ஒப்பந்தத்தை இரத்துச்செய்வதாயின் அரசுக்கு 810 மில். டொலர் நஷ்டம்

வெளிநாட்டிலிருந்து 20 ஆயிரம் கறவைப் பசுக்களை இறக்குமதி செய்வது தொடர்பில் வெளிநாட்டு நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை இரத்துச் செய்வதாயின் அரசாங்கம் 810 மில்லியன் அமெரிக்க டொலர்களை நஷ்டஈடாகச் செலுத்த வேண்டியிருக்கும் என கமத்தொழில், கிராமிய பொருளாதார அலுவல்கள், கால் நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அபிவிருத்தி அமைச்சர் பீ.ஹரிஷன் தெரிவித்தார்.

பசில் ராஜபக்ஷ பொருளாதார அமைச்சராகவிருந்த காலப் பகுதியிலேயே பசுக்களை இறக்குமதி செய்ய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதுடன், இவற்றை இறக்குமதி செய்ய முன்னர் பரீட்சார்த்த திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவில்லையென்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

வாய்மூல விடைக்காக ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர முன்வைத்த கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் ஹரீசன் இவ்வாறு கூறினார்.

2015 முதல் 2017ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் வெளிநாட்டிலிருந்து பசு மாடுகளை இறக்குமதி செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் 8032 பசு மாடுகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 406 படுமாடுகள் இறந்து அல்லது பயன்படுத்த முடியாத நிலைக்குச் சென்றுள்ளன. மாடுகளை இறக்குமதி செய்ய முன்னர் பரீட்சார்த்தமான திட்டமொன்றை முன்னெடுத்திருந்தால் இவ்வாறான பிரச்சினை ஏற்பட்டிருக்காது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

2015ஆம் ஆண்டில் ரிதியகம அரச பண்ணைக்காக 2489 பசு மாடுகள் முதற்கட்டமாக இறக்குமதி செய்யப்பட்டன. பசுவொன்று தலா 3032 அமெரிக்க டொலர் பெறுமதியானது. இதுவரை 5 ஆயிரம் பசுக்கள் இறக்குமதிசெய்யப்பட்டுள்ளன. இவ்வாறு இறக்குமதிசெய்யப்பட்ட கறவைப் பசுக்கள் தனியார் கால்நடை வளர்ப்பாளர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டன. பசு மாடுகளை இறக்குமதி செய்வதற்காக 2015 ஆம் ஆண்டில் 992 மில்லியன் ரூபாவும், 2017ஆம் ஆண்டில் 2317 மில்லியன் ரூபாவும் கொடுப்பனவு செய்யப்பட்டுள்ள தாகவும் அவர் கூறினார்.

மேலதிக கேள்வியொன்றை எழுப்பிய தயாசிறி எம்.பி, பசு மாடொன்றில் 75 லீற்றர் பாலைக் கறக்கமுடியும் எனக்கூறியே வெளிநாட்டிலிருந்து பசுமாடுகளை இறக்குமதிசெய்துள்ளனர். எனினும், இறக்குமதி செய்யப்பட்ட எந்தவொரு மாட்டிலிருந்து 10 லீட்டருக்கும் அதிகமாக பால் கறக்கப்படவில்லை. சராசரியாக 8 முதல் 9 லீட்டர் பால்களே பெறப்படுகின்றன. அதுமாத்திரமன்றி 400ற்கும் அதிகமான மாடுகள் உயிரிழந்துள்ளன. இது தொடர்பில் அரசாங்கம் சம்பந்தப்பட்ட நிறுவனத்துடன் கலந்துரையாடல்களை நடத்த வேண்டும். இதுதொடர்பான ஒப்பந்தத்தை இரத்துச்செய்ய முடியாதா எனக் கேட்டார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர், மாடு இறக்குமதி தொடர்பில் செய்யப்பட்ட ஒப்பந்தத்தை தற்பொழுது இரத்துச்செய்வதாயின் 810 மில்லியன் அமெரிக்க டொலர்களை குறித்த வெளிநாட்டு நிறுவனத்துக்கு நஷ்டஈடாக வழங்கவேண்டியிருக்கும் என்றும் கூறினார்.

லக்ஷ்மி பரசுராமன், மகேஸ்வரன் பிரசாத்

 

Tue, 03/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை