20ஆவது திருத்தச் சட்டயோசனை; ஜே.வி.பி மஹிந்தவுடன் சந்திப்பு

நாளை மறுதினம் நடைபெறுமென அறிவிப்பு  

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்கும் நோக்கில் முன்வைக்கப்பட்டுள்ள 20ஆவது திருத்தச்சட்ட மூல யோசனை தொடர்பில் ஜே.வி.பியினர், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர். இந்தச் சந்திப்பு நாளை மறுதினம் நடைபெறவிருப்பதாக அக்கட்சி அறிவித்துள்ளது.  

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்களான இரா.சம்பந்தன், அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன் மற்றும் மலையகக் கட்சிகளின் தலைவர்களுடன் நடத்த எதிர்பார்த்திருக்கும் சந்திப்பின் ஒரு அம்சமாகவே எதிர்க்கட்சித் தலைவருடனான சந்திப்பும் அமையவிருப்பதாக பிமல் ரத்னாயக்க எம்.பி தெரிவித்தார்.  

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிக்கப்படுவதற்கு மஹிந்த சார்பான எதிர்க்கட்சியினர் எதிர்ப்புக்களைத் தெரிவித்து வரும் நிலையிலேயே ஜே.வி.பியின் இந்தச் சந்திப்பு நாளை மறுதினம் நடைபெறவுள்ளது.  

20ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு சகல தரப்பினருடனும் கலந்துரையாடவிருப்பதுடன், பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரம் இதனைத் தீர்மானிக்காது நாட்டு மக்களும் இதுபற்றித் தீர்மானிப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும் என ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸ்சாநாயக்க குறிப்பிட்டார். எதுவாக இருந்தாலும் 20ஆவது திருத்தச்சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் ஜனாதிபதித் தேர்தலில் தமது கட்சியும் பங்கெடுக்கும் என அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

(நமது நிருபர்)  

Mon, 03/04/2019 - 09:49


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை