உயிரிழந்தவர்களின் உடல்கள் 5 தினங்களின் பின் நல்லடக்கம்

நியூசிலாந்தில் 50 பேர் கொல்லப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்திற்கு ஐந்து நாட்களின் பின் உறவினர்கள் நேற்று கொல்லப்பட்டவர்களின் உடல்களை அடக்கம் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

பிரேத விசாரணை அலுவலகத்தினால் கடந்த செவ்வாய்க்கிழமை ஐந்து சடலங்க விடுவிக்கப்பட்டதை அடுத்து அவர்களின் இறுதிக் கிரியைகள் நேற்று இடம்பெற்றன.

ஞாபக பூங்கா அடக்கஸ்தலத்தில் நேற்று அடக்கம் செய்யப்பட்டவர்களில் 15 வயது சிரிய நாட்டு அகதியான ஹம்ஸா முஸ்தபா மற்றும் 44 வயது தந்தை காலித் ஆகியோரும் உள்ளனர்.

இவர்கள் கொல்லப்படுவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னரே நியூசிலாந்தை வந்தடைந்துள்ளனர்.

ஹம்ஸாவின் 13 வயது சகோதரர் இந்த தாக்குதலில் காலில் காயத்திற்கு உள்ளானார். இந்த இறுதிக் கிரியையில் அவர் சக்கர நாற்காலியுடன் பங்கேற்றிருந்தார்.

36 வயது ஜுனைத் இஸ்மைல் மற்றும் 56 வயது அஷ்ரப் அலி இருவரும் வெவ்வேறு இறுதிக் கிரியைகளின் பின் நேற்று அடக்கம் செய்யப்பட்டதோடு அடக்கம் செய்யப்பட்ட ஐந்தாமவரின் விபரம் வெளியாகவில்லை.

அனைத்து பிரேத பரிசோதனைகளும் பூர்த்தியான நிலையில் அனைத்து உடல்களும் கையளிக்கப்படுவது குறித்து பொலிஸார் அறிவித்துள்ளனர்.

எனினும் உடல்களை கையளிப்பதற்கு தாமதமடைவது குறித்து குடும்பத்தினர் கவலை அடைந்துள்ளனர்.

இஸ்லாமிய மரபுப்படி இறந்தவர்கள் கூடிய விரைவில் அடக்கம் செய்யப்படுவது வழக்கமாகும்.

எனினும் ஒரு கொலையாக நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படுவாதற்காக உயிரிழப்புக்கான காரணத்தை நிறுவுவது அவசியமாக இருப்பதாக பொலிஸ் ஆணையாளர் மைக் புஷ் குறிப்பிட்டுள்ளார். விசாரணைக்கு இடையூறு ஏற்படாமல் செயல்படவேண்டியிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

இந்த தாக்குதலை நடத்திய அவுஸ்திரேலியாவின் பிரென்டன் டர்ரன்ட் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

Thu, 03/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை