கொழும்பில் 49 வீதமான குடிநீர் விரயம்

குடிநீர் விநியோகக் குழாயிலுள்ள கசிவு  காரணமாக கொழும்பில் சுமார் 49 வீதமான நீர் விரயமாகுவதாக, கொழும்பு நீர்வழங்கல் சேவைத் திட்டத்துக்கான பிரதிப் பொது முகாமையாளர் அப்துல் ரஷீட் தெரிவித்தார்.

இந்த விடயத்தை தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கவனத்திற் கொண்டுள்ளதாகவும், அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

குடிநீர் விநியோகக் குழாய்கள் சுமார் 100 வருடம் பழமையானவையாகக் காணப்படுவதால், நகரத்தின் தற்போதைய மற்றும் எதிர்கால குடிநீர் விநியோகத் தேவைகளை பூர்த்தி செய்வதில் சிரமம் காணப்படுகின்றது.

குடிநீர் குழாய்களில் காணப்படும் கசிவினால் நீர் விரயமாகுவதோடு மாத்திரமின்றி, கொழும்பின் சில பகுதிகளில் நீரின் அழுத்தமும் குறைந்து காணப்படுவதாகவும், அவர் தெரிவித்தார். 

ஆகையால், ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் திருத்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவித்த அவர்,  கொழும்பிலுள்ள 60 வீதமான குடிநீர் குழாய்களை மாற்றவுள்ளதாகவும், தெரிவித்தார்.

கொழும்பில் 960கிலோமீற்றர் நீளமான குடிநீர் விநியோகக் குழாய்களை திருத்தியமைக்க  40பில்லியன் ரூபா செலவாகும் என்பதோடு, இந்தத் திட்டம் எதிர்வரும் 2020ஆம் ஆண்டிலேயே பூர்த்தியாகும்.

மேலும், இந்தத் திட்டம் பூர்த்தியாகியவுடன் குடியிருப்பாளர்கள் தடையற்ற குடிநீர் விநியோகத்தை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார். 

Fri, 03/29/2019 - 10:27


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை