அம்பாறை மாவட்ட படைப் புழு தாக்கம்; முதற்கட்டமாக ரூ.1 கோடி 64 இலட்சம்

200 விவசாயிகளுக்கு காசோலை கையளிப்பு

படைப் புழுவின் தாக்கத்தால்  சேதமடைந்த ​அம்பாறை மாவட்ட சோள விவசாயிகளுக்கு நஷ்டஈடுகள் வழங்கப் படவுள்ளன. இதன் முதற்கட்டமாக இம்மாவட்டத்திலுள்ள 200 விவசாயிகளுக்கு  01 கோடியே 64 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, விவசாய, நீர்ப்பாசன, கிராமிய பொருளாதார அபிவிருத்தி மற்றும் மீன்பிடி அமைச்சர் பி. ஹரிசன் தெரிவித்தார்.  

2018/2019 பெரும் போகத்தில் அம்பாறை மாவட்டத்தில் படைப்புழுக்களின் தாக்கத்தினால் பாதிப்புக்குள்ளான சோளப் பயிர்ச் செய்கை விவசாயிகளுக்கு முதற்கட்ட நஷ்டஈடு வழங்கும் வைபவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) அம்பாறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.  

அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல். பண்டாரநாயக்கா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர் பி. ஹரிசன் தொடர்ந்து உரையாற்றியதாவது; 

முதன் முதலாக அம்பாறை மாவட்டம் தெரிவு செய்யப்பட்டு பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்குவதற்கு ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், அமைச்சர் தயா கமகேவுக்கும் நன்றி பாராட்டுகின்றேன்.   அம்பாறை மாவட்டத்தில் மாகா போக நெல் கொள்வனவுக்கு 10 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  

நாடு நெல் கிலோ 38 ரூபாவாகவும், சம்பா கிலோ 41 ரூபாவாகவும், விலை நிர்ணயிக்கப் பட்டுள்ளது. பொலநறுவையில் 27 நெல் களஞ்சியசாலைகள் இரண்டு வாரத்துக்குள் திறக்கப்பட்டுள்ளன.  

அதிக விலைக்கு நெல்லை வாங்கினோம் அதனால் அரிசியின் விலையை கூட்டியுள்ளோமென விவசாயிகள் கூறுகின்றனர். நாங்கள் விவசாயிகளையும், அரிசி ஆலை உரிமையாளர்களையும், வியாபாரிகளையும் அழைத்து ஒரு முடிவுக்கு வந்துள்ளோம். ஆனால் தீர்மானித்த விலையை விட வியாபாரிகள் நெல்லின் நிர்ணய விலையை நிர்மாணிக்க முடியாது.  

படைப் புழு தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும், கவனத்திற்கு கொண்டுவந்ததையடுத்து நாங்கள் படைப் புழுவைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக நடவடிக்கையை எடுத்திருந்தோம்.  

சேனா புழு தொடர்பாக முதன் முதலில் தெரியப்படுத்தியது ஊடகவியலாளார்களே. விவசாயிகளுக்கு இயற்கை அனர்த்தத்தின் போது நிவாரணம் வழங்கினோம். எனினும் இது புது விடயம் என்பதால் பாராளுமன்ற அறிக்கை மூலம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனடிப்படையில் அம்பாறை மாவட்டத்தை தெரிவு செய்தோம்.  

இந் நிகழ்வில் அமைச்சர் தயா கமகே, பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.எம். இஸ்மாயில், சிறியானி விஜயவிக்ரம ஆகியோர் கலந்து கொண்டனர். 

(ஒலுவில் விசேட நிருபர்)

Tue, 03/12/2019 - 15:19


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை