2025இல் அனைவருக்கும் சொந்த வீடு

2015ஆம் ஆண்டு முதல் இதுவரை 3 இலட்சத்து 56 ஆயிரம் வீடுகள் அமைக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.  

வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் புத்தசாசன, வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு ஆகியவற்றின் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார்.  

தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,  

எத்தகைய இடையூறு உருவானாலும் 2025ல் அனைவருக்கும் சொந்த வீடு கிடைக்க வழிசெய்வேன். எமது அரசாங்கத்தினாலேயே முதற்தடவையாக இராணுவ வீரர்களுக்கு ஒரு சதம் கூட பணம் அறவிடாமல் வீடுகள் பெற்றுக் கொடுக்கப்பட்டன.  

வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் நாம் வீடுகளை அமைத்து வருகின்றோம். 2015ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையான காலத்தில் 3 இலட்சத்து 56 ஆயிரத்து 540 வீட்டுப் பிரச்சினைகளைத் தீர்த்துவைத்துள்ளோம். இதற்காக 29 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளோம்.  

2025ஆம் ஆண்டில் 20 ஆயிரம் உதாகம்மான மாதிரி கிராமங்களை நாம் உருவாக்குவோம். வடக்கில் 479 மாதிரி கிராமங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால் 12 ஆயிரத்து 800 பயனாளிகள் நன்மையடைந்துள்ளனர். முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் 5 ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்காக 3 ஆயிரத்து 700 மில்லியன் ரூபாவை ஒதுக்கினோம். வவுனியாவில் தற்பொழுது ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. மட்டக்களப்பு மற்றும் திருகோணமலையில் 5 ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்காக 4 ஆயிரத்து 400 மில்லியன் ரூபாவை செலவுசெய்துள்ளோம். சிறுநீரகம் பாதிக்கப்பட்ட 4 ஆயிரத்து 500 பேருக்கு வீடுகளை நிர்மாணிப்பதற்காக 9 இலட்சத்து 958 ஆயிரம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டது.  

வறுமைக்கோட்டின் கீழ் வாழ்பவர்களுக்காக வீடமைப்பதற்கென 6.75 சதவீத வட்டிக்கு இலகு கடன் வழங்கப்படுகிறது. நாம் வீடுகளை அமைத்துக் கொடுப்பது ஒப்பந்த அடிப்படையில் இல்லை. பயனாளர்களை இணைத்து சமூகத்தின் பங்களிப்புடன் முன்னெடுக்கின்றோம். வீடொன்றுக்காக 7 இலட்சத்து 50 ஆயிரம் பெற்றுக் கொடுக்கப்படுகிறது. இவை 6.75 வீத குறைந்த வட்டிக்கான கடன்களாகும்.  

(சபை நிருபர்கள்: ஷம்ஸ் பாஹிம்,மகேஸ்வரன் பிரசாத்)

Mon, 03/18/2019 - 11:39


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை