மொசம்பிக் சூறாவளி, வெள்ளம்: உயிரிழப்பு 1000ஐ எட்ட வாய்ப்பு

மொசம்பிக்கை தாக்கிய பயங்கர சூறாவளி மற்றும் வெள்ளத்தினால் மரங்கள் மற்றும் கூரைகளுக்கு மேல் நிர்க்கதியாகி இருப்பவர்களை காப்பாற்ற மீட்பாளர்கள் காலத்துடன் போராடி வருகின்றனர்.

பெய்ரா நகரத்தில் ஏற்பட்டிருக்கும் அனர்த்தத்தால் ஒட்டுமொத்த கிராமங்கள் மூழ்கடிக்கப்பட்டும் பல சமூகங்கள் துடைத்தெறியப்பட்டுமுள்ளன.

இதில் மரத்தில் சிக்கி இருந்த பெண்கள் தமது குழந்தைகளை மீட்புப் படகுகள் மீது எறிந்த சம்பவங்கள் குறித்து மீட்பாளர்கள் விபரித்துள்ளனர். கழுத்துவரை நீரில் மூழ்கிய நிலையிலும் கணுக்கால் வரை நீர் இருக்க துண்டு நிலத்தில் சிக்கியவர்களும் மீட்கப்பட்டுள்ளனர்.

இடாய் சூறாவளி கடந்த வாரம் பெய்ரா நகரை மணிக்கு 170 கிலோமீற்றர் வேகத்தில் தாக்கியது. இதனைத் தொடர்ந்து சிம்பாப்வே மற்றும் மாலாவியை கடந்த இந்த சூறாவளியால் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டு மில்லியன் கணக்கான மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது.

தென் அரைக்கோளத்தை தாக்கிய காலநிலை தொடர்பான மிக மோசமான அனர்த்தமாக இது இருக்கக்கூடும் என்று ஐ.நா எச்சரித்துள்ளது. இதில் மொசம்பிக்கில் குறைந்தது 200 பேர் உயிரிழந்திருப்பதோடு சிம்பாப்வேயில் 98 பேர் பலியாகி இருப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். எனினும் மீட்புப் பணிகள் தொடரும் நிலையில் மேலும் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

உயிரிழப்பு 1000ஐ கடக்க வாய்ப்பு இருப்பதாக மொசம்பிக் ஜனாதிபதி பிலிப்பே நியுசி எச்சரித்துள்ளார்.

Fri, 03/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை