ஐ.எஸ் வீழ்ச்சி நெருங்கியது: 3000 உறுப்பினர்கள் சரண்

சிரியாவின் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள கடைசி நிலப்பகுதி மீது உக்கிர தாக்குதல்கள் நீடித்து வரும் நிலையில் அங்கிருந்து ஆயிரக்கணக்கான ஐ.எஸ் போராளிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் சரணடைந்துள்ளனர்.

முற்றுகையில் உள்ள சிரியாவின் பாகூஸ் கிராமத்தின் மீதான இந்த தாக்குதல்கள் முடிவை நெருங்கி இருப்பதாகவும் ஐ.எஸ் தோல்விக்கு முகம்கொடுத்திருப்பதாகவும் அந்தக் குழுவுடன் சண்டையிட்டு வரும் அமெரிக்க ஆதரவு சிரிய ஜனநாயகப் படை குறிப்பிட்டுள்ளது.

குண்டு வெடிப்புகள் மற்றும் துப்பாக்கிச் சண்டைகள் தொடர்ச்சியாக கேட்டு வரும் அந்த நிலப்பகுதியில் இருந்து கறும்புகை மற்றும் தீப்பிழம்பு வெளிவந்த வண்ணம் உள்ளது.

அந்த நிலப்பகுதி மீது உக்கிர தாக்குதலை நடத்தியதாக சிரிய ஜனநாயகப் படையின் கட்டளைத் தளபதி அலி செயர் குறிப்பிட்டுள்ளார். “ஐ.எஸ் தீவிரவாதிகளை சரணடையச் செய்வதும் சிவிலியன்களை வெளியேற்றுவதுமே எமது முன்னேற்றத்தின் இலக்காகும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈராக் மற்றும் சிரியாவில் கணிசமான நிலப்பகுதியை ஆக்கிரமித்திருந்த ஐ.எஸ் வசம் தற்போது இந்த கிராமத்தின் சிறு துண்டு நிலப்பகுதி மாத்திரமே எஞ்சியுள்ளது.

சரணடைந்த ஐ.எஸ் போராளிகளின் எண்ணிக்கை 3000 ஆக அதிகரித்திருப்பதாக அமெரிக்க ஆதரவுப் படையின் அதிகாரியான முஸ்தபா பாலி ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். ஐ.எஸ் பிடியில் இருந்த மூன்று யாசிதி பெண்கள் நான்கு சிறுவர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

“சாரணடைய விரும்புபவர்கள் உறுதி செய்யப்பட்ட பின்னர் தாக்குதல் தொடரும்” என்று குறிப்பிட்ட பாலி, அந்தக் குழுவின் தோல்வி நெருங்கி விட்டதாக தெரிவித்தார்.

தாம் வீழ்ச்சியை நெருங்கி இருக்கும் நிலையிலும் ஐ.எஸ் புதிய பிரசார வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அனைத்து முஸ்லிம்களினதும் தலைமை என்று கூறிக்கொள்ளும் அந்த வீடியோ தொடர்ந்து நம்பிக்கை வைத்திருக்கும்படியும் ஆதரவையும் கோரியுள்ளது.

“இறைவன் நாடினால் நாளை நாம் சுவர்க்கம் வெல்வோம் அவர்கள் நரகில் எரிவார்கள்” அபூ அப்தல் அஸீம் என்று அடையாளப்படுத்திய ஐ.எஸ் உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

பாகூஸ் கிராமத்தில் பாரிய வெடிப்புகள் இடம்பெறும் காட்சிகளை குர்திஷ் ரோஹாதி தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ளது.

“நடவடிக்கை முடிந்துவிட்டது அல்லது பெரிதும் முடிந்துவிட்டது. நடைமுறையில் பூர்த்தி செய்வதற்கு சிறிது நேரம் எடுத்துக்கொள்ளும்” என்ற சிரிய ஜனநாயகப் படையின் பேச்சாளர் கினோ காப்ரியல், அல் ஹதத் தொலைக்காட்சிக்கு குறிப்பிட்டுள்ளார்.

சிரிய ஜனநாயகப் படை பாகூஸ் கிராமத்தை பல வாரங்களாக முற்றுகையிட்டபோதும் ஆயிரக்கணக்கான சிவிலியன்கள் வெளியேறுவதற்காக இறுதிக்கட்ட தாக்குதல்கள் பல தடவை ஒத்திவைக்கப்பட்டது.

இங்குள்ள பெரும்பாலான சிவிலியங்கள் ஐ.எஸ் போராளிகளின் மனைவி மற்றும் குழந்தைகளாவர். இந்நிலையில் இந்த பகுதி மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த மோதல்களில் அண்மைய தினங்களில் பலரும் கொல்லப்பட்டனர். எனினும் உயிர் பிரியும்வரை யுத்த செய்யும் நோக்கில் நூற்றுக்கணக்கான ஐ.எஸ் போராளிகள் பாகூஸ் கிராமத்தில் தொடர்ந்து நிலைகொண்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

Thu, 03/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை