2025 இல் இலங்கை பாரிய முன்னேற்றமடையும்

இலங்கையை 2025ஆம் ஆண்டாகும்போது முழுமையாக முன்னேற்றுவோம். எமது நாட்டுக்குக் கிடைக்கும் வாய்ப்புக்களை பங்களாதேஷூக்கோ, சிங்கப்பூருக்கோ அல்லது வியட்னாமுக்கோ இனிமேல் வழங்கப்போவதில்லையென்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இம்மாத இறுதியில் பாரிய கைத்தொழிற் பேட்டையொன்று ஹம்பாந்தோட்டையில் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், இரண்டு மாத இறுதியில் திருகோணமலையில் வர்த்தக வலயமொன்றும் ஆரம்பிக்கப்படும் என்றும் பிரதமர் கூறினார்.

தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் இளைஞர் விவகார அமைச்சுக்கான வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் பதிலளித்து உரையாற்றும்போதே பிரதமர் இந்தக் கருத்துக்களை முன்வைத்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

நாட்டின் பொருளாதாரத்துக்கும் பங்குச் சந்தையின் ஏற்ற, இறக்கத்துக்கும் இடையில் எந்தவிதமான தொடர்பும் இல்லை. கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி நாட்டில் ஏற்படுத்தப்பட்ட அரசியல் குழப்பத்தின் காரணமாகவே முதலீட்டார்கள் தமது முதலீடுகளை மீளப்பெற்று வருகின்றனர்.

எனினும், தற்போதைய சூழலில் பங்குச் சந்தை படிப்படியாக பலமடைந்து வருகிறது. பங்குச் சந்தையில் முதலிடுமாறு ஊழியர் சேமலாப நிதியத்துக்கு அழைப்பு விடுக்கின்றோம்.

இருந்தபோதும் கடந்த முறை ஏற்பட்டது போன்ற நிலைமை ஏற்படாது பாதுகாப்பாக இருக்க வேண்டுமென அவர்கள் யோசிக்கின்றனர். இதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

பங்குச் சந்தையில் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது. நாட்டின் பொருளாதாரமும், பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கமும் இருவேறு விடயங்களாகும். கடன்சுமை அதிகரித்தபோது பங்குச்சந்தை அதிகரித்திருந்தது. தற்பொழுது நாட்டின் பங்குச் சந்தை படிப்படியாகப் பலமடைந்து வருகிறது.

மஹிந்தவின் ஆட்சிக்காலம்தான் எமது நாட்டின் சொர்க்கபுரியாகவிருந்தது என பந்துல குணவர்த்தன கூறியிருந்தார். ஆனால் 2004ஆம் ஆண்டு தைத்த ஆடைகள் மற்றும் கைத்தறி மூலம் 2800 மில்லியன் டொலர்கள் வருமானம் நாட்டுக்குக் கிடைத்தது.

இது 2015இல் 4600 மில்லியன் டொலர்களாக உயர்வடைந்தது. ஆனால் வியட்னாம் 2004ல் 4900 மில்லியன் டொலர் வருமானத்தை ஈட்டியதுடன் 2015ல் 27,500 மில்லியன் டொலர்களாக அதிகரித்தது. அதேபோன்று பங்களாதேஷ் 2004ல் 5700 மில்லியன் டொலரை வருமானமாகப் பெற்றதோடு, 2105ல் இதனை 25,500 மில்லியன் டொலர்களாக அதிகரித்துக் கொண்டது.

இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் தடை விதிக்கப்பட்டதால் அதன் பலன் பங்களாதேஷூக்கே சென்றது. மஹிந்த ஆட்சியால் பங்களாதேஷ்தான் சொர்க்க புரியாக மாறியது.

பிங்கிரியவில் பாரிய கைத்தொழில் பேட்டையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு இங்கு முதலீடு செய்ய 300 முதலீட்டாளர்கள் இதுவரை முன்வந்துள்ளனர்.

(ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்)

Fri, 03/15/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக