ஆசிரியர் சேவையில் 2,40,000 பேர்; 20,000 பேர் தினமும் விடுமுறையில்

வெற்றிடங்களை நிரப்ப விரைவில் நடவடிக்ைக

சேவையில் உள்ள 2,40,000 ஆசிரியர்களில் தினமும் 20,000 பேர் விடுமுறையில் செல்வதாகவும் ஆசிரியர் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு காணப்படுமென்றும் கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வகையில் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு சம்பள ஆணைக்குழுவுக்கு விடயங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அபிவிருத்தி என்ற போர்வையில் பாடசாலைகளில் பணம் அறவிடுவதை முற்றாகத் தடைசெய்யும் வகையில் விசேட சுற்று நிருபம் ஒன்றை வெளியிடவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று கல்வியமைச்சின் நிதியொதுக்கீடு குழுநிலை விவாதத்திற்குப் பதிலளித்து உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்:

நாட்டில் 2,40,000 ஆசிரியர்கள் சேவையில் உள்ளனர். இவர்களில் தினமும் 10,000 பேர் மகப்பேற்று விடுமுறை பெறுவதுடன் மேலும் 10,000 பேர் ஏனைய விடுமுறைகளில் செல்கின்றனர். ஆசிரியர் பற்றாக்குறைக்கு இதுவும் ஒரு காரணமாகும்.

எதிர்க்கட்சியினர் விமர்சிப்பது போல் நாம் ஒருபோதும் பயிற்சியற்ற ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கியதில்லை. அவர்களது காலத்திலேயே அவ்வாறான செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளன. வடக்கு கிழக்கில் தகைமையானோர் இல்லாத காரணத்தினாலேயே தொண்டர் ஆசிரியர்களை நியமிக்க நேரிட்டது. எவ்வாறாயினும் தற்போது பயிற்சிக் கல்லூரிகளிலுள்ள 8000 பேரும் வெளியேறியதும் மொத்த ஆசிரியர் வெற்றிடங்களையும் நிரப்ப முடியும்.  கல்வியமைச்சின் செயற்பாடுகள் தொடர்பில் விடயங்களை முழுமையாக அறியாத நிலையிலேயே எதிர்க்கட்சியில் பலரும் விமர்சனங்களை முன்வைக்கின்றனர். பல்வேறு குறைபாடுகள் எமது காலத்திலேயே நிவர்த்திசெய்யப்பட்டுள்ளன.

கல்வித்துறையில் ஒருபோதுமில்லாத வகையில் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 1500 பாடசாலைகளுக்கு முழுமையான கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. 6000 பாடசாலைகளுக்கான கட்டடங்கள் புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளன. 5600 புதிய வகுப்பறைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. 1ஆம் ஆண்டுக்கான 800 விசேட வகுப்புக்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. 46 தோட்டப் பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. 160 அதிபர் விடுதிகள், 329 ஆசிரியர் விடுதிகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. அத்துடன் 3000 நடமாடும் விஞ்ஞான கூடங்களையும் நடத்தியுள்ளோம்.

2016 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 5 பில்லியன் ரூபா பாடசாலை தளபாடங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இம்முறை வரவு செலவு திட்டத்தில் பாடசாலை தளபாடங்களுக்காக 7.5 பில்லியன் ரூபாவும் மாணவர்களுக்கு கணனி வழங்குவதற்காக 5 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதிபர்கள் நியமனம் அரச சேவை ஆணைக்குழுவின் நியதிகளுக்கமையவே இடம்பெறுகிறது. நியமிக்கப்பட்டுள்ள அனைத்து பதில் அதிபர்களும் உரிய தகைமைகளைக் கொண்டுள்ளனர் என்பதை உறுதியாகக் கூறுமுடியும்.

ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. ஆசிரியர்கள் கல்வியமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றையும் மேற்கொண்டனர். அவர்கள் அமைச்சு வாயிற் கதவுகளை உடைத்துக்கொண்டு உள்ளே பிரவேசித்த போதே பொலிஸாரினால் அவர்களைக் கலைக்க நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. ஆசிரியர்கள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை.

குறிப்பாக 2015 ஆம் ஆண்டு 21,750 ரூபா ஆசிரியர்களின் அடிப்படை சம்பளமாக இருந்தது. படிப்படியாக அது அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் 2020ல் அவர்களுக்கான சம்பளம் 44,950 ரூபாவாக உயரும் அத்துடன் ஏனைய கொடுப்பனவுகளையும் அவர்கள் பெற்றுக்கொள்வர்.

நாட்டில் சகல பிரிவுகளிலும் 20,000 ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் நிலவுகின்றன. தேசிய பாடசாலைகளில் உள்ள மேலதிக ஆசிரியர்களை மாகாண பாடசாலைகளுக்கு நியமிக்க தீர்மானித்துள்ளோம். அவர்களுக்கான சம்பளத்தை வழங்கவும் தயாராகவுள்ளோம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்

Sat, 03/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை