2019 வரவு - செலவுத் திட்டம் பாராளுமன்றில் நாளை சமர்ப்பிப்பு

ஏப்ரல் 5 ஆம் திகதி வாக்கெடுப்பு

2019 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசின் இரண்டாவது வரவு-செலவுத் திட்டம் நாளை 5 ஆம் திகதி செவ்வாய்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.  

நிதி அமைச்சர் மங்கள சமரவீர வரவு- செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றவுள்ளார்.  

2019 ஆம் ஆண்டுக்காக அரசாங்கம் சமர்ப்பிக்கவுள்ள இந்த வரவு-செலவுத் திட்டம் 2018 ஒக்டோபர் 5ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டு நவம்பர் 5ஆம் திகதி மூன்றாம் வாசிப்புக்கு உட்படுத்தப்பட்டு அதனை நிறைவேற்றுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கிணங்க ஒக்டோபர் 5ஆம் திகதி அரசாங்கம் வரவுசெலவுத் திட்ட சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தது.

எனினும் ஒக்டோபர் 26ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற அரசியல் நிலைமை காரணமாக முறைப்படி அதனை நிறைவேற்ற முடியாமல் போனது.  

இதனால் 2018 ஒக்டோபர் சமர்ப்பிக்கப்பட்ட வரவு-செலவுத் திட்ட சட்டமூலத்திற்கு பதிலாக மீள நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் இடைக்கால கணக்கறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. 2019 முற்பகுதியில் நான்கு மாதங்களுக்காக அரச வருமானம் மற்றும் செலவினங்களுக்காக அது சமர்ப்பிக்கப்பட்டது.  

அந்த இடைக்கால கணக்கறிக்கைக்கு பதிலாக இந்த வருடம் பெப்ரவரி 5ஆம் திகதி மீண்டும் வரவு-செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் நிதியமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்டது. அதற்கிணங்க 2019ஆம் ஆண்டுக்கான அரச செலவினமாக 4,450 பில்லியனாகவும் அரசாங்கத்தின் வருமானம் 2,390 பில்லியனாகவும் திட்டமிடப்பட்டிருந்தது.  

644 பில்லியன் ரூபா துண்டுவிழும் தொகையுடன் நாளை சமர்ப்பிக்கப்படும் 2019ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் சிறந்த நலன்களை பெற்றுக்கொடுக்கும்.  

இதன்படி 6 ஆம் திகதி புதன் கிழமையன்று வரவு-செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் ஆரம்பமாகிறது. இவ் விவாதம் மார்ச் 12 ஆம் திகதி வரை நடைபெறும்.  

மார்ச் 12 ஆம் திகதி முதல் ஏப்ரல் 5 ஆம் திகதி வரை அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதம் நடத்தப்படவுள்ளது.  

ஏப்ரல் 5 ஆம் திகதி மாலை வரவு–செலவுத் திட்டத்தின் மீதான வாக்கெடுப்புகள் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.      

Mon, 03/04/2019 - 10:12


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை