பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து 2-0 முன்னிலை

பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 12 ஓட்டங்களால் வெற்றி பெற்று மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2--0 என கைப்பற்றியுள்ளது.

கடந்த 8ஆம் திகதி ஆரம்பமாகிய இப்போட்டி மழை காரணமாக முதல் இரண்டு நாட்களும் முழுமையாக கைவிடப்பட்டிருந்தது. போட்டியின் மூன்றாம் நாளான 10ஆம் திகதி நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று பந்து வீசத் தீர்மானித்த நியூசிலாந்து அணி பங்களாதேஷ் அணியை 211 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தியிருந்தது.

தமது முதல் இன்னிங்ஸிற்காக பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டத்தில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் தமீம் இக்பால் 74 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்திருந்ததுடன் ஏனைய வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். பந்து வீச்சில் நீல் வெங்னர் நான்கு விக்கெட்டுகள் மற்றும் ட்ரென்ட் போல்ட் மூன்று விக்கெட்டுகள் என வீழ்த்தியிருந்தனர்.

பதிலுக்கு தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடக் களமிறமிறங்கிய நியூசிலாந்து அணியின் முதல் இரண்டு விக்கெட்டுகளையும் 8 ஓட்டங்களுக்குள் கைப்பற்றியிருந்தனர் பங்களாதேஷ் பந்துவீச்சாளர்கள். எனினும், மூன்றாவது விக்கெட்டுகாக அணித்தலைவர் கேன் வில்லியம்சன் மற்றும் ரோஸ் டைய்லர் ஆகியோர் இணைந்தனர். அணியின் ஓட்ட எண்ணிக்கை 38 ஆக இருந்த போது மீண்டும் மழை குறுக்கிட மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது.

நான்காவது நாளில் தமது இன்னிங்ஸை தொடர்ந்த நியூசிலாந்து மூன்றாவது விக்கெட் இணைப்பாட்டமாக 172 ஓட்டங்கள் பெற்றிருந்த போது கேன் வில்லியம்சன் 74 ஓட்டங்களுடன் வெளியேறினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய டைய்லர் தனது 18 ஆவது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்துடன் நான்காவது விக்கெட்டுக்காக டைய்லர் மற்றும் ஹென்ரி நிக்கலோஸ் ஆகியோர் இணைந்து 216 ஓட்டங்களை பகிர்ந்திருந்தனர்.

நிக்கலோஸ் 107 ஓட்டங்களுடனும் தனது மூன்றாவது இரட்டை சதத்தை பூர்த்தி செய்த டைய்லர் 200 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து நியூசிலாந்து அணி 221 ஓட்டங்களால் முன்னிலை பெற்று 432 ஓட்டங்கள் பெற்றிருந்த நிலையில் அணியின் 6 விக்கெட்டாக வொட்லிங்கின் ஆட்டமிழப்புடன் தமது இன்னிங்ஸை நிறுத்திக் கொண்டது.

பந்து வீச்சில் அபூ ஜாயித் மூன்று விக்கெட்டுகள் மற்றும் தைஜுல் இஸ்லாம் இரண்டு விக்கெட்டுகள் என கைப்பற்றியிருந்தனர்.

221 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் தமது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி நான்காம் நாள் ஆட்ட நிறைவில் 3 விக்கெட்டுகளை இழந்து 80 ஓட்டங்கள் பெற்றிருந்தது.

மேலும் 141 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் நேற்று (12) ஐந்தாவது நாள் ஆட்டத்தில் தமது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த பங்களாதேஷ் அணி நியூசிலாந்து வேகப்பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 209 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து இன்னிங்ஸ் மற்றும் 12 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.

துடுப்பாட்டத்தில் அணித்தலைவர் மஹ்மதுல்லாஹ் 67 ஓட்டங்களையும் மொஹமட் மித்துன் 47 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். பந்து வீச்சில் வெங்னர் மற்றும் போல்ட் ஆகியோர் இணைந்து 9 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இவ்வெற்றியின் மூலம் ஏற்கனவே முதலாவது போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 52 ஓட்டங்களால் வெற்றியீட்டியிருந்த நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என முன்னிலை பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. போட்டியின் ஆட்ட நாயகனாக இரட்டை சதம் விளாசிய ரோஸ் டைய்லர் தெரிவு செய்யப்பட்டார்.

இரு அணிகளுக்கும் இடையிலான தொடரின் மூன்றாவது போட்டி எதிர்வரும் சனிக்கிழமை (16) ஆரம்பமாகவுள்ளது.

Wed, 03/13/2019 - 01:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக