107 கிலோ ஹெரோயினுடன் 9 ஈரானியர்கள் கைது

தென்பகுதி கடலில் மடக்கிப் பிடிப்பு

தென்பகுதி கடற்பரப்பில் கடற்படை,பொலிஸ் போதை ஒழிப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில்107 கிலோ ஹெரோயின் போதைப் பொருள் நேற்று கைப்பற்றப்பட்டது. இவற்றைக் கொண்டு வந்த ஒன்பது ஈரானியர்களும் இதன்போது கைது செய்யப்பட்டனர்.

பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்று முன்தினமிரவு மூன்று தரப்பினரும் காலியிலிருந்து புறப்பட்டுச் சென்று கூட்டாக சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.இந்தக் கூட்டு நடவடிக்கையின்போதே இப்போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 1,200 மில்லியன் ரூபா என்றும் இவை

ஈரானிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப் பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேக்கர தெரிவித்தார்.

இது தொடர்பில் விசேட செய்தியாளர் மாநாடொன்று நேற்று (24) பிற்பகல் பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்றது.இதில் 99 பொதிகளிலுள்ள 107 கிலோ மற்றும் 22 கிராம் ஹெரோயின் போதைப் பொருட்களையும் கைது செய்யப்பட்ட ஈரானியர் ஒன்பது பேரையும் பொலிஸார் ஊடகங்களுக்கு காண்பித்தனர்.

நேற்றைய இந்த செய்தியாளர் மாநாட்டில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர, கடற்படை ஊடகப் பேச்சாளர் இசுரு சூரியபண் டார ஆகியோர் இணைந்து ஊடகவியலாளர்க ளுக்கு இது குறித்து தெளிவுபடுத்தினர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

நேற்று அதிகாலை காலி அக்குறளை கடற்பகுதியில் ட்ரோலர் படகு ஒன்றிலிருந்து மேற்படி ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. அத்துடன் ஈரானியர்கள் ஒன்பது பேரும் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் ஒன்பது பேரும் மீனவர்கள் போன்று தோற்றமளித்தனர். எனினும் அவர்கள் ஒருபோதும் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டதற்கான எந்த அடையாளங்களும் தென்படவில்லை. இந்த ஹெரோயின் தொகையை இலங்கைக்கு கொண்டுவந்து வர்த்தகர்களுக்கு வழங்கும் நோக்கிலேயே இவர்கள் இதனைக் கொண்டுவந்திருக்கலாம். அவர்களிடமிருந்து ஒன்பது கையடக்கத் தொலைபேசிகளும் செய்மதி கருவியொன்றும் 15 நாட்களுக்குத் தேவையான உணவு மற்றும் குடிநீரும் இருந்துள்ளன.

இவர்கள் 14 நாட்களுக்கு முன் ஈரானின் பொணாக் துறைமுகத்திலிருந்து புறப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து கைவிரல் அடையாளம் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் இன்றைய தினம் இவர்கள் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளனர். அவர்களை ஏழு நாட்கள் தடுத்துவைத்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு நீதிமன்றத்திடம் அனுமதி கோரப்படவுள்ளது. இதற்கான நீதிமன்ற உத்தரவைப் பெற்றுக்கொள்வதற்கு பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இதேவேளை, இவ்வாண்டில் கடந்த மூன்று மாதங்களில் போதைப்பொருள் தொடர்பில் 22 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் நேற்று இந்த ஈரானியர் ஒன்பது பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேற்படி 22 பேருள் போதைப்பொருள் தொடர்பாக ஈரானிய பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜனவரி 31 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து “குஸ்” ரக போதைப்பொருள் 400 கிராம் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டது. 2018 இல் 41 பேரும் 2016 இல் 83 பேரும் போதைப்பொருள் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

2018 இல் பெருமளவு ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. இதற்கிணங்க கடந்த வருடம் 732 கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன் இவ்வருடத்தில் கடந்த மூன்று மாதங்களில் 840 கிலோவுக்கும் மேற்பட்ட போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேற்படி ஈரானியர்கள் 600 கிலோ போதைப் பொருட்களை கொண்டுவந்ததாகவும் அதில் 500 கிலோவை கடலில் வீசியெறிந்ததாகவும் தகவல்கள் வெளிவருகின்றனவே என பொலிஸ் ஊடகப் பேச்சாளரிடம் கேள்வி யெழுப்பியபோது அவ்வாறு இல்லையென்றும் அதற்கான தெளிவான தகவல்கள் எதுவும் கிடையாதென்றும் அவர் பதிலளித்தார். (ஸ)

(லோரன்ஸ் செல்வநாயகம்) 

Mon, 03/25/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை