அபிவிருத்திக்கு ஒரு ரூபா செலவு செய்தால் கடனுக்காக 3 ரூபாவை செலவு செய்யும் நிலை

நாட்டின் அபிவிருத்திக்காக ஒரு ரூபாவைச் செலவு செய்தால் கடனை மீளச் செலுத்த  மூன்று ரூபாய்களை செலவு செய்ய வேண்டியுள்ளதாக பெருநகரங்கள் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். 

கடந்த அரசாங்கத்தின் மோசமான நிர்வாகத்தினால் ஸ்ரீலங்கன் விமான சேவையில் ஏற்பட்ட நஷ்டத்தால் நாட்டில் உள்ள ஒருவருக்கு தலா 12 ஆயிரம் ரூபா கடன் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். 

வரவு செலவுத்திட்ட இரண்டாவது வாசிப்பு மீதான முதலாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். 

அரசாங்கத்தின் மூலதனச் செலவீனங்களை விட கடனுக்கு செலுத்தவேண்டிய தொகையே அதிகமாகியுள்ளது. 1954ஆம் ஆண்டில் கடன்படும் வீதம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 29 வீதமாகக் காணப்பட்டது, எனினும் இது தற்பொழுது 77 வீதமாக அதிகரித்துள்ளது. 2014ஆம் ஆண்டு காலப் பகுதியில் பெருந்தொகையான பணத்தை அரசாங்க நிறுவனங்களில் ஒழித்துவைத்துக் கொண்டு கடன்சுமை குறைவாக உள்ளது எனக் காண்பிப்பதற்கு முயற்சித்தனர். 

எனினும், 2008ஆம் ஆண்டில் பெற்ற கடன்களுக்கே தற்பொழுது வட்டியைச் செலுத்த வேண்டி ஏற்பட்டுள்ளது. அரச நிறுவனங்கள் பல கடனில் மூழ்கியுள்ளன. குறிப்பாக ஸ்ரீலங்கன் விமான சேவையைக் குறிப்பிடலாம். 2008ஆம் ஆண்டு எமிரேட்ஸ் நிறுவனம் இலங்கையிடம் ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸை ஒப்படைக்கும்போது 14 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான இலாபம் காணப்பட்டது. அதன் பின்னர் கடந்த அரசாங்கத்தின் மோசமான நிர்வாகத்தினால் தற்பொழுது ஸ்ரீலங்கன் விமான சேவை 200பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளது.   கல்வித்துறை, சுகாதாரத்துறை, உள்ளிட்டவற்றின் செலவீனங்களைக் கூட்டினால் கூட 128 பில்லியன் ரூபாய்களே வருகின்றன. எனினும், ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் விமான சேவையின் மொத்த நஷ்டம் 200 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகும். இதனால் இலங்கையில் உள்ள ஒவ்வொருவரும் தலா 12 ஆயிரம் ரூபாவை கடனாக செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுபோன்ற நிலைமைகளிலிருந்து நாட்டை மீட்பதற்கு புத்தாக்கமான உற்பத்திகளை அதிகரிக்க வேண்டும். தொழில்நுட்பத்துடன் கூடிய புத்தாக்கமான உற்பத்திகளை அதிகரிப்பதன் ஊடாக அரசாங்கத்தின் வருமானங்களை அதிகரிப்பது மாத்திரமன்றி நாட்டை வளர்ச்சிப்பாதைக்கும் கொண்டு செல்ல முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

(ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்) 

Thu, 03/07/2019 - 08:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை