ஊழல், மோசடி முறைப்பாடுகளை பொறுப்பேற்கும் காலம் மார்ச் 19 வரை நீடிப்பு

AMF

அரச நிறுவனங்களில் இடம்பெற்றுள்ளதாகக் கருதப்படும் ஊழல் செயற்பாடுகள், மோசடிகள் பற்றிய முறைப்பாடுகளைப் பெற்றுக் கொள்ளும் இறுதித் திகதி மார்ச் 19 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

முறைப்பாடுகளைப் பெறும் இறுதித் திகதி மார்ச் 14 ஆம் திகதியாக இருந்தது. இந்நிலையில் இன்னும் முறைப்பாடுகளைப் பெறுவதற்கு வசதியாக இந்த முறைப்பாடுகளைப் பெறுவதற்கான காலம் நீடிக்கப்பட்டுள்ளது என்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

காலக்கெடுவை நீடிப்பதற்கான முடிவு ஜனாதிபதி செயலகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது என ஆணைக்குழு தெரிவித்துள்ளது கடந்த மாரச் 11 வரை 741 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அது தெரிவித்துள்ளது.

2015 ஜனவரி மாதம் 15 ஆம் திகதி முதல் 2018 டிசெம்பர் மாதம் 31 ஆந் திகதி வரையிலான காலப்பகுதியினுள் அரச நிறுவனங்களில் இடம்பெற்றுள்ளதாகக் கருதப்படும் ஊழல் செயற்பாடுகள், மோசடிகள் பற்றி ஆராய்வதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால்  ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் உபாலி அபேரத்னவின் தலைமையிலான இந்த விசேட ஆணைக்குழு கடந்த ஜனவரி 17 ஆம் திகதி ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டது.

2015 ஜனவரி மாதம் 14 ஆம் திகதி முதல் 2018 டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியினுள் அரச நிறுவனங்களில் இடம்பெற்றுள்ளதாகக் கருதப்படும் ஊழல் செயற்பாடுகள், மோசடிகள், குற்றவியல் ரீதியான நம்பிக்கை மோசடிகள், சொத்துக்களைத் தவறாகப் பயன்படுத்துதல், ஏமாற்றுதல் மற்றும் அதிகாரம் அல்லது தத்துவம், அரச வளங்கள்   மற்றும் சிறப்புரிமைகளை முறையற்ற விதத்தில் பயன்படுத்துதல் அல்லது தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் சொல்லப்பட்ட குற்றங்கள் மற்றும் தவறான செயற்பாடுகளின் பெறுபேறாக அரச சொத்துக்களுக்கு, அரச வருமானத்துக்கு பாரியளவு நட்டம் அல்லது  சேதத்தை ஏற்படுத்தியிருத்தல் தொடர்பில் அரசியல் பதவி வகித்த அல்லது  தொடர்ந்தும் பதவி வகித்துக்கொண்டிருக்கும் ஆட்கள், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் நியதிச் சபை உத்தியோகத்தர்களாகவும் பணியாற்றிய மற்றும் தொடர்ந்து சேவையில் ஈடுபட்டிருக்கின்ற  ஆட்களுக்கு எதிராகப் பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான பொதுமக்களின் முறைப்பாடுகள், தகவல்கள் மற்றும் ஏனைய விடயங்களைக் கோருதல் மற்றும் பெற்றுக்கொள்ளுதல் இந்த ஆணைக்குழுவின் பொறுப்பாகும்.

குறிப்பிடப்பட்டுள்ள முறைப்பாடுகள், தகவல்கள் மற்றும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் துரிதமாக, பக்கச்சார்பற்ற, விரிவான புலனாய்வுகளையும் விசாரணைகளையும் நடத்துதல் இந்த ஆணைக்குழுவின் ஊடாக மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்த விடயங்கள் பற்றிய எந்தவொரு எழுத்து மூல முறைப்பாடுகள் அல்லது தகவல்கள்  சிங்களம், தமிழ் அல்லது ஆங்கில மொழியில் ஆணைக்குழுவின் செயலாளருக்கு செயலாளர், அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கருதப்படும் ஊழல்கள், மோசடிகள் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு, அறை இல: 210, புளொக் 02, இரண்டாவது மாடி பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம், பௌத்தாலோக மாவத்தை, கொழும்பு 07 என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும்.

Tue, 03/12/2019 - 13:12


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை