கள் மேம்படுத்தப்படும். வயம்ப மற்றும் சப்ரகமுவ பல்கலைக் கழகங்களின் மருத்துவ பீடங்களுக்கு இணைந்ததாக குளியாப்பிட்டிய மற்றும் இரத்தினபுரி வைத்தியசாலைகளில் பேராசிரியர் பிரிவுகள் உருவாக்கப்படும். அதேவேளை ருஹுனுப் பல்கலைக்கழகத்தில் இணைந்த சுகாதார விஞ்ஞான பீடமானது உருவாக்கப்படும். இவை எமது நாட்டில் உடனடித் தேவையாகக் காணப்படுவதுடன், மாணவர்கள் மருத்துவத்துடன் தொடர்புபட்ட துறைகளில் தொழிலைத் தொடர முடியும். ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பீடத்தில் புற்றுநோய், நீரழிவு மற்றும் தொற்று நோய்கள் போன்றவை தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஆய்வுகூடமொன்று உருவாக்கப்படும்.

 

107. கௌரவ சபாநாயகர் அவர்களே, வருடாந்தம் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் 300,000 இற்கு மேற்பட்ட மாணவர்களிலிருந்து 30,000 பேரே பல்கலைக்கழகம் நுழைகின்றனர்.

அரச பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்படாத மாணவர்கள் தமது உயர் கல்வியினை அரசதுறையல்லாத பல்கலைக்கழகங்களில் தொடர்வதற்கு நாங்கள் கடன் திட்டமொன்றினை அறிமுகம் செய்கின்றோம். 'என்டபிறைஸ் ஸ்ரீ லங்கா" நிகழ்ச்சித் திட்டத்தின் “எனது எதிர்காலம்” கடன் திட்டத்தின் கீழ் ஒரு மாணவன் ரூபா 1.1 மில்லியன் வரை கடனைப் பெற்றுக் கொள்ளலாம். இது 0 சதவீத வட்டியில் பெற்றுக் கொடுக்கப்படுவதுடன், பட்டப்படிப்பினை முடித்து இரண்டு வருடங்களின் பின்பே கடன் மீள் செலுத்தப்பட வேண்டியதுடன், அது 12 வருடங்களில் திரும்பிச் செலுத்தலாம்.

108. கௌரவ சபாநாயகர் அவர்களே, அரசாங்கமானது தொழிற் கல்வித் துறையில் பெருமளவு முதலீடுகளை மேற்கொண்டுள்ளது. எவ்வாறாயினும், கைத்தொழில் துறையின் தேவைகளானது இரண்டு முனைவுகளில் பூர்த்தி செய்யப்படாதுள்ளது. அதாவது, போதுமானளவில் திறன்வாய்ந்த மற்றும் தன்னம்பிக்கையான கைவினைஞர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், தொழில்நுட்ப வியலாளர்கள் மற்றும் தேவையான திறன்கள் காணப்படாமை. கைத்தொழிற் துறையின் வழிகாட்டுதலுடன் ஒருங்கிணைந்த தீர்வு மிகவும் திறனானதாகக் காணப்படும். அதனடிப்படையில் பின்வரும் முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்படுகின்றன.

109. தம்மிடம் காணப்படும் மூலவளங்களை முழுமையாகப் பயன்படுத்தாத தெரிவு செய்யப்பட்ட தொழிற்பயிற்சி நிறுவனங்கள் தெரிவு செய்யப்பட்ட கைத்தொழில் சம்மேளனங்களுடன் இணைந்து கைத்தொழில்களுக்கு அவசியமான தகவல் தொழில்நுட்பம், நிர்மாணத் தொழில் மற்றும் சுற்றுலாத் துறைகளில் பயிற்சிகள் பெற்றுக் கொடுக்கப்படும்.

110. முன்னுரிமை விடயமாக தமிழ்மொழி மூல ஆசிரியர் பயிற்சியானது ஊக்குவிக்கப்பட வேண்டிய தேவை காணப்படுகின்றது. இதன்பொருட்டு தேசிய ஒருமைப்பாடு அரச கரும மொழிகள் சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சிற்கு ரூபா 400 மில்லியனை ஒதுக்கீடு செய்வதற்கு முன்மொழிகின்றேன். 111. நிர்மாணத் தொழில் துறைக்கு அவசியமான திறனுள்ள மற்றும் அரைத்திறன் கொண்ட தொழிலாளர்களுக்குப் பயிற்சியளிப்பதற்காக நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி முகவராண்மைக்கு ஆதரவளிக்கப்படும். இதன் பொருட்டு ரூபா 300 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

112. சுகாதார நலனோம்பு துறைக்கு அவசியமான திறன்களை அபிவிருத்தி செய்வதற்கான உடனடித் தேவை காணப்படுகின்றது. தாதிகளுக்கு சர்வதேச மட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நெறிகளை பெற்றுக் கொடுப்பதற்கு தனியார் துறையினர் ஊக்குவிக்கப்படுவதுடன், அரசாங்கமானது ஒவ்வொரு தனி பயிற்சியாளருக்கும் மாதாந்தம் ரூபா 10,000 உதவித் தொகையை இரண்டு வருட காலத்திற்கு பெற்றுக் கொடுக்கும்.

இதையொத்த தொழிற்பயிற்சித் திட்டமானது மருந்தகவியல் தொழில் வல்லுனர்களுக்கும் ஊக்குவிக்கப்படும். மருந்து உற்பத்திக் கம்பனிகள் ஒருவருட கால தொழிற்பயிற்சிக்காக விஞ்ஞானப் பட்டதாரிகளை உள்வாங்கி அப்பயிற்சி நெறியானது உரிய தொழிற்பயிற்சி ஒழுங்குபடுத்துனரால் ஏற்றுக்கொள்ளப்படும். அரசாங்கமானது ஒவ்வொரு பயிற்சியாளருக்கும் அவ்வருட காலப்பகுதிக்கு மாதாந்தம் 15,000 ரூபாவினை உதவித் தொகையாகப் பெற்றுக் கொடுக்கப்படும். இவ்வாறான தொழிற்பயிற்சி நெறிகளின் வெற்றியானது அவற்றை ஏனைய துறைகளிலும் அமுல்படுத்துவதற்கு வாய்ப்பளிக்கும்.

113. இலங்கை இராணுவமானது அரசாங்கத்தின் முன்னெடுப்பான குறைந்த வருமான சூழ்நிலையிலிருந்து இளைஞர்களை வினைத்திறனான முறையில் விவசாயம், கால்நடை வளர்ப்பு, அலங்கார மீன் வளர்ப்பு, மற்றும் பெக்கோ, மோட்டர் கிரேடர்ஸ், டோஸர்ஸ் போன்ற கனரக இயந்திரங்களை இயக்குதல் தொடர்பான பயிற்சிகளை மின் இணைப்பாளர்கள், ஒட்டுனர், காற்றுச் சீரமைப்புத் தொழிநுட்பவியலாளர், உணவுப் பராமரிப்பு, தச்சன், மேசன் மற்றும் குழாய் பொருத்துனர் போன்ற துறைகளிலும் பயிற்சிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு முன்வந்துள்ளனர். இப்பயிற்சி நெறியானது தேசிய தொழிற்பயிற்சி தரத்தின் பின்னர் அங்கீகரிக்கப்படுவதோடு இப்பயிற்சி நெறியானது தெரிவு செய்யப்பட்ட இராணுவ முகாம்களில் இடம்பெறும். இப்பயிற்சியாளர்களுக்கு தற்போது தொழில்பயிற்சி அதிகார சபையின் கீழ் பெற்றுக் கொடுக்கப்படும் உதவித் தொகை மற்றும் சலுகை பருவகால போக்குவரத்து சீட்டு என்பன வழங்கப்படும்.

114. இலங்கை இராணுவத்தினர் நாட்டின் பல பாகங்களிலுமுள்ள தமது முகாம்களில் எமது இளைஞர்களுக்கு தெரிவு செய்யப்பட்ட சில விளையாட்டுக்களுக்கான பயிற்சியளிப்பர்.

115. கௌரவ சபாநாயகர் அவர்களே, நாங்கள் சுகாதார துறையில் உட்கட்டமைப்பு வசதிகளின் தரத்தினை மேம்படுத்துவதற்காக ரூபா. 24,750 மில்லியனை ஒதுக்கீடு செய்துள்ளோம். இவ்வொதுக்கமானது புதிய உபகரணங்கள் கட்டிடங்களைப் புனரமைத்தல் மற்றும் வைத்தியசாலைகளில் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல் என்பவற்றில் முதலிடப்படுகின்றது. இது கடந்த வருட ஒதுக்கீட்டுடன் ஒப்பிடுகையில் 38 சதவீத அதிகரிப்பாகும்.

116. ஊவா, சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மாகாணங்களில் ஆரம்ப சுகாதார நல அலகுகளை ஸ்திரப்படுத்தும் நோக்குடன் ரூபா 1,625 மில்லியன் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது. மேலதிக நேரம் நோயாளிகளைக் கவனிப்பதினை ஒருங்கிணைப்புச் செய்யும் முறைமையினை அறிமுகம் செய்தல் மற்றும் பரிந்துரை வலையமைப்பினூடாக ஆபத்தான நிலையிலுள்ள நோயாளிகளை கவனிப்பதற்கான வசதிகளை இயலுமாக்குவதானது, சேவை வழங்குனர்களிடையே இடம்பெறும் வேலை இரட்டிப்பினை தவிர்ப்பதற்கு உதவியாக அமையும்.

117. எமது 'சுவசெறிய" அம்புலன்ஸ் சேவையானது பெரும் வெற்றியாகும். அது அனைத்துக் குடிமகன்களுக்கும் அத்தியாசியமான ஒரு சேவையாகும். நாட்டின் அனைத்துப் பாகங்களுக்கும் இச்சேவையினை விரிவுபடுத்துவதற்கான ஆதரவுகள் பெற்றுக்கொடுக்கப்படும். எதிர்வரும் இரண்டு வருட காலப்பகுதியில் 300 தள நிலையங்கள் ரூபா 600 மில்லியன் செலவில் உருவாக்கப்படும். இவ்வருடத்தில் 100 தள நிலையங்களை நிர்மாணிப்பதற்கு ரூபா 200 மில்லியனை ஒதுக்குவதற்கு முன்மொழிகின்றேன்.

118. கௌரவ சபாநாயகர் அவர்களே, தீராத சிறுநீரக நோயுடன் தொடர்புட்ட பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அவசியமான வளங்களை தொடர்ந்தும் நாங்கள் பெற்றுக் கொடுப்போம்.

119. நாட்டின் தீராத சிறுநீரக நோய்ப் பாதிப்பிற்குட்பட்ட மாவட்டங்களில் வீடு வீடாகச் சென்று நோயினை முன்னரே கண்டறிந்து கொள்வதற்காக வேண்டிய பரிசோதனை முறையானது மேலும் வலுவூட்டப்படும்.

120. விசர் நாய்க்கடி நோயினை நாட்டிலிருந்து இல்லாதொழிப்பதற்காக விசர் நாய்க்கடி கட்டுப்பாட்டு நிகழ்ச்சித்திட்டம் அரச சார்பற்ற நிறுவனங்களின் பங்களிப்புடன் மேலும் வலுவூட்டப்படும். முழுமையான தெருநாய்க் கருத்தடை நிகழ்ச்சித்திட்டமானது கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்படும். இதற்காக ரூபா 100 மில்லியன் ஒதுக்கப்படும்.

121. விசேடமாக முதியோர் சனத்தொகையின் அதிகரிப்போடு தொற்றா நோய்களின் எண்ணிக்கையானது உயர்ந்து செல்வதானது முறையான நோய்த் தணிப்பு பராமரிப்பு சேவைகள் அறிமுகம் செய்வதினை வேண்டியுள்ளது. இதற்காக வைத்தியர்கள், தாதிகள் மற்றும் ஏனைய மருத்துவ தொழில் வல்லுனர்களின் வழி நோய்த்தணிப்பு பராமரிப்பு ஆற்றலினை கட்டியெழுப்புவதற்கு வசதிகள் வழங்கப்படும்.

122. கௌரவ சபாநாயகர் அவர்களே, விளையாட்டானது ஆரோக்கியமானதொரு சமூகத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும். அதேபோல் அது தலைமைத்துவம் மற்றும் குழுவாக இயங்கும் பண்பினை கட்டியெழுப்புகின்றது. விளையாட்டுத் துறையின் வளர்ச்சிக்காக நாங்கள் ஏற்கனவே ரூபா. 3,800 மில்லியனை ஒதுக்கீடு செய்துள்ளோம்.

123. இதற்கு மேலதிகமாக மாத்தளையில், பர்னாட் அலுவிகாரை விளையாட்டுத் தொகுதி மற்றும் கொலன்னாவையில் வீரசிங்க மல்லிமாரச்சி விளையாட்டு மைதானம் என்பன அபிவிருத்தி செய்யப்பட்டு எமது கிராமிய இளைஞர்களின் விளையாட்டினை ஊக்குவிப்பதற்கு ஆதரவளிப்போம். இதன்பொருட்டு ஒவ்வொரு மைதானத்திற்கும் ரூபா 300 மிலியன் 2 வருட காலப் பகுதியில் பெற்றுக் கொடுக்கப்படும்.

124. தேசிய ஒலிம்பிக் நிதியமானது மெய்வல்லுனர், கரப்பந்து, மேசைப்பந்து போன்ற விளையாட்டுக்களுக்கு ஆதரவளிக்கக் கூடிய வகையில் மேம்படுத்தப்படும்.

125. நாட்டில் அரச மற்றும் அரச துறையல்லாத பல ஆராய்ச்சி நிறுவனங்கள் காணப்படுகின்றன. எவ்வாறாயினும், இவைகளில் இடம்பெறும் பெரும்பாலான ஆராய்ச்சி முடிவுகளானது பயன்படுத்தக் கூடிய வகையில் அல்லது வர்த்தக ரீதியாக சந்தைப் படுத்தக் கூடிய வகையில் மாற்றியமைக்கப்படவில்லை. இந்நிலையானது இதுகாலவரையில் இத்துறை மீது மேற்கொள்ளப்பட்ட முதலீடுகளின் வினைத்திறனை கேள்விக்குறியாக்கியுள்ளது. அதனடிப்படையில் எமது அணுகுமுறையானது ஆராய்ச்சி மற்றும் முதலீடுகளானது பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு மற்றும் எதிர்கால விஞ்ஞானத்திற்கான முதலீடாகவும் கொள்ளப்படும்.

126. 'தொழில் விஞ்ஞானம்" என்ற சவால் நிகழ்ச்சித் திட்டத்தினை அறிமுகம் செய்யவுள்ளோம். விஞ்ஞான சமூகத்திற்கு பின்வரும் 5 கருப்பொருள்களில் வேலை செய்வதற்கான சவால் வழங்கப்படும். பொருத்தமான தீர்வுகளை அமுலப் டுத்தப்படுவதற்குத் தேவையான நிதியானது பெற்றுக் கொடுக்கப்படும்.

(அ) விவசாயம் மற்றும் மீன்பிடித்துறையில் அறுவடைக்குப் பிந்திய இழப்புக்களை குறைத்தல்.

(ஆ) நெற்செய்கை மற்றும் சிறுபயிர்கள் அறுவடையில் உலகளாவிய அளவுகோலை அடைதல்.

(இ) யானை-மனித முரண்பாட்டைத் தீர்த்தல்.

(ஈ) 1,500 சதுரஅடி பரப்புடைய குறைந்த செலவிலான வீட்டு அலகுகளை உருவாக்குதல்.

(உ) உள்நாட்டு மருந்து மூலிகைகள் மற்றும் உயிரியல் உற்பத்திப் பொருட்களுக்கு பெறுமதிச் சேர்க்கை செய்வதினூடாக அவற்றை ஊட்டச்சத்து மருந்துகளாக மாற்றுதல். 127. கௌரவ சபாநாயகர் அவர்களே, எமது நகரங்களானது பிரஜைகள் நட்பு, நிலைபேறான நிலை மற்றும் சமூக சமத்துவத்துக்கான வாய்ப்புக்களைக் கொண்டதாகவும் மெதுவாக மாறி வருகின்றது. இதனடிப்படையில் கொழும்பு நகரமானது 'ஆசியாவின் பூங்காவனம்" என்று அழைக்கப்படுகின்றது.

128. நகர மீள் பிறப்பாக்கல் கருத்திட்டத்தின் கீழ் 8,000 இற்கு அதிகமான வீடுகள் ஏற்கனவே நிறைவு செய்யப்பட்டுள்ளதுடன் 7,500 இற்கு அதிகமான வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற அதேவேளை, மேலும் 5,000 வீடுகளின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்காக ரூபா 8,000 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

129. நாட்டில் அனைத்து வசதிகளையும் கொண்ட நிலையான நகரமயமாக்கலினை மேம்படுத்துவதற்காக 9 மாகாணங்களை உள்ளடக்கிய சுகித்தபுரவர நகர அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் செயற்படுத்தப்படும். இதற்காக ரூபா 3,000 மில்லியன் ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சித்திட்டத்திற்காக மேலும் ரூபா 2,000 மில்லியனை ஒதுக்கீடு செய்வதற்கு நான் முன்மொழிகின்றேன்.

130. “பேரை வாவி சுத்திகரிப்பு” கருத்திட்டமானது சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க நிறுவனத்தின் உதவியுடன் 2000 இல் ஆரம்பிக்கப்பட்டதுடன், இத்திட்டம் நீர் தரத்தினை மேம்படுத்தும் வகையில் நிறைவு செய்யப்படும்.

131. கொழும்பு நகரத்தில் மிக முக்கிய பிரச்சினையாகக் காணப்பட்ட திண்மக் கழிவு முகாமைத்துவமானது அறுவக்காட்டில் அரசாங்க முதலீட்டுடன் தீர்க்கப்பட்டுள்ளதுடன், 2019 இல் இதற்காக ரூபா 7,600 மில்லியன் முதலீடு செய்யப்படும். தற்பொழுது தனியார்துறை முதலீடுகளும் இடம்பெறுகின்றன.

132. வெள்ளம் மற்றும் வடிகாலமைப்பு முகாமைத்துவம், கொழும்பு நீரேந்து பகுதியில் வடிகாலமைப்பு வசதி மேம்பாடு, பேரை வாவி மற்றும் பெத்தகன பூங்கா மற்றும் வேரஸ் கங்கை கருத்திட்டம் என்பன கொழும்பு நகரம் மற்றும் கொழும்பு பெரும்பகுதி பிரதேசத்தில் வெள்ளத்தினைக் குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக ஏற்கனவே ரூபா 10,900 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

133. கௌரவ சபாநாயகர் அவர்களே, எமது முதலீடுகளை கொழும்பு நகரத்திலிருந்து காலி, கண்டி மற்றும் யாழ்ப்பாண நகரங்களுக்கு விரிவுபடுத்தியுள்ளோம். வீதிப் போக்குவரத்து முகாமைத்துவ நடவடிக்கைகள், பிரதான வடிகாலமைப்புகளின் புனரமைப்பு மற்றும் வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள், நகர தரமேம்பாடு, வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த பிரதான கட்டிடங்களை புதுப்பித்தல் மற்றும் மீள் பயன்படுத்தல், தெரிவு செய்யப்பட்ட பிரதேசங்களில் கடலரிப்புத் தணிப்பு நடவடிக்கைகள் என்பவற்றினை இத்திட்டம் உள்ளடக்கியிருக்கும். இதற்காக ரூபா 9,225 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

134. யாழ்ப்பாணத்தில் தனிச்சிறப்பு மிக்க பழைய நகர மண்டபம் யுத்தத்தின் போது அழிவடைந்தது. யாழ்ப்பாண நகர மண்டபத்தினை மீள்கட்டமைப்பதற்கான சந்தர்ப்பம் தற்பொழுது ஏற்பட்டுள்ளது. இதற்காக ரூபா 700 மில்லியனை ஒதுக்கீடு செய்வதற்கு நான் முன்மொழிகின்றேன்.

135. எமது மலைநாட்டு மரபுரிமைகளை பேணுதல் மற்றும் பாதுகாக்கும் அதேவேளை, மலைநாட்டுக்குரிய கைவினை, கட்டிடக்கலை, கலாசார விழுமியங்கள், பாரம்பரியங்கள், சுதேச மருத்துவம் மற்றும் வரலாற்று பெறுமதிமிக்க இடங்களைப் பாதுகாப்பதற்கு உரிய கவனம் செலுத்தப்படும்.

136. மரபுரிமை பெறுமானங்கொண்ட போகம்பரை சிறைச்சாலை மீள் அபிவிருத்தி செய்யப்படுவதுடன், இரண்டு வருடங்களில் பொது மக்களுக்கான இடமாக மாற்றப்படும். இதற்காக இவ்வருடம் ரூபா 750 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்படும்.

137. கல்முனை, சம்மாந்துறை, வாழைச்சேனை மற்றும் தலைமன்னார் நகர அபிவிருத்தித் திட்டங்களுக்கு மேலும் ஒத்துழைப்பு வழங்கப்படும்.

138. கௌரவ சபாநாயகர் அவர்களே, நாட்டிலுள்ள அரசாங்க மற்றும் தனியார் வர்த்தகக் கட்டிடங்கள் அனைத்தும் 2023 ஆம் ஆண்டளவில் “வலது குறைந்தோர் நட்பு” கட்டிடங்களாக மாற்றப்படும்.

2022 ஆம் ஆண்டளவில் அனைத்து அரச கட்டிடங்களும் “வலது குறைந்தோர் நட்பு” கட்டிடங்களாக காணப்படும்.

139. குழாய் நீர் வழங்கலினை 2020 ஆம் ஆண்டளவில் ஆகக் குறைந்தது 60 சதவீதமாக அதிகரிக்கும் நோக்கத்துடன் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய ரூபா 45,000 மில்லியன் பெறுமதியான நீர்வழங்கல் கருத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும். அடுத்த 2 வருடங்களில் ஏறக்குறைய 200,000 குடும்பங்கள் நன்மையடையும் வகையில் 1,000 கிராமங்களை உள்ளடக்கியதாக “பிரஜா ஜல அபிமான்” நிகழ்ச்சித் திட்டம் சமுதாய அடிப்படை நீர் வழங்கல் திட்டத்தினூடாக மேலும் எமது ஒத்துழைப்பினை விரிவுபடுத்துவோம்.

140. கௌரவ சபாநாயகர் அவர்களே, எமது முழு நாளையும் பாரியளவு வாகன நெரிசலில் கழிக்கவேண்டி ஏற்பட்டுள்ளது. எமது போக்குவரத்துத் துறையானது நாட்டின் நடுத்தர வருமானம் பெருநர்களின் தேவையினை இதுவரை நிறைவேற்றவில்லை. எமது பொதுப் போக்குவரத்து முறைமை மீது அவசரக் கவனம் செலுத்த வேண்டிய தேவை காணப்படுகின்றது. இதற்காக மிகவும் ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் முதலீடுகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளன.

140. கௌரவ சபாநாயகர் அவர்களே, எமது முழு நாளையும் பாரியளவு வாகன நெரிசலில் கழிக்கவேண்டி ஏற்பட்டுள்ளது. எமது போக்குவரத்துத் துறையானது நாட்டின் நடுத்தர வருமானம் பெருநர்களின் தேவையினை இதுவரை நிறைவேற்றவில்லை. எமது பொதுப்போக்குவரத்து முறைமை மீது அவசரக் கவனம் செலுத்த வேண்டிய தேவை காணப்படுகின்றது. இதற்காக மிகவும் ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் முதலீடுகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளன.

141. நாடு முழுவதிலும் பேருந்துப் போக்குவரத்து சேவையினை வழங்குவதற்காக அடுத்த ஐந்து வருடங்களில் 'சஹசர' பேருந்து நவீனமயப்படுத்தல் நிகழ்ச்சித் திட்டத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும். பயணிகளுக்கு சிறந்த சேவையினை வழங்குவதற்காக சலுகை அடிப்படையிலான கடன் வசதிகளைப் பெற்றுக் கொள்வதுடன், ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியப் பங்களிப்புகளுடன் சிறந்த தொழில் பாதுகாப்பு, தனியார் துறை பேருந்து ஊழியர்களுக்கு வழங்கப்படும். பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படுத்தல், வீதி விபத்துகள் மற்றும் பாதைகளில் காணப்படும் ஒழுங்கீனங்கள் போன்ற தற்பொழுது காணப்படும் திருப்பதிகரமற்ற போட்டி நிலைமைக்குப் பதிலாக மாதாந்த அடிப்படையில் பயணிக்கும் கிலோ மீற்றரின் அடிப்படையில் பேருந்து உரிமையாளர்களுக்கு கொடுப்பனவு வழங்குவதற்கான தற்காலிக ஏற்பாடொன்றாக வருமான ஒத்துழைப்பு நிதியமொன்று தாபிக்கப்படும். முன்செலுத்தல் கட்டண அட்டைகள், இலத்திரனியல் முறைமையில் பேருந்து பயணிக்கும் இடத்தினை கண்டறிதல், ஜீ.பி.எஸ். தொழிநுட்பத்தினைப் பயன்படுத்தல் மற்றும் கையடக்கத் தொலைபேசி பிரயோகிகள் மூலம் பயணிகளின் கைவிரல் அடையாளத்தினை பிரயோகித்து பேருந்து நேர அட்டவணை மற்றும் அடுத்த பேருந்து பற்றிய தகவல்களைப் பெற்றுக் கொள்ளல் போன்ற சேவைகளை மத்திய மற்றும் மேல் மாகாணங்களில் ஆரம்பமாக இன்னும் சில மாதங்களில் நாம் அறிமுகப்படுத்துகின்றோம்.

142. நவீன பல்மாதிரி பயணிகள் தரிப்பிடங்கள் மாக்கும்புரவில் ஆரம்பிக்கப்பட்டு கண்டி, கடவத்தை, கோட்டை மற்றும் மொரட்டுவையிலும் அறிமுகப்படுத்தப்படும். இலங்கை போக்குவரத்து சபையின் சந்தையில் 40 சதவீதப் பங்கினை உறுதிப்படுத்துவதுடன் இ.போ.சபை மற்றும் தனியார் பேருந்து இயக்குநர்களின் வினைத்திறன் மேம்படுத்தப்படும்.இதற்காக நாடு முழுவதிலும் டிஜிட்டல் தரவுப் பிரவாகத்தின் மூலம் இணைந்த பேருந்து இயக்கக் கட்டுப்பாட்டு நிலையமொன்று தாபிக்கப்படும். இதன் மூலம் 21ஆம் நூற்றாண்டில் பேருந்துப் போக்குவரத்தானது மிகவும் கவர்ச்சிகரமான தேர்வாக மாற்றமடையும். இம்முதலீடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக ரூபா. 1,300 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

143. அடுத்த இரண்டு வருடங்களில் பாதுகாப்பு மற்றும் பயன்படுத்தல் நட்பு நியமங்களுடன் கூடிய 250 பேருந்துகளை மேலதிகமாக சேர்த்துக் கொள்வதன் மூலம் இலங்கைப் போக்குவரத்து சபையின் பேருந்துத் தொகுதி விரிவாக்கப்படும். விசேட தேவையுடையோருக்கு மிகவும் பொருத்தமான பேருந்துகளை இலங்கைப் போக்குவரத்து சபை அறிமுகப்படுத்தும்.

144. 'என்டர்பிறைஸ் ஸ்ரீ லங்கா' நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 'சிட்டி ரைட்' சலுகைக் கடன் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்டுவதுடன், 1,000 சொகுசு பேரூந்துகளின் மூலம் தனியார் பேருந்து தொகுதியினை விரிவாக்குவதற்காக வட்டிச் செலவினத்தில் 75 சதவீதத்தினை அரசாங்கம் பொறுப்பேற்கும்.

145. அதேவேளை, சுற்றாடல் நட்பு, பாதுகாப்பு மற்றும் அதிக சௌகரியத்துடன் இலத்திரனியல் முச்சக்கர வண்டிகள் மற்றும் சிறிய கார்களை தரமுயர்த்துவதற்கு 'என்டர்பிறைஸ் ஸ்ரீ லங்கா' கடன் திட்டத்தின் 'மினி டெக்ஸி' சலுகைக் கடன்கள் மூலமாக முச்சரக்கர வண்டி உரிமையாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும். இதற்காக ரூபா 1,500 மில்லியன் முன்மொழியப்பட்டது. 75 சதவீதமான வட்டிச் செலவினத்தினை அரசாங்கம் பொறுப்பேற்பதுடன், பழைய முச்சக்கர வண்டியினை பாவனையிலிருந்து அகற்றுதல் வேண்டும். 146. கௌரவ சபாநாயகர் அவர்களே, எமது ஒட்டுமொத்த புகையிரத சேவையும் முழுவதுமாக குறை பயன்பாடுடையதாக காணப்படுகின்றது. சிறந்த புகையிர சேவைக்கான தேவை குறிப்பிடத்தக்களவு காணப்படுகின்றது. இதனைத் தனியார் துறையுடன் இணைந்து முன்னெடுப்பது சிறந்ததென நாம் நம்புகின்றோம். இதற்காக, இலங்கைப் புகையிரத சேவைக்கு புகையிரதப் பெட்டிகளை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு வழங்குவதற்கும் அதன் மூலம் புகையிரத சேவை வசதிகளை 4 நிரல்களாக மேம்படுத்துவதற்கும் தனியார் துறைக்கான அனுமதியினை நாம் வழங்குவோம்.

147. மாலபேயினையும் கொழும்புக் கோட்டையினையும் இணைக்கின்ற கொழும்பு நகர இலகு ரயில் போக்குவரத்து வேலைகள் ஆரம்பிக்கப்படுவதுடன், இதற்காக ரூபா. 5,000 மில்லியன் ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

148. கௌரவ சபாநாயகர் அவர்களே, தெற்கு அதிவேகப் பாதை விரிவாக்கம் மற்றும் வெளிச்சுற்றுப் பாதை என்பன 2019 இல் நிறைவு செய்யப்படும். மத்திய அதிவேகப் பாதை கட்டம் ஐ மற்றும் ஐஐஐ ஆரம்பிக்கப்படுவதுடன், கட்டம் ஐஐ இற்கான பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும். பாதை வலையமைப்பினை மேலும் மேம்படுத்துவதற்கு இரத்தினபுரி மாவட்டத்தினை தெற்கு அதிவேகப் பாதையுடன் இணைக்கின்ற ருவன்புர அதிவேகப் பாதைக்கான பணிகள் 2019 இல் ஆரம்பிக்கப்படும்.

149. 'ரண் மாவத்' நிகழ்ச்சித்திட்டம் கௌரவ சபாநாயகர் அவர்களே, பாதைகள் மற்றும் அதிவேகப் பாதைகளை நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் குறிப்பிடத்தக்களவு தொகையினை முதலீடு செய்துள்ளது. 2015 இலிருந்து பாதைகளுக்காக மாத்திரம் ஏறக்குறைய ரூபா 700,000 மில்லியனை செலவிட்டுள்ளோம். பெருந்தொகையான செலவினத்தினை மேற்கொண்ட போதிலும் பெருமளவிலான பாதைகள் நிர்மாணிக்கப்பட வேண்டிய தேவை காணப்படுகின்றது. 'கம்பெரலிய' நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கிராமிய பாதை நிர்மாணத்துறைக்காக நிதி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இருந்தபோதிலும் கிராமிய மற்றும் ஏனைய பாதை அபிவிருத்தியின் தேசிய முக்கியத்துவத்தினை கருத்திற்கொண்டு 'ரண் மாவத்' அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக பிரதானமாக கிராமிய பாதைகளின் பராமரிப்பு மற்றும் நிர்மாணத்திற்காக ரூபா 10,000 மில்லியனை மேலதிகமாக ஒதுக்கீடு செய்வதற்கு நான் முன்மொழிகின்றேன்.

150. எமது அரசாங்கம் 2016 இல் 10,000 ரூபாவினை மாதாந்த இடைக்காலக் கொடுப்பனவாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்ததுடன், 2016 இலிருந்து 2020 வரை 1:4.07 என்ற விகிதத்தினை பேணும் வகையில் 5 கட்டங்களாக அரச துறை ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்திற்கு விசேட கொடுப்பனவு வழங்கப்பட்டது. இதன் விளைவாக அரசாங்க ஊழியர்களின் சம்பளம் அதே காலப்பகுயில் 107 சதவீதத்தினால் அதிகரித்தது.

இந்நோக்கத்திற்காக 2019 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்ட மூலத்தில் ரூபா 40 பில்லியன் ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது. இதன்பிரதிபலனாக, கீழ் படிநிலையிலுள்ள அரசாங்க ஊழியர் ஒருவரின் அடிப்படைச் சம்பளம் 2015 இல் காணப்பட்ட 11,730 ரூபாவிலிருந்து 2020 இல் 21,400 ரூபாவாக அதிகரிக்கும். அதிமேதகு சனாதிபதியினால் நியமிக்கப்பட்ட விசேட சம்பள ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கையானது அதற்காக நியமிக்கப்பட்ட தொழில்நுட்ப குழுவின் பரிந்துரைகள் வெளியானதும் அமுல்படுத்தப்படும்.

151. 2015 டிசம்பர் 31 ஆந் திகதிக்கு முன்னர் இளைப்பாறிய ஏறக்குறைய 560,000 ஓய்வூதியம் பெறுநர்கள் காணப்படுவதுடன், அவர்களது ஓய்வூதியம் 06ஃ2006 ஆம் இலக்க பொது நிர்வாக சுற்று நிருபத்தின் அடிப்படையில் கணிப்பீடு செய்யப்படுகின்றது. இதற்கு மேலதிகமாக, 2016 சனவரி 01 முதல் 2018 டிசெம்பர் 31 வரையான காலப்பகுதியின்போது ஏறக்குறைய 71,000 ஓய்வூதியம் பெறுநர்கள் இளைப்பாறியுள்ளதுடன், அவர்களது ஓய்வூதியம் 03ஃ2016 ஆம் இலக்க பொதுநிர்வாக சுற்றறிக்கையினை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் இளைப்பாறிய நேரத்தில் பெற்றுக் கொண்ட அடிப்படைச் சம்பளத்திற்கமைவாக கணிப்பீடு செய்யப்படுகின்றது. எனவே, 2016 ஜனவரி 1ஆந் திகதிக்கு முன்னர் இளைப்பாறியவர்களும் ; 03ஃ2016 ஆம் இலக்க பொது நிர்வாக சுற்றுநிருபத்தின் கீழ் பல்வேறு மட்டங்களில் வழங்கப்பட்ட சம்பள அதிகரிப்புக்கு தகைமைபெற்ற அத்திகதிக்குப் பின்னர் இளைப்பாறியவர்களுக்குமிடையில் பெறும் ஓய்வூதியத்தில் முரண்பாடு காணப்படுகிறது. 2019 யூலை 01 ஆம் திகதியிலிருந்து பயன்வலுப்பெறும் வகையில் இளைப்பாறும் காலத்தில் ஓய்வூதியம் பெறுநரினால் பெற்றுக் கொள்ளப்பட்ட அடிப்படை சம்பளத்திற்கு; 03ஃ2016 ஆம் இலக்க பொதுநிர்வாக சுற்றறிக்கையின் முதல் 2 கட்டங்களைச் சேர்ப்பதன் மூலம் ஓய்வூதிய திருத்தமொன்றினை முன்னெடுப்பதற்கு நான் முன்மொழிகின்றேன். ஓய்வூதிய முரண்பாடுகளை திருத்துவதற்கு இவ்வருடத்திற்காக ரூபா 12,000 மில்லியனை மேலதிகமாக ஒதுக்கீடு செய்வதற்கு நான் முன்மொழிகின்றேன். இதன் மூலம் பாதிக்கப்பட்ட ஏறக்குறைய 585,000 ஓய்வூதியம் பெறுநர்கள் நன்மையடைவர். உதாரணமாக கீழ்படித் தரத்தையுடைய அரசாங்க ஊழியரின் ஓய்வூதியம் மாதமொன்றுக்கு ஆகக்குறைந்தது 1,600 ரூபாவினால் அதிகரிக்கும். தரம் iஐச் சேர்ந்த ஆசிரியர் ஒருவரின் மாதாந்த ஓய்வூதியம் 4,600 ரூபாவினாலும் அமைச்சின் செயலாளர் ஒருவரின் ஓய்வூதியம் மாதாந்தம் 12,000 ரூபாவினாலும் அதிகரிக்கும். இத்திருத்தமானது 25 வருட சேவை மற்றும் 2015 டிசெம்பர் 31 இற்கு முன்னரான இளைப்பாறுதலினை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படும்.

152. பொலிஸ் திணைக்களத்திற்கான கொடுப்பனவுகள் அனைத்தும் 2017 மற்றும் 2018 இல் அதிகரிக்கப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், 20 வருடங்களுக்கு மேலாக சிறுதளவாவது அதிகரிக்கப்படாதுள்ள இராணுவத்தினரின் கொமாண்டோ கொடுப்பனவு, சீருடைக் கொடுப்பனவு, வாடகைக் கொடுப்பனவு மற்றும் நன்நடத்தைக் கொடுப்பனவு என்பன 2019 யூலை 01 ஆந் திகதியிலிருந்து அதிகரிக்கப்படும்.

153. கௌரவ சபாநாயகர் அவர்களே, தொழில்நுட்பம் மற்றும் நவீன மயப்படுத்தலின் ஊடாக எமது அரச துறையின் தரம் மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது. இச்செயன்முறைக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவதற்கு நான் முன்மொழிகின்றேன்.

154. இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை புலன்விசாரணை செய்வதற்கான ஆணைக்குழு பொது மக்களுக்கிடையிலான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டத்தினை நடத்துவதன் மூலம் மேலும் வலுவூட்டப்படும்.

155. கௌரவ சபாநாயகர் அவர்களே, அரசாங்க நடபடி முறைகளை டிஜிற்றல் மயப்படுத்தல் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டதுடன், சிறந்த ஆளுகை மற்றும் பொறுப்புக்கூறும் சமூகமொன்றினை நோக்கி இலத்திரனியல் அரச டிஜிற்றல் ஆவண முகாமைத்துவத்திற்கு முக்கியத்துவம் வழங்கும் வகையில் 2019 இல் தொடர்ந்து முன்னெடுக்கப்படும். இத்திட்டத்தினை செயற்படுத்துவதற்கு ரூபா 800 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

156. 'கிராம சக்தி' உற்பத்தி கிராமங்களில் தொழில்முயற்சியாளர்களுக்கு தொழில் நுட்ப வசதி மூலம் மேலும் ஒத்துழைப்பு வழங்கப்படும்.

157. திறன் அபிவிருத்தியினூடாக இளைஞர் வலுவூட்டுகையானது 'ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா' கருத்திட்டத்தின் மூலம் மேலும் ஒத்துழைப்பு வழங்கப்படும்.

158. இலக்குகள் மீறப்படுகின்ற சந்தர்ப்பங்களை ஏற்படுத்துகின்ற திருத்தல் முறைமை மற்றும்தெளிவாக வரையறுக்கப்பட்ட நழுவல் வாசகங்களுடன் சட்ட ரீதியான அரசிறை இலக்குகளை பினிக்கும் அரசிறை விதிமுறைகளை வலுப்படுத்தும் வகையில் 2003 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க அரசிறை முகாமைத்துவ (பொறுப்புச் சட்டம்) திருத்தப்படும்.

159. கடந்த வரவு செலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்ட புதிய நாணயச் சட்டம் தற்பொழுது வரையப்பட்டுள்ளது. எமது நாட்டை பல தசாப்தங்களாக பீடித்திருந்த நாணய மற்றும் அரசிறை ஊதாரித்தனத்தினை இல்லாதொழிப்பதற்கு உதவுகின்ற விடயங்களை அறிமுகப்படுத்துகின்ற மிக முக்கிய சட்டவாக்கமாக இது காணப்படும்.

160. பாலின அடிப்படையிலான வரவுசெலவுத் திட்டம் அரசாங்கத்தின் பாலின அடிப்படையிலான வரவு செலவுத் திட்டத்தினை உறுதிப்படுத்தும் வகையில் ஆரம்ப செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், தொழிலாளர் படையில் பெண்களின் பங்களிப்பினை மேம்படுத்துவதற்காக 2018 ஆம் ஆண்டிற்குரிய வரவுசெலவுத் திட்ட அழைப்பிற்கு திருத்தமொன்று வெளியிடப்பட்டது. 12 பிரதான செயற்திறன் குறிகாட்டிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றினை அடைவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன. நான் மேலும் இது தொடர்பாக ஒவ்வொரு அமைச்சின் கீழும் பாலினம் தொடர்பான தகவல் திரட்டுக்களைப் பெற்றுக் கொள்ளளும் நோக்கில் இணைப்பாளர்கள் இணைக்கப்பட வேண்டும் என முன்மொழிகின்றேன்.

161. இலங்கையின் உயர் நலனோம்பல் திட்டமான 'சமுர்த்தி' 1994 ஆம் ஆண்டு வறியவர்களை படிப்படியாக உயர் வருமானம் பெறும் நிலைக்கு உயர்த்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டாலும், துரதிஷ்டவசமாக அவர்களை அப்பாதிப்புகளிலிருந்து விடுபடச் செய்யவோ, அவர்களை வலுப்படுத்தவோ தவறிவிட்டது. அது தற்போது அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதுடன், அநேகமான சமுர்த்தி அலுவலர்கள் மிகவும் வலுவான அரசியல் கட்சிகளில் இணைந்து செயற்படுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.

162. அதன்படி தகுதியுடையவர்கள் இத்திட்டத்தில் பயன்பெற முடியாத வகையிலும், தகுதியற்றவர்கள் குறிப்பிட்ட அரசியல் கட்சியொன்றுக்கு தொண்டு புரியும் உறுப்பினர்களாகவே அதிகம் காணப்படுகின்றமையால் அரசியல் இலாபங்களினூடாக இலவச மானியங்களை தொடர்ச்சியாகப் பெறுபவர்களாகவும் காணப்படுவதனால் 'ஏழை தொடர்ந்தும் ஏழையாக' இருக்கும் நிலையே இதன் இறுதி முடிவாகும். இது எமது ஏழை

எளியவர்களின் பொருளாதார சுதந்திரத்தை சமரசம் செய்யும் நிலையில்

அமைந்துள்ளது. ஆகவே, 'சமுர்த்தி' திட்டத்தினை வெளிப்படையான அளவிடத் தக்க நியமங்களைக் கொண்டு சிறந்த முறையில் நெறிப்படுத்துவதன் மூலம் உண்மையில் சுமார் 600,000 குடும்பங்களில் அபிவிருத்தியினை ஏற்படுத்தலாம். இதற்காக ரூபா. 10,000 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தகுதியுள்ள அநேக குடும்பங்கள் வேறொரு அரசியல் கட்சிக்கு விசுவாசமாக உள்ளதன் காரணமாக இத்திட்டத்திலிருந்து தவிர்க்கப்பட்டுள்ளார்கள்.

163. கௌரவ சபாநாயகர் அவர்களே, 'சமுர்த்தி' உதவி பெறுனர்கள் கனிசமான நிதித்திறட்டினை 'சமுர்த்தி' வங்கிகள் மற்றும் ஏனைய வங்கிகளில் வைப்பிட்டுள்ளார்கள். இது அவர்களுடைய பணம், ஆகவே வங்கிகளிலுள்ள அவர்களின் சமுர்த்தி கட்டாய சேமிப்பிலிருந்து ஒருவர் ரூபா 30,000 வரை இரு தவணைகளில் ஏப்ரல் மற்றும் நவம்பர் மாதங்களில் சிங்கள, தமிழ் வருடப் பிறப்பு மற்றும் கிறிஸ்மஸ் பண்டிகைகளுக்கான அவர்களது இலாபப் பங்காக பெற்றுக் கொள்வதற்கு அனுமதி அளிக்கின்றேன்.

164. இலங்கை முகங்கொடுக்கும் அதிகரித்து வரும் சவாலாக முதியோர் சனத்தொகை காணப்படுகின்றது. இப்பிரச்சினைக்கு முழுமையான தீர்வினைப் பெற்றுக் கொள்ளும் முகமாக அரசாங்கம் நிலைபேறான நிதிக் கட்டமைப்பினை உள்ளடக்கிய தேசிய ஓய்வூதியத் திட்டமொன்றினை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது.

165. இம்முயற்சியில் சமூகம் காத்திரமான பங்கினை வகித்தால் மட்டுமே சுற்றுச் சூழலை சிறந்த முறையில் பாதுகாக்க முடியும். அதன்படி சமுகத்தினை அடிப்படையாகக் கொண்ட 'பசுமைக் கழகங்கள்' ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் மாணவர்களை உள்ளடக்கியதான தன்னார்வலர்களைக் கொண்டு அமைக்கப்படவுள்ளன. இக்கழகங்கள் முக்கியமாக 2.5 மில்லியன் மரங்களை நடும் திட்டத்தினை துரிதப்படுத்துவதற்காகவும், கடற்கரைகளை சுத்தப்படுத்தல், கழிவுகளை வேறுபடுத்தல் போன்றவற்றிற்காகவும் ஈடுபடுத்தப்படவுள்ளன.

166. 'ஹரித்த உத்யான' (சூழல் நட்புப் பூங்காக்கள்) எனும் பசுமையானதும் தூய்மையானதுமான பொது இடங்களை உருவாக்குவதற்கு முதலீடுகளை மேற்கொள்ளவுள்ளோம். இது எமது கிராமங்களையும், நகரங்களையும் பசுமைப்படுத்துவதற்கும் சமூகங்களிடையே வலிமையான பிணைப்புக்களை உருவாக்குவதற்கும் வசதி ஏற்படுத்திக் கொடுக்கும். நாம் கொழும்பு மாநகர சபையுடன் இணைந்து அதன் 'நகர அழகுபடுத்தல்' முயற்சியில் பங்கெடுப்போம். இதற்காக ஏற்கனவே, 1000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

167. மேலும், 'நில்வள எலிய' மாதிரிப் பூங்கா மற்றும் பெருவலையம் 2019 ஆம் ஆண்டு நிறைவடையவுள்ளது. ரூபா 1,000 மில்லியன் ஏற்கனவே இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

168. சதுப்பு நில கண்டல் தாவரங்கள் சூழல் அமைப்பிலுள்ள கரையோரங்களை வலிமைப்படுத்துவதுடன், பல்வேறு பிராணிகளின் முக்கியமான வாழ்விடமாகவும், காலநிலை மாற்றத்தில் தவிர்க்க முடியாத அவசியத் தேவைகளாகவும் காணப்படுகின்றன. இருந்த போதிலும் எமது கண்டல் தாவரங்கள் தற்போது வேகமாக அருகி வருகின்றன. அதனால் நாம் கண்டல் தாவர மீள் நடுகையினை மேற்கொள்ளவுள்ளதுடன், அதன் முதற் கட்டமாக நாற்று மேடைகள் உருவாக்கப்படவுள்ளன.

169. அனர்த்தத்தினால் அதிகம் பாதிப்படையும் என இனங்காணப்பட்ட சில மாவட்டங்களில் அனர்த்தத்திற்கு ஈடுகொடுக்கும் வீடுகள் அறிமுகப்படுத்தப்படும். அதேவேளையில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்குரிய வீடுகளை புனரமைத்தல் மற்றும் ஏனைய அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் என்பவற்றிற்காக ரூபா. 2,000 மில்லியன் ஒதுக்கப்படும்.

170. கௌரவ சபாநாயகர் அவர்களே, சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் வரட்சி காரணமாக உயிரிழப்பு, வருமான இழப்பு மற்றும் சொத்திழப்புகளுக்கு முகங்கொடுத்துள்ளோம். இவ்வாவாறான அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட தனிநபர்கள் மற்றும் பெருநிறுவனங்களுக்கு இழப்பீட்டினை சிறந்த மற்றும் பயனுறுதிமிக்க முறையினூடாக உடனடியாக வழங்கி அவர்களது பாதிப்புக்களை குறைப்பதற்காக நாம் ரூபா. 20,000 மில்லியன் அனர்த்த முகாமைத்துவ எதிர்பாரா செலவின நிதியத்திற்கான இடைக்காலக் கொடுப்பனவாக ஒதுக்கீடு செய்கின்றோம்.

171. இலங்கை உலக இடர் அபாய சுட்டியினால் இயற்கை அனர்த்தங்களினால் அதிகளவு அபாயத்திற்குள்ளாகும் நாடாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில வருடங்களில் நாட்டின் ஒரு பகுதி கடுமையான வரட்சிக்கு முகங்கொடுத்துக் கொண்டிருக்கும் அதே வேளை அக்காலப்பகுதியில் ஏனைய பிரதேசங்கள் கடுமையான வெள்ளப் பெருக்கினை எதிர்கொண்ட அனுபவங்களையும் நாம் கண்டுள்ளோம். ஆகவே இயற்கை அனர்த்தங்களினால் ஏற்படும் பாதிப்புக்களைக் குறைப்பதற்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடுகளை வழங்குவதற்கும் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்வது காலத்தின் அவசிய தேவையாகவுள்ளது. எனவே, அரசாங்கத்தினால் 2016 இல் அறிமுகப்படுத்தப்பட்ட இயற்கை அனர்த்த காப்பீட்டுத் திட்டத்தினை வலுப்படுத்தும் நோக்கில் மேலதிகமாக ரூபா 1,000 மில்லியன் இவ்வருடத்திலும் ஒதுக்கீடு செய்வதன் மூலம் வருடாந்த அரச காப்பீட்டுப் பெறுமதி ரூபா. 500 மில்லியனிலிருந்து ரூபா 1,500 மில்லியனாக அதிகரிக்கப்படும்.

172. 'கம்பெரலிய' அபிவிருத்தி முன்னெடுப்புக்கு மேலதிகமாக பிரத்தியேகமாக உலர் வலய அபிவிருத்தி முன்னெடுப்புகளுக்காகவும் ஏற்கனவே நடைமுறையிலுள்ள மற்றும் முன்மொழியப்பட்டுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காகவும், மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் உலர் வலய அபிவிருத்தி அமைச்சுக்கு ரூபா. 250 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.

173. பிளாஸ்ரிக் பைகள் பொதியிடல், பிளாஸ்ரிக் போத்தல்கள், மதிய உணவுத் தாள்கள் என்பன போன்ற ஒரு தடவை பயன்படுத்தும் பிளாஸ்ரிக் பொருட்களின் பெருக்கம் கனிசமான அளவு சுற்றுச் சூழல் பாதிப்பினை அதிகரித்துள்ளது. இத்துறையில் பொருத்தமான ஒழுங்கு விதிகளை முதற் படியாக அறிமுகப்படுத்துவதுடன், எந்த நிறுவனமாயினும் ஒரு தடவை பயன்படுத்தும் பிளாஸ்ரிக் உற்பத்தி மற்றும் இறக்குமதி தொடர்பாக 2019 செப்டம்பர் 01 ஆந் திகதிக்கு முன்னர் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சில் பதிவு செய்யப்படல் வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

174. இலங்கையானது கடல்சார் வளத்தினை நிலைபேறாக பாதுகாக்கும் முகமாக திறண்ட கடல்சார் பாதுகாப்பு திட்டமொன்றினை அபிவிருத்தி செய்யும். இலங்கையில் பிரத்தியேகமான பொருளாதார வலயம் கடல்சார் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்படும் வரை நாங்கள் முன்னோக்கிச் செல்வோம். இது கடல் உயிரியல் பல்வகைத்தன்மையினை நிலைபேறான முறையில் முகாமை செய்வதினூடாக நாட்டின் சமூகப் பொருளாதார நலன்களை மேம்படுத்துவதற்கும் உதவியாக இருக்கும்.

175. இலங்கைத் திருநாட்டின் கலாசார விழுமியங்கள் மற்றும் எமது சமூகத்தினை மெருகேற்றல் தொடர்பில் கலைஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் ஆற்றிவரும் பங்களிப்பினை நாங்கள் மெச்சுகின்றோம். எமது அரசாங்கமானது நாட்டின் கலை கலாசாரம் என்பவற்றின் அபிவிருத்திக்கு தொடர்ந்தும் ஆதரவளித்து வருகின்றது. கலைஞர்கள் தொடர்ந்தும் தமது படைப்புக்களின் மூலம் நன்மை பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் கலைஞர்களின் படைப்புக்கள் ஒளி ஒலிபரப்பு அல்லது வெளியீடு செய்யப்படும் போது அதற்கான வேத்துரிமை கொடுப்பனவினை பெற்றுக் கொடுப்பதற்கான நியாயமானதொரு திட்டத்தினை நாங்கள் அறிமுகம் செய்து அமுல்படுத்தவுள்ளோம். இது அவர்களின் படைப்புக்களை பாதுகாப்பதுடன், அவர்களுக்கு தொடர்ச்சியான வருமான மூலத்தையும் பெற்றுக் கொடுக்கின்றது. இச்செயற்திட்டத்திற்கு ஆதரவளிக்கும் முகமாக ரூபா 50,000 வரையிலான மாதாந்த வேத்துரிமை வருமானமானது நிறுத்தி வைக்கப்பட்ட வரியிலிருந்து விளக்களிக்கப்படும்.

176. கௌரவ சபாநாயகர் அவர்களே, 'கம்பெரலிய' நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பௌத்த விகாரைகள் மற்றும் ஏனைய மத வழிபாட்டுத் தளங்களை புனர்நிர்மானம் செய்யும் வேலையை ஆரம்பித்துள்ளோம். 2019 ஆம் ஆண்டு வழிபாட்டுத் தளமொன்றுக்கான ஒதுக்கீட்டினை 500,000 ரூபாயிலிருந்து 1 மில்லியன் வரை அதிகரித்துள்ளோம்.

177. 'கம்பெறளிய' நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மத வழிபாட்டுத் தளங்களுக்கு சூரிய மின்கலங்கள் பெற்றுக் கொடுக்கப்படும். இதன் மூலம் அவற்றின் மின்சாரச் செலவானது குறைக்கப்படுவதுடன், தேசிய மின்கட்டமைப்புக்கான சுமையினையும் குறைக்கின்றது.

178. மடு தேவாலயத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூபா 200 மில்லியன் பெற்றுக் கொடுக்கப்படும்.

179. ஜோன் டீ. சில்வா கலையரங்கமானது நவீன உபகரணங்கள் பொருத்தப்பட்டு புனரமைப்பு வேலைகளானது 2020 இல் பூர்த்தி செய்யப்படும்.

180. தேசிய கலாபவனம் நவீனமயப்படுத்தப்பட்டு நவீன கலைகளுக்கான பிரத்தியேகப் பகுதியொன்றும் உருவாக்கப்படும்.

181. மொறட்டுவையில் உலகத் தரத்திலான கவின் கலை நிலையமொன்றினை நிர்மாணிப்பதற்கான வேலைகள் 2019 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்படும்.

182. வடக்கு, கிழக்கில் எமது மக்கள் முகங்கொடுக்கும்பல்வேறு பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக பன்முக உபாயத்தினை முன்னெடுத்தோம். எமது உபாயமானது நிலைபேறான வாழ்வாதாரம் அதிகம் கடன் பட்டுள்ள மற்றும் வலுவிழந்தோர்க்கு உதவியளித்தல் போன்ற நோக்கங்களினால் வழிப்படுத்தப்பட்டது.

அனைத்துப் பங்குதாரர்களும் நீதி, கடந்த கால வன்முறைகள் மீண்டும் இடம்பெறாது என்ற உறுதி ஆகியவற்றைக் கொண்ட அரசாங்கத்தின் வேலைச் சட்டகத்தின் அர்ப்பணிப்பினால் உறுதிப்படுத்தப்படுகின்றனர். வட மாகாணத்தின் பொருளாதார அபிவிருத்திக்கான வேலைச் சட்டகமானது அனைத்துப் பங்குதாரர்கள் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் பங்குபற்றலுடன் ஆரம்பிக்கின்றோம். இதனை ஒரு உறுதியான நடவடிக்கைத் திட்டமாக மாற்றுவதற்கான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் வட மாகாணத்திலுள்ள அனைத்துப் பிரஜைகளும் பயனடைவர். நாங்கள் இவ்வேலைச் சட்டகம் இவ்வாறு இதனை இதே போல் பாதிக்கப்பட்ட ஏனைய மாவட்டங்களுக்கும் பயன்படுத்தப்படும். தேசிய முயற்சியில் பங்குபற்றுமாறு தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகத்திற்கு அழைப்பு விடுக்கப்படும்.

183. இப்பிரதேசத்தில் நாம் எடுக்கும் முயற்சிகளில் நிலைபேற்றுத் தன்மையை உறுதி செய்வதற்கு எமது நல்லிணக்க முயற்சிகளானது மிகவும் உறுதியான மற்றும் அர்த்தமுள்ள வகையில் எத்திவைக்கப்படல் வேண்டும். இந்நோக்கத்திற்காக பிரதம மந்திரியின் அலுவலகத்தில் இயங்கும் நல்லிணக்கப் பொறிமுறை ஒருங்கிணைப்புச்செயலகத்தின் மூலம் விழிப்புணர்வு மற்றும் தெளிவுபடுத்தல் நிகழ்ச்சிக்காக ரூ. 200 மில்லியனை ஒதுக்குவதற்கும் முன்மொழிகின்றேன்.

184. நட்டஈட்டு அலுவலக சட்டமூலமானது பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதன் செயற்பாடுகள் 2019 ஆம் ஆண்டு ஆரம்பமாகும். காரியலாயத்திற்கு அவசியமான ஆளணி மற்றும் உரிய வளங்கள் போதுமானளவு பெற்றுக் கொடுக்கப்படும்.

185. காணாமல் போனோர் அலுவலகத்திற்கு போதுமான வளங்கள் பெற்றுக் கொடுக்கப்பட்டு நாடு பூராகவும் காணாமல் போனோரின் குடும்பங்களுக்கும் மற்றும் காணாமற் போனமைக்கான சான்றிதழ் பெற்றுக் கொண்ட நடவடிக்கைகளின் போது காணாமற் போன இராணுவம் மற்றும் பொலிஸார் உள்ளடங்களாக தேவையான உதவிகள் வழங்கப்படும்.

காணாமல் போன அலுவலகம் உருவாக்கப்பட்டு அவர்களது பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரையில் மாதாந்தம் 6,000 ரூபா கொடுப்பனவு பெற்றுக் கொடுக்கப்படும். இவர்களின் குடும்பங்களுக்கு 'என்டர்பிறைஸ் ஸ்ரீ லங்கா' கடன் திட்டத்தின் கீழ் கடன்களைப் பெற்றுக் கொள்வதற்கும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகத்தினால் ஒருங்கிணைக்கப்படும் வாழ்வாதார அபிவிருத்தித் திட்டங்கள் என்பவற்றில் இணைந்து கொள்வதற்கும் விசேட முன்னுரிமையளிக்கப்படும்.

186. வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தியினைத் துரிதப்படுத்தும் முகமாக, இரண்டு வருட காலப்பகுதியில் ரூபா 5,000 மில்லியன் முதலீட்டில் துரித அபிவிருத்திக்காக 'பனை நிதியம்' உருவாக்கப்படும். இதற்கு பங்களிப்புச் செய்யுமாறு நலன்விரும்பிகள், கொடை வழங்குனர்கள், விசேடமாக புலம்பெயர்ந்து வாழ்வோர் போன்றவர்களுக்கு நாம் அழைப்பு விடுக்கின்றோம். இந்நிதியானது திறைசேரியினால் நிர்வகிக்கப்படும். இந்நிதியானது யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு மாவட்ட அரசாங்க அதிபரினூடாக பயன்படுத்தப்படும். அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக இந்நிதியானது மதுபானம் மற்றும் போதைப் பொருள் பாவனை, இளைஞர் வேலையின்மை போன்ற பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் சிவில் சமூக உளவள நிகழ்ச்சித்திட்டங்களுக்கு ஆதரவளிப்பதற்கும் பயன்படுத்தப்படும்.

187. கிராமியப் பொருளாதாரத்தில் 50 சிறிய கைத்தொழில்களை ஆரம்பிப்பதன் மூலம் துரிதமாக தொழில் வாய்ப்புக்களை உருவாக்குதல் மற்றும் போதுமான வருமானத்தினை பெற்றுக் கொள்வதற்குமாக 2018 இல் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்களில் குறிப்பிடும்படியான முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த வருடத்தில் மெற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக இத்திட்டத்தினை மேலும் 50 சிறிய அளவிலான கைத்தொழில் கூட்டுறவுச் சங்கங்களை துரிதமாக உருவாக்குவதற்கும் ஏற்கனவே உருவாக்கப்பட்ட சங்கங்களை அடுத்த கட்ட அபிவிருத்தியில் பொருளாதார வலுவூட்டலினூடாக வழிநடாத்துவதற்கும் சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளது. இலங்கையைச் சேர்ந்த இளம் பொறியிலாளர்கள் மற்றும் தொழில் நுட்பப் பட்டதாரிகளால் உருவாக்கப்பட்டுள்ள டெக் 'சிலோன் சோஸியல் வென்ச்சர்' என்ற இலாப நோக்கமற்ற கம்பனியானது வடக்கில் இச்சிறிய கைத்தொழில் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்கள் முன்மாதிரித் திட்டத்தினை செயற்படுத்துவதற்குத் தேவையான தொழில்நுட்ப சேவைகளை சுயேச்சையாக பெற்றுக் கொடுக்கின்றது. இவ்வுதவியானது அரசாங்க முதலீட்டின் வெற்றிக்கு மிகவும் இன்றியமையாததாகும். நாட்டின் ஏனயை பகுதிகளிலுள்ள இளம் தொழில் வல்லுனர்கள் எமது தேசிய பொருளாதாரத்திற்கு இவ்வாறான பங்களிப்பினை வழங்குவார்கள் என நான் நம்புகின்றேன்.

188. படுகடன் நிவாரணத் திட்டமானது கூட்டுறவு கிராமிய வங்கிகள் மற்றும் சிக்கனக் கடன் கூட்டுறவு சங்கங்களினூடாக தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.

189. கள்ளு போத்தலில் அடைத்தல் மற்றும் கருப்பட்டி உற்பத்தியினை கைத்தொழில் உற்பத்திகளாக உருவாக்குவதற்கான ஒருங்கிணைந்த கருத்திட்டமொன்று உரிய கூட்டுறவுச் சங்கங்களின் ஒத்துழைப்புடன் வட மாகாணத்தில் உருவாக்கப்படும்.

190. விவசாயிகள் மற்றும் சந்தைகளுக்கிடையிலான மிகவும் வினைத்திறன் மிக்க வர்த்தக இணைப்புகளுக்கு வசதியளிப்பதற்கு மத்திய பொருளாதார மையமொன்றுடன் இணைக்கப்பட்ட 10 துணைப் பொருளாதார நிலையங்கள் வடமாகாணத்தில் தாபிக்கப்படும்.

191. மன்னாரில் விவசாயத்துறைக்கு வசதியளிக்கும் வகையில் கட்டுக்கரைக் குளம் புனரமைக்கப்படும்.

192. வடக்கு மற்றும் கிழக்கில் பகுதியளவு நிர்மாணிக்கப்பட்ட அல்லது அழிவுற்ற வீடுகளை நிர்மாணிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கும் ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்ட வீடுகளுக்கு நீர் மற்றும் மின்சாரம் போன்ற வசதிகளை வழங்கு வதற்குமாக ரூபா 2,000 மில்லியன் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

193. திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார், குருநாகல், புத்தளம், அநுராதபுரம் மற்றும் பொலநறுவை மாவட்டங்களில் வரட்சியினால் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களான ஏறக்குறைய 45,000 பெண்களுக்கு கடன் நிவாரணத்தினை நாம் வழங்கியுள்ளோம். அவர்களுக்கு ஆகக்கூடியது 100,000 ரூபா வரை (ஆரம்ப மூலதனம்) சிறு நிதி கடனும் 2018 யூன் மாதத்திலிருந்து ஆகக் குறைந்தது மூன்று மாதங்களின் நிலுவையும் விலக்களிக்கப்பட்டுள்ளது. இந்நிலைமையினை எதிர்காலத்தில் குறைக்கும் வகையில் 'என்ரபிறைஸ் ஸ்ரீ லங்கா' நிகழ்ச்சித்திட்டம் மற்றும் கூட்டுறவு சங்கங்களிலிருந்து சலுகைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

194. வடமாகாணத்தில் நிலைபேறான வாழ்வாதாரத்தினை ஏற்படுத்தவும் நல்லிணக்கத்தினை உறுதிப்படுத்து வதற்குமான எமது முயற்சிகள் மேலும் வலுப்படுத்தப்படும். இதற்காக 'சகோதர பாடசாலை' நிகழ்ச்சித்திட்டம், 'கடந்த காலத்தை மறப்போம் - எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவோம்' விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம், இராணுவ வீரர்களின் விதவைகளுக்கான 'விருளிய சக்தி' நிகழ்ச்சித்திட்டம், கலை மற்றும் கலாசாரத்தின் ஊடாக சமாதானத்திற்கான நிகழ்ச்சித்திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் என்பவற்றை உள்ளடக்கியதாக தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்துக்கான அலுவலகத்தினால் செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படும். இந்நிகழ்ச்சித்திட்டங்களை செயற்படுத்தல் மற்றும் மேம்படுத்தல், புதிய நிகழ்ச்சித்திட்டங்களை வடிவமைத்தல் மற்றும் செயற்படுத்தல் என்பவற்றுக்காக தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்திற்கு மேலும் ஒத்தாசை வழங்கப்படும்.

195. இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வரி வருமானத்தின் வீதமானது உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஆகக் குறைந்த நிலைக்கு சென்றுள்ளதுடன் நாட்டின் வரி வினைத்திறன் விகிதமும் இலங்கையினை ஒத்த ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் கீழ் நிலைக்குச் சென்றுள்ளது. இப்பின்னணியில் 2019 இல் அரசிறை வருமானத்தினை அதிகரிப்பதற்கான பின்வரும் வருமான முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதுடன் வரி விதிப்பனவு முறைமையில் காணப்படும் சில முரண்பாடுகளை நீக்குவதற்கான சிபாரிசுகளையும் நான் முன்மொழிகின்றேன். ஒவ்வொரு வருமான முன்மொழிவினதினதும் விபரம் பின்னிணைப்பு I இல் தரப்பட்டுள்ளது.

196. சிகரட்டுகள் மீதான உற்பத்தித் தீர்வை 60 மில்லி மீற்றருக்கு மேற்பட்ட கூறுகளுக்கு 2019 மார்ச் 06 ஆந் திகதியிலிருந்து 12 சதவீதத்தினால் அதிகரிக்கப்படுவதனால், ஒவ்வொரு தனிக்கூருக்குமான விலையானது சராசரியாக ரூபா 5 இனால் அதிகரிக்கும். 2019 யூன் 01 ஆம் திகதியிலிருந்து சிகரட்டுகள் உற்பத்தி மீதான தேச கட்டுமான வரி அறிமுகப்படுத்தப்படும். வருடாந்த பண வீக்கம் மற்றும் மொத்தத் தேசிய உற்பத்தி வளர்ச்சி என்பவற்றினைக் கொண்டு ஆகக் குறைந்த வருடாந்த தீர்வை அதிகரிப்புடன் விலைக் குறியீட்டினை அடிப்படையாகக் கொண்டு சிகரட்டுகள் மீதான உற்பத்தித் தீர்வை விதிக்கப்படும். இது வருமான பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதுடன் செலவினத்தினையும் கட்டுப்படுத்தும்.

197. மோட்டார் வாகனங்கள் மீதான சொகுசு வரி மற்றும் உற்பத்தி தீர்வை திருத்தமானது, 2019 மார்ச் 06 ஆந் திகதியிலிருந்து செயற்படுத்தப்படுவதுடன், உற்பத்தி தீர்வை திருத்தமானது சிறிய தனிப்பட்ட வாகனங்கள் மீது குறைந்தளவான தாக்கத்தினையே ஏற்படுத்தும். இதற்கு மேலதிகமாக மோட்டார் வாகன இறக்குமதி மீதான 200 சதவீத காசு வரம்பெல்லை தேவைப்பாடானது எதிர்காலத்தில் நீக்கப்படும்.

198. பீடி இலைகளின் இறக்குமதி மீதான உற்பத்தித் தீர்வை கிலோ கிராம் ஒன்றுக்கு 2,500 இலிருந்து 3,500 ரூபாவாக 2019 மார்ச் 06 ஆந் திகதியிலிருந்து திருத்தப்படும்.

199. ஆளொருவருக்கான புறப்படுகைக் கட்டணம் 10 ஐ.அ. டொலரினால் அதிகரிக்கப்படும். இவ்வாறு அதிகரிக்கப் படுகின்ற புறப்படுகைக் கட்டணம் 2019 ஏப்ரல் 01 ஆந் திகதியிலிருந்து திரட்டு நிதியத்தில் வரவு வைக்கப்படும்.

200. ஏதேனும் கடன் அட்டை மற்றும் பற்று அட்டை மூலம் மேற்கொள்ளப்படும் அனைத்து வெளிநாட்டு கொடுப்பனவுகள் மீதான தற்பொழுது காணப்படும் முத்திரை தீர்வைக்குப் பதிலாக 3.5 சதவீத தேச கட்டுமான வரி அறிமுகப்படுத்தப்படும். இது 2019 மார்ச் 06 ஆந் திகதியிலிருந்து செயற்படுத்தப்படும். இம் முன்மொழிவானது கரை கடந்த டிஜிட்டல் சேவைகளின் வரி விதிப்பனவு குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு உதவும்.

201. கடவுச் சீட்டு ஒரு நாள் மற்றும் சாதாரண விநியோகம், கடவுச் சீட்டு திருத்தம் தொடர்பான கட்டணங்கள் 2019 ஏப்ரல் 01 ஆந் திகதியிலிருந்து பயன்வலுப் பெறும்வகையில் திருத்தப்படும்.

202. மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினால் விநியோகிக்கப்படும் மோட்டார் வாகனத்துக்கான பெயருடன்கூடிய தனிப்பட விசேட இலக்கத் தகடுகளுக்கான விலை 2019 யூன் 01 ஆந் திகதியிலிருந்து திருத்தப்படும்.

203. வருடாந்த பண வீக்கம் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி என்பவற்றின் அடிப்படையிலான சுட்டியொன்றினை அடிப்படையாகக் கொண்டு ஆகக் குறைந்த வருடாந்த உற்பத்தித் தீர்வை கணிப்பீடு செய்யப்படுவதோடு 2019 மார்ச் 06 ஆந் திகதி முதல் விலைச்சுட்டியின் அடிப்படையில் திருத்தப்படும். உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் வன் மதுபானங்கள் மீதான மதுவரி 8 சதவீதத்தினாலும் (விசேட சாராயத்திற்கான உற்பத்தித் தீர்வையானது தொடர்ந்து மாறாதிருக்கும்) பாகு மதுபானம் மீதான உற்பத்தித் தீர்வை 12 சதவீதத்தினாலும் வருடாந்த பண வீக்கம் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி என்பவற்றின் அடிப்படையிலான சுட்டியொன்றினை அடிப்படையாகக் கொண்டு ஆகக் குறைந்த வருடாந்த தீர்வை கணிக்கப்படும்.

204. முதலீட்டுச் சபையினால் அங்கீகரிக்கப்பட்ட தொழில் முயற்சிகளினால் ஆடைகள் விற்பனை மீதான பெறுமதி சேர் வரி துண்டொன்றுக்கு 75 ரூபாவிலிருந்து 100 ரூபாவாக பணவீக்க விலைக்குறியீட்டின் அடிப்படையில் 2019 யூன் 01 ஆந் திகதியிலிருந்து திருத்தப்படும்.

205. 2016 இலிருந்து இதுவரை திருத்தப்படாத கட்டணங்கள் மற்றும் அறவீடுகள் அனைத்தும் 15 சதவீதத்தினால் 2019 யூன் 01 ஆந் திகதியிலிருந்து அதிகரிக்கப்படும்.

206. அதிவேகப் பாதைகளின் நுழைவுக் கட்டணம் 2019 ஏப்ரல் 01 ஆந் திகதியிலிருந்து வாகன நெரிசல் மிக்க நேரங்களின் போது 100 ரூபாவினால் அதிகரிக்கப்படும்.

207. கசினோ விளையாட்டுக்கான வருடாந் உரிமக் கட்டணம் ரூபா 200 மில்லியனிலிருந்து 400 மில்லியனாகவும் ருத்ஜினோ விளையாட்டுக்கான வருடாந்த உரிமக் கட்டணமாக ரூபா 1,000,000 அறிமுகப்படுத்தப்படும். கசினோ புரள்வு வரி 15 சதவீதமாக அறவிடப்படும். புதிய திருத்தங்கள் 2019 ஏப்ரல் 01 ஆந் திகதியிலிலுந்து செயற்படுத்தப்படும்.

208. கசினோ நுழைவுக் கட்டணம் ஆளொருவருக்கு 50 ஐ.அ. டொலர் 2019 ஏப்ரல் 01 ஆந் திகதியிலிலுந்து அறவிடப்படும்.

209. தெரிவு செய்யப்பட்ட இறக்குமதிப் பொருட்கள் மீதான பொருளாதார சேவைக் கட்டணம் திருத்தப்படும்.

210. பழச்சாறு, மதுபானம் மற்றும் புகையிலைக்கான குறிப்பீட்டு விகித சுங்க இறங்குமதித் தீர்வை 2019 மார்ச் 01 ஆந் திகதியிலிருந்து திருத்தப்படும்.

211. வருமான மற்றும் செலவின முன்மொழிவுகள் பற்றிய விபரம் தொழில்நுட்ப குறிப்பில் தரப்பட்டுள்ளது.

212. 2019 நிதி வருடத்திற்கான 2019 இன் ஒதுக்கீட்டுச் சட்ட மூலத்திற்கான படுகடன் பெறுகை வரையறைக்கு உரிய திருத்தங்கள் பின்னிணைப்பு III இல் தரப்பட்டுள்ளது. வருமான முன்மொழிவுகள் பின்னிணைப்பு ஐ இல் தரப்பட்டுள்ளது. மேலும், அரசிறை வேலைச்சட்டக விபரம் பின்னிணைப்பு IV இல் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஒப்படைக்கப்பட்ட பணிகளை நிறைவேற்றுவதற்கு பின்பற்றப்பட வேண்டிய நிர்வாகச் செயன்முறைகளை கவனத்திற் கொண்டு மூலதன மற்றும் பொருட்கள் சேவைகள் செலவினத்திலிருந்து 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை சேமிப்பதற்கு நான் முன்மொழிகின்றேன். வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்புடன் சமர்ப்பிக்கப்படுகின்ற 2003 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க அரசிறை முகாமைத்துவ (பொறுப்புச்) சட்டத்தின் கீழான ஆவணம் இத்துடன் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகின்றது.

213. சனாதிபதி மற்றும் பிரதமருக்கு வழங்கிய வழிகாட்டல்களுக்காக நான் நன்றி கூற விரும்புகின்றேன். எனது இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்னவுக்கும் எனக்கு வழங்கிய ஒத்துழைப்புக்காக நன்றி கூறுகின்றேன். இந்த வரவு செலவுத்திட்டத்தினைத் தயாரிப்பதற்கு வழிகாட்டல்களாக அமைந்த முன்மொழிவுகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் நான் நன்றி கூறுகின்றேன். அமைச்சரவையிலுள்ள எனது நண்பர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வழங்கிய ஒத்துழைப்புகளை நான் மதிக்கின்றேன். இறுதியாக இந்த வரவு செலவுத்திட்டத்தினைத் தயாரிப்பதற்காக கடுமையாக உழைத்த திறைசேரியின் செயலாளர் மற்றும் அனைத்து அலுவலர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். எமது பொருளாதாரக் கொள்கைகள் காலத்திற்குக் காலம் குறுகிய கால வழிகாட்டல்களின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளதுடன் எமது பொருளாதார முறைமையில் நிச்சயமற்ற தன்மையினையும் பெரும் குழப்ப நிலையினையும் ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் உண்மையான ஆற்றல்களின் பலனை அனுபவிப்பதையிட்டும் இவை தடுத்தன. உண்மையில் எமது மக்கள் ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளனர். இப்பாராளுமன்றத்திலுள்ள எமக்கு இந்நிலையினை மாற்றுவதற்கான அதிகாரம் உள்ளது. நாம் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற எமது மக்களின் சுபீட்சத்தினை ஏற்படுத்தக்கூடிய புதிய முன்னுதாரணம் ஒன்றினை நாம் உருவாக்க முடியும்.

உங்கள் அனைவருக்கும் நன்றி..!

பட்ஜட் பின்னிணைப்புகள் நாளை

Wed, 03/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை