தோட்டத் தொழிலாளர்களுக்கு 'மே' முதல் 50 ரூபா கொடுப்பனவு

தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படுவதாக வாக்குறுதியளிக்கப்பட்ட 50 ரூபா மேலதிக கொடுப்பனவு மே மாதம் முதல் வழங்கப்படுமென அமைச்சர்களான பழனி திகாம்பரமும் நவீன் திசாநாயக்கவும் நேற்று இணைந்து வாக்குறுதியளித்தனர்.

இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை அடுத்த வாரம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.தோட்டத் தொழிலாளிகளின் சம்பள அதிகரிப்புக்கான கூட்டு ஒப்பந்தத்துக்கு மேலதிகமாகவே அரசாங்கம் சுமார் ஒரு வருட காலத்துக்கு 50 ரூபாவை வழங்க முன்வந்திருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

பாராளுமன்றத்தில் நேற்று அமைச்சர்களான நவீன் திசாநாயக்கவும் பழனி திகாம்பரமும் இணைந்து நடத்திய விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே அவர்கள் மேற்படி வாக்குறுதியை அளித்தனர். இச்செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இராதாகிருஷ்ணன் மற்றும் திலகராஜ் எம்.பி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கூட்டு ஒப்பந்தத்திற்கூடாக எதிர்பார்த்தளவு சம்பள அதிகரிப்பு இல்லாமை காரணமாக ஏமாற்றமடைந்துள்ள தோட்டத்தொழிலாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அரசாங்கம் கொடுப்பனவொன்றை வழங்க வேண்டுமென தமிழ் முற்போக்கு கூட்டணியால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று 50 ரூபா மேலதிக கொடுப்பனவை வழங்க முன்வந்துள்ளமைக்காக நாம் நிதி அமைச்சருக்கு இச்சந்தர்ப்பத்தில் நன்றி தெரிவிக்கின்றோம் என்றும் அமைச்சர் திகாம்பரம் தெரிவித்தார்.

இச்சந்தர்ப்பத்தில் கருத்து தெரிவித்த அமைச்சர் நவீன் திசாநாயக்க,

மே மாதம் முதல் ஒரு வருடத்துக்கு தோட்டத் தொழிலாளிகளின் அடிப்படைச் சம்பளத்துடன் 50 ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்கப்படும்.

இதனை தொடர்ந்தும் வழங்குவது குறித்து பின்னர் ஆராயப்படும்.

இலங்கை தேயிலை சபையிலிருந்து இதற்கான நிதியை நாம் பெற்றுக் கொள்ளவுள்ளோம். பின்னர் இந்நிதியை திறை​​சேரி தேயிலை சபைக்கு வழங்குமென எதிர்பார்க்கின்றோம் என்றார்.

சம்பள அதிகரிப்பு விடயத்தில் என்னால் மத்தியஸ்த வகிபாகமொன்றை வகிக்க முடியுமே தவிர சம்பள அதிகரிப்பை வழங்குமாறு எவருக்கும் அழுத்தம் கொடுப்பதற்கான அதிகாரம் அமைச்சரென்ற வகையில் எனக்கு இல்லை.

கூட்டு ஒப்பந்தத்திற்கூடாக​வே தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை அதிகரிக்கப்படுகின்றது.

இந்த கூட்டு ஒப்பந்தம் சுமார் 150 வருடங்களுக்கு முற்பட்ட பழங் காலத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.

இதில் கம்பனி உரிமையாளர்களுக்கும் தொழிற்சங்கங்களுக்குமடையிலேயே பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.

எனினும் இவ்விடயத்தில் அதிக ஆர்வம் கொண்ட அமைச்சர்களான திகாம்பரம், இராதகிருஷ்ணன், திலக்கராஜ் எம்.பி ஆகியோர் இத்தொழிற்சங்கங்களில் அங்கம் வகிக்காமை பெரும் குறைபாடாகவுள்ளது.

எனவே கூட்டு ஒப்பந்தத்தில் அங்கம் வகிக்கும் தொழிற்சங்கங்களில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டியதுடன் புதிய தொழிற்சங்கங்கள் உள்வாங்கப்பட வேண்டும் என்றும் யோசனை முன்வைத்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம், லக்ஷ்மி பரசுராமன்

Tue, 03/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை