போயிங் 737 மெக்ஸ் விமானங்களை உடன் தரையிறக்க சீனா உத்தரவு

எத்தியோப்பிய விமான விபத்து மற்றும் ஐந்து மாதங்களுக்கு முன் இந்தோனேசிய விமான விபத்து இரண்டுடனும் தொடர்புடைய போயிங் 737 மெக்ஸ் 8 விமானங்ளின் உள்நாட்டு வர்த்தக சேவைகள் அனைத்தையும் சீனா இடைநிறுத்தியுள்ளது.

இந்த இரண்டு விபத்துகளின் பொது அம்சங்களை அவதானித்த சீன சிவில் விமானப் போக்குவரத்து நிர்வாகம், அனைத்து 737 மெக்ஸ் 8 விமானங்களையும் தரையிறக்க உள்ளூர் நேரப்படி மாலை 6 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

விமானத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளை உறுதி செய்த பின்னர் மாத்திரமே இந்த ரக விமானம் செயற்படுத்தப்படும் என்று சீன நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எத்தியோப்பிய தலைநகரில் இருந்து நைரோபியை நோக்கி கடந்த ஞாயிற்றுக்கிழமை புறப்பட்ட 737 மெக்ஸ் 8 விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விழுந்து நொறுங்கியதில் விமானத்தில் இருந்த 157 பேரும் கொல்லப்பட்டனர். 2017 ஆம் ஆண்டு சேவைக்கு அமர்த்தப்பட்ட போயிங்கின் புதிய ரக 737 மெக்ஸ் 8 விமானத்தின் இரண்டாவது விபத்து இதுவாக இருந்தது.

இந்தோனேசியாவின் லயன் ஏயார் விமான சேவையால் இயக்கப்படும் 737 மெக்ஸ் 8 கடந்த ஒக்டோபரில் ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்டு 13 நிமிடங்களில் கடலில் விழுந்ததில் விமானத்தில் இருந்த 189 பயணிகள் மற்றும் ஊழியர்களும் பலியாகினர். “இந்த இரண்டு விபத்துகளிலும் போயிங் 737–8 விமானங்கள் தொடர்புபட்டிருப்பதோடு இரண்டும் புறப்படும்போது நிகழ்ந்திருப்பதோடு சில விடயங்களில் ஒற்றுமை காணப்படுகின்றன” என்று சீன சிவில் விமானப் போக்குவரத்து நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

எனினும் எத்தியோப்பிய விமான விபத்தின் விசாரணைகள் ஆரம்பக் கட்டத்தில் இருக்கும் நிலை 737 மெக்ஸ் 8 விமானங்கள் குறித்து புதிய வழிகாட்டல்களை வெளியிடுவதற்கு தேவை இல்லை என்று போயிங் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

“பாதுகாப்பு எமது முதல் முன்னுரிமையாக இருப்பதோடு இந்த விபத்துக் குறித்து முழுமையாக அறிந்து கொள்வதற்கு விசாரணைக் குழு மற்றும் அனைத்து நிர்வாகங்களுடனும் நெருக்கமாக செயற்பட்டு வருகிறோம்” என்று போயிங் பேச்சாளர் ஒருவர் ரோய்ட்டர்ஸ் செய்தி நீறுவனத்திற்கு குறிப்பிட்டுள்ளார்.

எத்தியோப்பிய விமான சேவையும் மறு அறிவித்தல் வரை தனது 737 மெக்ஸ் 8 விமானங்களை தரையிறக்கியுள்ளது.

எத்தியோப்பிய விமான விபத்துக்கான காரணம் இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில் இந்தோனேசிய விமான விபத்து குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அமெரிக்க விமான உற்பத்தி நிறுவனமான போயிங்கின் 737 மெக்ஸ் ரக விமானங்களின் முக்கிய சந்தையாக சீனா உள்ளது. இந்த ரக விமானத்தின் ஐந்தில் ஒன்றை சீனாவே வாங்கியுள்ளது.

கேய்மன் ஏர்வெயிஸ் தன்னிடம் உள்ள இதே ரக இரண்டு போயிங் விமானங்களை தரையில் நிறுத்தியுள்ளது. எனினும் குறிப்பிடத்தக்க அளவில் 737 மெக்ஸ் 8 விமானங்களை இயக்கி வரும் பிளைடுபாய் விமானசேவை அந்த விமானம் தொடர்பில் நம்பிக்கை வைத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

இதே ரக விமானங்களை வைத்திருக்கும் பல வட அமெரிக்க விமான சேவைகள், இந்த விசாரணைகள் குறித்து அவதானித்து வருவதாக தெரிவித்துள்ளது.

Tue, 03/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை