மேற்கிந்திய தீவுகளுடனான ரி 20 தொடர்: வெற்றியூடன் ஆரம்பித்த இங்கிலாந்து

ஜொன்னி பெயஸ்டோவின் வேகமான அரைச்சதத்தின் உதவியோடு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

செயின்ட் லூசியாவில் இலங்கை நேரப்படி நேற்று (6) அதிகாலை நடைபெற்ற போட்டியில் மேற்கிந்திய தீவுகள் நிர்ணயித்த 161 ஓட்டங்களை துரத்திய இங்கிலாந்து அணியில் தனது அதிகூடிய ரி 20 ஓட்டங்களை பெற்ற பெயஸ்டோ 40 பந்துகளில் 68 ஓட்டங்களை விளாசினார்.

ஆரம்ப வீரரான பெயஸ்டோ 12 ஆவது ஓவரில் ஆட்டமிழந்த பின் மத்திய வரிசையில் ஜோ டென்லி 30 ஓட்டங்களையும் சேம் பில்லிங்ஸ் 18 ஓட்டங்களையும் பெற்று இங்கிலாந்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

முன்னதாக இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் மேற்கிந்திய தீவுகளை 8 விக்கெட்டுகளை இழந்து 160 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்தினர். டொம் கரன் 36 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

மேற்கிந்திய தீவுகளுக்காக நிகொலஸ் பூரன் 58 ஓட்டங்களை குவித்தபோதும் ஆபத்தான ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கிறிஸ் கெயிலை 15 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்த இங்கிலாந்தால் முடிந்தது. அந்த 15 ஓட்டங்களை பெறுவதற்கு அவர் இரண்டு சிக்ஸர்களை விளாசியமை குறிப்பிடத்தக்கது.

இந்த சிக்ஸர்கள் மூலம் அவர் டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் பெற்ற வீரர்கள் வரிசையில் நியூசிலாந்தின் மார்டின் கப்டிலை முந்தி மீண்டும் முதலிடத்தைப் பிடித்தார். அவர் இதுவரை 105 சிக்ஸர்களை பெற்றுள்ளார். எனினும் அதிக சிக்ஸர் பெற்ற வீரர் வரிசையில் முன்னிலை பெறுவதில் கெயிலுடன் கப்டில் (103), ரோஹித் ஷர்மா (102) கடும் போட்டியில் உள்ளனர். இந்த வெற்றியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ரி 20 தொடரில் இங்கிலாந்து அணி 1-−0 என முன்னிலை பெற்றதோடு இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டி20 போட்டி செயின்ட் கீட்ஸில் நாளை வெள்ளிக்கிழமை (08) நடைபெறவுள்ளது.

Thu, 03/07/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை