கோலன் குன்றில் இஸ்ரேல் இறைமையை அங்கீகரித்த அமெரிக்கா மீது ஐ.நா பாதுகாப்பு சபையில் கடும் சாடல்

சர்வதேச சட்டத்தை மீறி கோலன் குன்றில் இஸ்ரேலின் இறைமையை அங்கீகரித்த அமெரிக்கா மீது ஐ.நா பாதுகாப்புச் சபையில் ஏனைய 14 நாடுகளும் கடும் விமர்சனத்தை வெளியிட்டுள்ளன.

ஐ.நா தீர்மானத்தை அமெரிக்கா மீறியதாகக் கூறி சிரியா விடுத்த கோரிக்கையை அடுத்தே கடந்த புதன்கிழமை பாதுகாப்புச் சபை கூடியது.

1967 மத்திய கிழக்கு யுத்தத்தில் ஆக்கிரமித்து 1981இல் இஸ்ரேல் தனது ஆட்புலத்திற்குள் இணைத்துக் கொண்ட மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த மேட்டு நிலமான கோலன் குன்றில் இஸ்ரேலின் இறைமையை அங்கீகரிக்கும் பிரகடனத்தில் டிரம்ப் கடந்த திங்கட்கிழமை கைச்சாத்திட்டார்.

டிரம்பின் பிரகடனத்தை அடுத்து இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் கோலன் குன்றில் சிரியாவின் இறைமையை ஆதரித்தும் பாதுகாப்புச் சபை கூட்டத்தில் ஒருவர் பின் ஒருவராக உரை நிகழ்த்தினர்.

“இந்த தன்னிச்சையான நடவடிக்கை மத்திய கிழக்கு பிரச்சினையில் நீண்டகால அமைதித் தீர்வொன்றை காண்பதில் எந்த உதவியும் புரியாது” என்று தென்னாபிரிக்காவின் ஐ.நா பிரதிநிதி ஜெர்ரி மெடட்ஜிலா குறிப்பிட்டார்.

கோலன் குன்று தொடர்ந்தும் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு பகுதி என்ற நிலைப்பாட்டில் அரசுகள் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று சிரியாவின் நெருங்கிய நட்பு நாடான ரஷ்யா பாதுகாப்புச் சபையில் குறிப்பிட்டார்.

“இந்த மோசமான உதாரணத்தை தொடர்ந்து யாராவது உற்சாகத்தை உணர்வதாயின் சர்வதேச சட்டத்தின் இந்த ஆக்ரோஷமான திரும்புதலில் இருந்து விலகி இருக்கும்படி அவர்களை நாம் வலியுறுத்துகிறோம்” என்று ரஷ்யாவின் பிரதித் தூதுவர் விளாடிமிர் சப்ரொன்கோவ் குறிப்பிட்டார்.

சர்வதேச சட்டத்தில் இருந்து திரும்பும் எந்த ஒரு முயற்சியும் தோல்வியிலேயே முடியும் என்று பிரான்ஸ் எச்சரித்தது. அமெரிக்கா தனது மத்திய கிழக்கு அமைதி முயற்சியை தயார் செய்து வரும் நிலையிலேயே பிரான்ஸ் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

1967 ஆறு நாள் யுத்தத்தில் சிரியாவிடம் இருந்து ஆக்கிரமித்த கோலன் குன்றில் இருந்து வாபஸ் பெற இஸ்ரேலை வலியுறுத்தி மூன்று பாதுகாப்புச் சபை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த மேட்டு நலப்பகுதியை இஸ்ரேல் தனது ஆட்புலத்திற்குள் இணைத்தபோதும் சர்வதேசம் அதனை அங்கீகரிக்கவில்லை.

அமெரிக்கா தனது பிரகடனத்திற்கு இஸ்ரேலின் பாதுகாப்பை நியாயமாகக் கூறி வருகிறது.

சிரியா, ஈரான் மற்றும் அதன் கூட்டணியான ஹிஸ்புல்லாஹ் அந்த நிலப்பகுயில் இருந்து இஸ்ரேலை தாக்க முயற்சிக்கும் நிலையில் சிரியாவிடம் கோலன் குன்றின் கட்டுப்பாட்டை வழங்குவது குருட்டுத்தனமானது என்று அமெரிக்க இராஜதந்திரி ரொட்னி ஹன்டர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே கோலன் குன்று இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி என்று பிரகடனம் செய்யும் ஐ.நா தீர்மானங்களை சீனா ஞாபகமூட்டியது. “உண்மைக்கு மாறாக எந்தவொரு தன்னிச்சையான நடவடிக்கையையும் சீனா எதிர்க்கிறது” என்று அந்நாட்டின் ஐ.நாவுக்கான பிரதித் தூதுவர் வூ ஹெய்டோ குறிப்பிட்டார்.

Fri, 03/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை