வடக்கு, கிழக்கில் உள்ள பல பிரச்சினைகளுக்கு காணி அமைச்சே காரணம்

வடக்கு, கிழக்கில் உள்ள பல பிரச்சினைகளுக்கு காணி அமைச்சே காரணமாகவிருக்கிறது. காணி அமைச்சு மக்களுக்குத் தேவையான காணிகளை விடுத்து காடாக இருக்கும் பகுதிகளையே வன இலாகா திணைக்களத்துக்கு வழங்க வேண்டும். இவ்வாறு செய்யாத காரணத்தினால் மக்களுக்கு காணிகள் கிடைப்பதில் தட்டுப்பாடு காணப்படுகிறதுஎன்று த.தே.கூபாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

தொலைத்தொடர்புகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு, விளையாட்டு மற்றும் காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு, தொழில்அமைச்சு ஆகியவற்றின் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்ததுகொண்டுஉரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது;

வடக்கு, கிழக்கில் உள்ள பல பிரச்சினைகளுக்கு காணி அமைச்சே காரணமாகவிருக்கிறது. குறிப்பாக மகாவலி திணைக்களம், தொல்பொருள் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் உள்ளிட்ட நான்கு அரசாங்க திணைக்களங்கள் பொது மக்கள் வாழும் பகுதிகளில் உள்ள காணிகளை தமக்கான இடங்களாக அடையாளப்படுத்தியுள்ளன. வர்த்தமானி அறிவித்தல் ஊடாக 72ஆயிரத்துக்கும் அதிகமான ஏக்கர் நிலம் மன்னாரில் வனஜீவராசிகள் திணைக்களத்தால் அபகரிக்கப்பட்டன. மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர் ஆகியோருடன் கலந்துரையாடாமல் காணி அபகரிப்புத் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்கள் மத்திய அரசாங்கத்தினால் விடுக்கப்படுகின்றன. காணி அமைச்சு மக்களுக்குத் தேவையான காணிகளை விடுத்து காடாக இருக்கும் பகுதிகளையே வன இலாகா திணைக்களத்துக்கு வழங்க வேண்டும். இவ்வாறு செய்யாத காரணத்தினால் மக்களுக்கு காணிகள் கிடைப்பதில் தட்டுப்பாடு காணப்படுகிறது.

அந்தந்த மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர் மற்றும் அந்தந்த மாவட்ட மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி காணிகளுக்கான பரிந்துரைகள் வழங்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் அந்தப் பகுதிகைய் சேர்ந்த வறுமையான மக்களுக்கு காணிகளை பகிர்ந்தளிக்க முடியாது போய்விடும்.

மன்னார் முசலி பிரதேசத்தின் காணி விவகாரம் தொடர்பில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன.  முசலி பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட காணிகளில் இருக்கின்ற பிரச்சினைகள் தொடர்பில் ஆராய மாகாண காணி ஆணையாளருடன் இணைந்து நேரடியாகச் சென்று பிரச்சினகளைத் தீர்த்துவைக்க வேண்டும். பலருக்கு காணி இல்லை. ஆனால் ஒரு தனிநபர் 14ஏக்கருக்கும் அதிகமான காணியை கையகப்படுத்தியுள்ளார். இவ்வாறான பிரச்சினைகள் நேரில் ஆராயப்பட்டு தீர்க்கப்பட வேண்டும்.

முல்லைத்தீவு மாவட்டத்துக்கான மாவட்ட விளையாட்டு மைதானத்தை அமைக்கும் பணிகள் எதுவும் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை. முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் இதற்கான காணி ஒதுக்கப்பட்டுள்ளபோதும் இதனை அமைப்பதற்கான 250மில்லியன் ரூபாய்கள் இன்னமும் ஒதுக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

(சபை நிருபர்கள்: லக்ஷ்மி பரசுராமன், மகேஸ்வரன் பிரசாத்)

Tue, 03/19/2019 - 14:11


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை