தரம் ஐந்து புலமைப்பரிசிலுக்கு ரூ.100 மில். ஒதுக்காதது ஏன்?

வெட்டுப்புள்ளியை குறைத்து கூடுதல் மாணவருக்கு உதவியிருக்கலாம்

தரம் ஐந்து புலமைப்பரிசிலுக்காக 100 மில்லியன் ரூபா ஒதுக்கியிருந்தால் மேலும் 20,000 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கி வெட்டுப்புள்ளியை 120 முதல் 125வரை குறைத்து இந்த பிரச்சினைக்கு ஓரளவு தீர்வு வழங்கியிருக்க முடியும் என ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் நளின் ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.  

2019 வரவு செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றிய அவர் ​மேலும் கூறியதாவது,  

5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை பிரச்சினை தொடர்பாகவும் எதுவும் குறிப்பிடப்படவில்லை. 168 வெட்டுப்புள்ளிகளை பெற்றாலே இந்தப் பரீட்சையில் சித்தியடைய முடியும். ஒரு பாடத்தில் 84புள்ளிகளை பெறாத பிள்ளையை மக்குப் பிள்ளையாக பெற்றோர் கருதுகிறார்கள்.இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் புலமைப்பரிசில் வழங்க நிதி ஒதுக்கப்படவில்லை. இதற்காக 100 மில்லியன் ரூபா ஒதுக்கியிருந்தால் தற்பொழுது வழங்கப்படும் 15,000புலமைப்பரிசில்களுக்கு மேலதிகமாக மேலும் 20,000 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்க முடியும். இதனூடாக வெட்டுப்புள்ளியை 120 முதல் 125வரை குறைக்கலாம். மக்கள் 2,000 பில்லியன் ரூபா வரி செலுத்துகையில் ஏன் இந்த நிதியை ஒதுக்க முடியாது.   

நாடு முழுவதும் 5வீதமான மக்களுக்கு கழிப்பறை வசதி கிடையாது. ஹம்பாந்தோட்டையில் 10வீதமானவர்களுக்கு இந்த வசதி இல்லை.அடிப்படை வசதிகளில் ஒன்றான கழிப்பறை வசதி கூட 5வீதமான மக்களுக்கு கிடைக்கவில்லை.

ஒரு வீதமான மக்களுக்கு கழிப்பறை வசதி கிடையாது என அமைச்சர் ரவூப் ஹக்கீம் 2017இல் கூறியிருந்தார்.

ஆனால் 2012 புள்ளிவிபரவியல் மதிப்பீட்டில் 87,000 குடும்பங்களுக்கு கழிப்பறை வசதி கிடையாது என அறிவிக்கப்பட்டது. வீடமைப்பு அமைச்சின் புள்ளிவிபரங்களின் படி 94,000குடும்பங்களுக்கு இந்த வசதி இல்லை. ஆனால் 2இலட்சத்து 64,000குடும்பங்களுக்கு இந்த வசதி இல்லை என நிதி அமைச்சர் கூறினார்.

வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாஸவின் மாவட்டத்தில் 10 வீதமானவர்களுக்கு கழிப்பறை வழங்கப்படவில்லை. கடந்த ஆட்சியிலும் இந்த குறைபாடு தீர்க்கப்படவில்லை.

(ஷம்ஸ் பாஹிம்,  மகேஸ்வரன் பிரசாத்)  

Fri, 03/08/2019 - 08:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை