1,600 ஹோட்டல் அறைகளை வீடியோ எடுத்தவர்கள் கைது

1,600 ஹோட்டல் அறைகளில் தங்கியிருந்தவர்களை இரகசியமாக வீடியோ எடுத்து அதனை இணைதளத்தின் ஊடே விற்ற குற்றச்சாட்டில் தென் கொரியாவில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹோட்டல் அறைகளின் தொலைக்காட்சி பெட்டிகள், முடியை உலர்த்தும் கருவி மற்றும் சுவரில் பதிக்கப்பட்ட மின்இணைப்புக் குமிழ்களில் சிறு கெமராக்கள் பொருத்தப்பட்டு இவ்வாறு அந்தரங்கங்கள் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அந்த நபர்கள் 6,200 டொலர்கள் பணம் ஈட்டி இருப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது.

இவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில் 10 ஆண்டுகள் சிறை மற்றும் 26,571 டொலர் அபராதத்திற்கு முகம்கொடுக்க வேண்டி வரும்.

முறைகேடான அந்த நடவடிக்கை தென் கொரியாவின் பத்து நகரங்களில் உள்ள 30 ஹோட்டல்களில் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த வீடியோ, நேரடியாக இணையத்தில் ஒளிபரப்பானதாகவும் கூறப்படுகிறது.

தென் கொரியாவில் இவ்வாறான இரகசிய பாலியல் மற்றும் நிர்வாண வீடியோக்கள் பெரும் பிரச்சினையாக மாறியிருப்பதோடு இதற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களுக்கும் அதிகரித்துள்ளன.

2017ஆம் ஆண்டில் 6,400க்கும் மேற்பட்ட சட்ட விரோத வீடியோ சம்பவங்கள் குறித்து பொலிஸாரிடம் புகார் செய்யப்பட்டுள்ளது.

Fri, 03/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை